Monday 15 August, 2016

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (26) மயில்

நம் இந்திய நாட்டின் தேசீயப் பறவை மயில்.  இதற்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர் ‘Pavo cristatus’ என்பதாகும்.



பறவைகள் அனைத்திலுமே பார்க்க மிக மிக அழகானது மயில். அது தன் மின்னும் நீலப் பச்சை வண்ணத்திலும் சரி, தோகை விரித்தாடும் அதன் நடன நளினத்திலும் சரி ஈடு இணையற்ற ஒரு பறவை.

ஆணும் பெண்ணும் வண்ணத்தில் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருக்கும்.  ஆனால் ஆண் பறவைக்கு மட்டும் தான் தோகை உண்டு.  தோகை என்பது வால் சிறகுகளின் மேல் வளரும் குச்சி போல் சுமார் இரெண்டடி முதல் மூன்றடி வரை நீளமுள்ள இறகுகள்.  இந்தத் தோகை இறகுகளில் தான் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் மயில் கண்கள் இருக்கும்.  இந்தக் கண்கள் வண்ண மிக்க மெல்லிய சிறகுகளால் ஆனவை.  தோகை விரித்தாடும்போது இந்தக் கண்கள் ஆங்காங்கே மிக அழகாகத் தெரியும்.









வால் சிறகின் மேல் வளர்ந்துள்ள தோகை இறகுகள்

நம் அனைவர் மனத்தையும் கவரும் கண்ணன் என்றவுடன் நமது
நினைவுக்கு வருவது அவன் தலையை அலங்கரிக்கும் அழகிய மயில் கண் கொண்ட இறகுகள்தானே.

         

மயில் ஆடுவது நாம் பார்த்து ரசிப்பதற்காக அல்ல.  அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய காலத்தில் துணைதனை வசியம் செய்வதற்காக ஆடுகிறது.

ஆண் மயில் ஆடும்போது அதன் பின்னே சாதாரணமாக நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் சிறகுகளை விரித்துக் கொண்டு மெதுவாக இப்படியும் அப்படியுமாகத் திரும்பும் வகையில் சிறு அடிகளை எடுத்து வைக்கும்.  அவ்வப்போது தன் தோகை சிறகுகளை பட பட வெனத் துடிப்பது போல ஆட்டும்.  இது கணகளுக்கு விருந்தாக இருக்கும்.

கண்களுக்கு விருந்தளிக்கும் மயிலின் குரலோ காதுகளுக்கு மிக நாராசமான ஒன்று.  காடுகளில் அதிகாலையில் மே..யாவ் மே..யாவ் என மயில் கத்துவது காட்டையே அதிர வைக்கும். இவை அதிகாலையில் மட்டும் கத்தும் என்பதில்லை.  புலி சிறுத்தை போன்ற மிருகங்கள் பதுங்கிப் பதுங்கி புதர்களில் மறைந்து செல்லும்போது மயில்கள் அவற்றுக்கு மேலாக மரத்துக்கு மரம் பறந்து சென்று மே..யாவ் மே..யாவ் என்று கத்தி மற்ற மிருகங்களுக்கு புலி சிறுத்தை பற்றித் தகவல் அறிவிக்கும்.

மயில் கூட்டம் கூட்டமாக வசிக்கும் ஒரு பறவை.  ஒரு கூட்டத்தில் ஒரு ஆணும் நான்கைந்து பெண் பறவைகளுமாக வாழும்.  முற்றிலும் வளர்ச்சியடையாத பறவைகள் ஒரே இனக் கூட்டங்களாக வசிப்பதும் உண்டு.

மயில், புதர்கள் அடியே சிறிய பள்ளம் செய்து அதில் சுள்ளிகள் இலைகள் இவற்றைச் சேர்த்து திறந்த கூடமைத்து அதில்  ஒரு கிண்ணப் பாலிலே இரண்டு சொட்டு காப்பிக் கஷாயம் விட்டது போன்ற வெளிர் பழுப்பு நிறத்தில் மூன்று முட்டைகளை இடும்.  முட்டைகளை அடை காப்பது பெண் மயிலே.

மயில் தரையில் தன் உணவைத் தேடும். உண்பது தானியங்கள், புழு, பூச்சிகள், பல்லி, ஓணான், பாம்பு எனப் பல வகையாகும்.

இந்துக்கள் வணங்கும் முருகக் கடவுளின் வாகனம் மயில்.

உலகப் புகழ் பெற்ற ராஜா ரவி வர்மா அவர்கள் வரைந்த இந்த முருகன் படத்தைப் பாருங்கள். மயிலின் கால் விரல்களின் பிடியில் பாம்பு.





மயிலினத்தில் மற்றொரு வகையும் உண்டு.  அதன் நிறம் பால் வெள்ளை.



வெள்ளை மயில்
மயில் இந்தியாவின் தேசீயப் பறவை. அப்படி இருந்தும் மயிலைக் கொல்பவர் அனேகம்.  மயிலுக்கு முதல் எதிரி அதன் அழகிய தோகைப் பீலிகள்.  இதை வைத்து கை விசிறிகள் தயாரிக்க பலர் மயில்களைக் கொல்கின்றனர்.  இரண்டாவது எதிரி இதன் ரத்தத்திலிருந்து தயாரிக்கப் படும் தைலமும் மயில் உடல் கொழுப்பும் பல வியாதிகளுக்கு மருந்து என நாட்டில் பரவியுள்ள தவறான நம்பிக்கைகள்.  மயில்கள் அழிவதை நாம் தடுக்கவில்லை என்றால் அடுத்த சந்ததியினர் இவ்வளவு அழகிய ஒரு பறவையை படங்களில் தான் பார்க்க வேண்டி வரும்.

இந்திய மயிலுக்கு நீல மயில் என்றொரு பெயரும் உண்டு.  காரணம் இதன் நிறம் மின்னும் நீலப் பச்சை.  இந்தொனேசியா, பர்மா இங்கெல்லாம் காணப்படும் மயில் பச்சை வண்ணம் கொண்டது என்பதால் அது பச்சை பயில் என்றழைக்கப் படுகிறது.
வெள்ளை மயில் வெள்ளைப் புலி போன்று நீல மயிலின் மறுவிய தோற்றமே என்றெண்ணப் படுகிறது.

நீல மயிலினை ஒரே கூண்டில் நான்கைந்து மயில்களை ஒன்றாக வைத்து வளர்க்க முடியும்.  பச்சை மயிலை அவ்வாறு வளர்க்க முடியாதாம்.  காரணம் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு இறந்து விடும் என்பதாம்.

ஒன்றுபோல் காணப் பட்டாலும் அவற்றுள் தான் எத்தனை வித்தியாசம்!


இயற்கையின் எழிலில் நீ எப்படியெல்லாம் எங்களுக்கு காட்சி தருகின்றாய் இறைவா!

(படங்கள் அனைத்தும் இணைய தளங்களில் இருந்து)


நடராஜன் கல்பட்டு




Saturday 14 March, 2015

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்  (25) ஸால்மன் மீன்கள்

“பறவைகள் மட்டும் தான் வலசை போகின்றனவா? என்றால், “இல்லை என்பார்கள் விஞானிகள்.  காரணம் சால்மன் என்ற ஒரு வகை மீனும் வலசை போகின்றன,  ஆனால் தன் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே.

இயற்கையின் எழில் நமக்களிக்கும் பல விந்தைகளில் ஒன்று ஆங்கிலத்தில் ஸால்மன்’ (Salmon) என்றழைக்கப் படும் மீன்கள்.
சால்மன் மீன்                                                                       (http://en.wikipedia.org/wiki/Image:Oncorhynchus_keta.jpeg)


இந்த மீன்கள் வாழ்வது உப்பு நீர் கொண்ட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் சமுத்திரங்களில்.  ஆனால் இவை பிறப்பதோ வட அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நதியிலும் அதன் உப நதிகளிலும் மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் உள்ள நதிகளிலும் ஆகும்.

மீன் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்த பின் முழு வளர்ச்சி அடய சுமார் ஒன்று முதல் மூன்றாண்டுகள் எடுத்துக் கொள்கின்றன.   பின்னர் அவை கடலை நோக்கித் தன் பிரயாணத்தைத் தொடங்கும்.  அவ்வாறு பயணிக்கும் போது அவை சில காலம் சற்றே உப்பு நீராலான இடங்களில் (in brackish waters) வசிக்கும்.  அந்த நாட்களில் அவற்றின் உடலில் நல்ல தண்ணீரில் பிறந்த அவை உப்பு நீரில் வாழ்வதற்கான மாற்றங்கள் ஏற்படுகின்றன.  கடலை அடைந்த ஸால்மன் மீன்கள் சுமார் நன்கு ஐந்து ஆண்டுகள் பல ஆயிரம் மைல்கள் கடலில் சுற்றித் திரிகின்றன.

கடல் வாழ்க்கை முடிந்ததும் (அலுத்ததும்???) ஸால்மன் மீன் தான் பிறந்த இடத்திற்கே திரும்புகிறது.  திரும்பியதும் ஆற்றில் தனது வால் செதிள்களால் சிறு பள்ளம் தோண்டி பெண் மீன் அதில் சுமார் ஐயாயிரம் முட்டைகளை இடும்.  கூடவே நீந்திக் கொண்டு இருக்கும் ஆண் மீன் தனது விந்துக்களை அந்த முட்டைகளின் மீது தெளிக்கும்.  இது நடந்த பின் பெண் மீன் முட்டைகளை சிறு கற்களைக் கொண்டு மூடிவிடும்.  முட்டை இடும் வேலை நன்றே முடிந்த பின் சில நாட்களுள் தாயும் தந்தையும் இறந்து விடும்.

                                                      

பெரிது படுத்தப் பட்டுள்ள, ஸால்மன் மீன் முட்டைகள்
(http://en.wikipedia.org/wiki/Image:Salmoneggskils.jpg)

முட்டைகளிலிருந்து வெளி வரும் குஞ்சுகள் பிறந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முட்டைப் பைக்குள் மிச்சம் மீதம் இருக்கும் கருவினை உண்டு வாழும்.  அதன் பிறகு குஞ்சுகள் மெதுவாக சிறு சிறு நீர் வாழ் உயிரினங்களை உண்ண ஆரம்பிக்கும்.


                    முட்டையிலிருந்து வெளி வந்த மீன் குஞ்சு (பெரிதாக்கப் பட்ட படம்)
(http://en.wikipedia.org/wiki/Image:Salmonlarvakils.jpg)

ஸால்மன் மீன் பல ஆயிரம் முட்டைகளை இட்டாலும் அவற்றில் நூற்றுக்குத் தொண்ணூறு குஞ்சுகள் மீன் உண்ணும் கடல் வாழ் உயிர் இனங்களுக்கும், பறவைகளுக்கும், மனிதனுக்கும் இறையாகி விடுவதால் சுமர் பத்து சதவிகிதமே கடலைச் சென்று அடையும்.

முட்டை இடத் திரும்பும் மீன்கள் ஆற்று நீரின் வேகத்தினை எதிர்த்து, கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்திற்கு அந்த ஆறுகளில் ஒடும் நரில் நீந்தி தன் பிறந்த வீட்டினை அடைய வேண்டும்.

மனிதர்களின் மேம்பாட்டுக்காக ஆறுகளில் கட்டப்பட்ட அணைகள்
ஸால்மன் மீன்கள் எளிதாக நீந்தி தன் பிறந்த இடங்களுக்குப் போய்ச் சேர்வதில் தடங்கல் ஏற்படுத்தியதால் ஸால்மன் மீன்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.  மீன் பிடிப்பதை நம்பி வாழ்வோரின் வருமானமும் குறைய ஆரம்பித்தது.  முதல் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சிலர் ஸால்மன் மீன்கள் அணைகளைத் தாண்டி தன் பிறந்த வீட்டிற்குச் செல்வதற்காக மரக் கட்டைகளைக் கட்டி படிகள் அமைத்து அதன் வழியே கொஞ்சம் நீரைச் செலுத்தி மீன்கள் ஏறிச் செல்வதற்காக மாற்றுப் பாதை அமைத்தனர்.

சமீப காலத்தில் ஸால்மன் மீன்கள் ஏறிச் செல்வதற்காக அணைகளின் பக்கத்தில் சிமெண்ட் கான்க்ரீட்டால் ஆன படிக் கட்டுகளையே (Fish ladder) அமைக்க ஆரம்பித்துள்ளனர்.  இது மட்டும் அல்ல.  சில இடங்களில் மின்சாரத்தினால் இயங்கும் மீன் தூக்கிகளையும் (Elevators) அமைத்துள்ளனர்.

இவ்வாறெல்லாம் ஸால்மன் மீன்கள் பிறந்த வீடு செல்ல வழி அமைத்துக் கொடுப்பது முற்றிலும் வியாபார நோக்கினால் மட்டுமே என்றாலும் அவை ஸால்மன் மீன்கள் இவ்வுலகில் இருந்து மறைந்து விடாமல் இருக்க உதவுகின்றன.  இதோ ஒரு மீன் ஏணியைப் பாருங்கள்.


அணைக்கட்டின் பக்கத்தில் மீன்கள் ஏறிச்செல்ல மீன் ஏணி
(http://en.wikipedia.org/wiki/Image:John_Day_Dam_fish_ladder.jpg)

நம் நாட்டில் அணைக்கட்டுகளிலும் மதகுகளிலும் மீன்கள் அதி வேகமாக விழும் நீரை எதிர்த்துத் துள்ளிக் குதிப்பதை நாம் பார்க்கிறோமே. அவையும் தன் பிறந்த வீடுகளுக்குச் செல்லத் துடிக்கும் பெற்றோர்கள் தானோ?

பிள்ளை பெறப் பிறந்த வீடு திரும்பும் ஸால்மன் மீன்கள் பல ஆயிரம் மைல்கள் கடலில் சென்று பின் பிறந்த வீடு திரும்ப தனது மோப்ப சக்தியை உபயோகிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  பல ஆறுகளிலிருந்தும் நீர் கடலில் கலக்கின்றதே, அப்போது வாசனையும் கலந்து விடாதா?  அப்படி இருக்க பிறந்த வீட்டு நீர் வாசனை மீன்களுக்கு எப்படித் தெரிகின்றது?

இயற்கையின் எழிலில்தான் எத்தனை வினோதங்கள் வழியே நீ எங்களுக்குக் காட்சி தருகின்றாய் இறைவா!

                                            நடராஜன் கல்பட்டு

                                       (படங்கள் விகிபீடியாவிலிருந்து)

Friday 13 March, 2015

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (34) பறவைகளும் தற்கொலையும்

இந்தியாவின் அஸ்ஸாம் மானிலத்தின் வடக்கு கச்சார் மலைப் பகுதியில் உள்ள ஒரு கிராமம் ஜடிங்கா.  இக்கிராம வாசிகள் மழை நாட்கள் முடிந்து, மூடு பனி நிறைந்துள்ள சந்திரன் இல்லாத இரவில் (ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில்) விளக்குகளை வெளியில் ஏற்றி வைக்கின்றனர். அல்லது பந்தங்கள் ஏற்றி வைக்கின்றனர்.  இந்த வெளிச்சத்தைப் பார்த்து நூற்றுக் கணக்கில் பறவைகள் அங்கு வந்து கூடுகின்றன. 

பறவைகள் அப்படி வரும்போது, மது அருந்திய மனிதன் போலத் தடுமாறி, மரக்கிளைகளில் அடிபட்டுக் கீழே விழுகின்றன.  கிராம வாசிகள் அப்படி அடி பட்டு விழாத பறவைகளைத் தடி அல்லது உண்டிவில் கொண்டு அடித்து வீழ்த்துகின்றனர்.  இந்த நிகழ்ச்சியை சிலர் பறவைகள் தற்கொலை செய்து கொள்ள அங்கு வருகின்றன என்று சொல்வார்கள்.

வெகு காலம் வரை இது புரியாத புதிராக இருந்தது.  ஏன் இன்றும் கூடத்தான். 

பறவை நிபுணர்கள் டாக்டர் சாலிம் அலி, திரு சென்குப்தா போன்றவர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து ஆராய்ச்சிகள் நடத்தினர்.  அந்த ஆராய்ச்சிகளின் பலனாகக் கீழ்க் கண்ட விஷயங்கள் தெரிய வந்தன.
ஜடிங்காவுக்கு சுமார் 44 வகையான பறவைகள் வருகின்றன.  அவற்றுள் கரு மூக்கி அல்லது வெள்ளைக் கொக்கு, நொள்ள மடையான் அல்லது குருட்டுக் கொக்கு, தாழைக் கொக்கு, கருங்கொக்கு, மீன் கொத்திகள் அடக்கம்.  அவை அஸ்ஸாமில் எல்லா இடத்திற்கும் இப்படி வருவதில்லை.  சுமார் 200 மீடர் அகலமும், 1500 மீடர் நீளமும் உள்ள ஒரு பகுதிக்கு மட்டுமே வருகின்றன.  அப்படி வரும் பறவைகள் எல்லாம் அங்கேயே வாழ்ந்திடும் பறவைகள் அல்ல.  அவை எல்லாம் வலசை போகும் பறவைகள் (Migratory birds).  ஆனால் அப்பறவைகள் வெளி நாடுகளில் இருந்து வலசை வந்திடும் பறவைகள் அல்ல.  உள் நாட்டிலேயே புலம் பெயரும் பறவைகளே (Local migrants).

மீன் கொத்தி(White breasted king fisher) படம் இணைய தளத்தில் இருந்து

குருட்டுக் கொக்கு (Pond heron) – படம் சுதீர் ஷிவ்ராம்


கரு மூக்கி அல்லது வெள்ளைக் கொக்கு (Little egret)
படம் இணைய தளத்தில் இருந்து

அப் பறவைகள் தற்கொலை செய்து கொள்வதற்காக அங்கு வருபவை அல்ல.  மழை நின்று மூடு பனி சூழ்ந்த நிலையில் நிலவற்ற இரவில் அவை விளக்கு வெளிச்சத்தினை நோக்கிப் பறக்கின்றன.  ஆனால் இதில் என்ன ஒரு அதிசயம் என்றால் உலகின் பல பகுதிகளில் இதே வானிலைச் சூழலும், விளக்குகளும் இருந்தாலும் ஜடிங்காவுக்கு மட்டுமே இப்படிப் பறவைகள் வருவது தான்.

சில விஞ்ஞானிகள் அந்தப் பகுதியில் புவியின் காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு பறவைகளைக் குழம்பச் செய்திடுகிறதோ என்று நினைக்கின்றனர்.

எப்படியானால் என்ன?  பாவம் அந்தப் பறவைகள்.  அங்கு வந்து உயிரிழக்கின்றன.  விளக்குகளும் பந்தங்களும், நிலவற்ற மூடு பனி சூழ்ந்த இரவில், அங்கு ஏற்றி வைக்கப் பட்டிராவிட்டால் அந்தப் பறவைகள் அங்கு வந்திருக்குமா?  தங்கள் உயிரைத் தான் விட்டிருக்குமா?

 08-04-2011                                            நடராஜன் கல்பட்டு




Tuesday 25 March, 2014

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (34)  பச்சோந்தி



ஓணான், பல்லி, பாம்பு இனத்தைச் சேர்ந்த பச்சோந்தி ஒரு வினோதப் பிராணி.  இதைப்  பற்றிய சில தகவல்கள் இதோ. புத்தகத்தில் படித்தவை அல்ல.  நேரில் கண்டறிந்தவை.

பச்சோந்தி நிறம் மாறும் என்பது உண்மை.  ஆனால் நினைத்தபடி எல்லாம் அது இருக்கும் சுற்றுப் புரத்திற்கேப்ப நிறம் மாறும் என்பது தவறு.  சாதாரணமாக பச்சை நிறத்திலே சில சிறு கருப்புக் கட்டங்களுடன் காணப்படும் இது கொஞ்ச நேரத்திற்கு ஒரு தடவை நல்ல பச்சை நிறத்திலிருந்து, கரும் பச்சையாகவொ அல்லது வெளிர் பச்சையாகவோ மாறுகிறது.  அதன் மீதுள்ள கருப்பு புள்ளிகளோ கட்டங்களோ சற்றே மாறுகின்றன.

பச்சோந்திகளிடம் பல வியக்கத் தக்க விஷயங்கள் உள்ளன. அவை வருமாறு.

உருவத்தில் ஓணான் மாதிரித் தோன்றினாலும் இது ஓணான் போல வேகமாக ஓடக்கூடிய ஒன்றல்ல.  முன்னும் பின்னுமாக ஆடி ஆடி நிதானமாக ஒரு ஒரு அடியாக காலை முன் வைத்து நகரும்.

பச்சோந்திக்கு முதல் எதிரி காகம்.  பச்சோந்தியைக் கண்டால் விடாது.  கொன்று தின்றுவிடும்.  காகத்திடம் இருந்து தப்புவதற்குத் தான் இவை இருக்கும் தாவரங்களின் பச்சை நிறத்தையே இதற்கும் ஆண்டவன் கொடுத்திருக்கிறான். 

பச்சோந்தியின் கண்கள் இரண்டும் தனித் தனியே இயங்கக் கூடியவை.  ஒரு கண் முன்புறம் பார்க்கும் போது மற்றொன்றால் அது பின் புறம் பார்க்கும்.  அவ்வாறு பார்ப்பதை மாற்றிக் கொண்டே இருக்கும்.  கண்கள் ஒரு உருண்டையான தோல் பைக்குள் இருக்கும் சுமார் ஒன்று புள்ளி ஐந்து மில்லிமீடர் அளவிலான் சிறு ஓட்டை கொண்டதாக.  கண்களைத் தனித் தனியாக எல்லாப் பக்கமும் சுற்ற வல்லது பச்சோந்தி.

பச்சோந்தியின் வால் அதற்கு ஐந்தாவது கால்.  ஒரு குச்சியில் இருந்து மற்றொன்றுக்குத் தாவும் போது முதலில் உடலை கவிழ்த்து வைத்த ஆங்கில எழுத்து யூ போன்று வளைத்துக் கொண்டு முன்னங் கால்களைக் கொண்டு புதிய குச்சியைப் பிடிக்கப் பார்க்கும். எட்டவில்லை என்றால் முதுகை நிமிர்த்தி உடலை நீட்டி முன்னே உள்ள குச்சியைப் பிடிக்கப் பார்க்கும்.  அப்போதும் எட்ட வில்லை என்றால் தனது வாலை இருக்கும் குச்சியில் விஷ்ணுச் சக்கரம் போன்று சுருட்டிக் கொண்டு நான்கு கால்களையும் விட்டு விட்டு எட்டிப் பார்க்கும்.  மீண்டும் எட்ட முடிய வில்லையா?  விஷ்ணுச் சக்கரத்தினை மெதுவாகப் பிரித்து குச்சியை எட்டிப் பிடிக்கப் பார்க்கும்.  அப்பொதுகூட எட்ட வில்லையாபேசாமல் வாலை மீண்டும் விஷ்ணுச் சக்கரமாகச் சுருட்டி உடலை பின்னே இழுத்து வந்த வழியெ திரும்பி விடும்.


விஷ்ணுச் சக்கர வாலையும் கால் விரல்களையும் கண் அமைப்பினையும் பாருங்கள்

பச்சோந்தியின் நாக்கு கிட்டத் தட்ட அதன் உடல் நீளத்திற்கே ஆனது.  வேண்டும்போது நீட்டி முன்பக்கமாக சாட்டை போல வேளியே மின்னல் வேகத்தில் தள்ளி பசை கொண்ட நுனி நாக்கால்  அதற்கு மிகவும் பிடித்த உணவான ஈ மற்றும் சிறு புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்னும்.  நாக்கு ஒட்டிக் கொண்டிருப்பதும் அடி வாயில் அல்ல.  நுனி வாயில்.

பச்சோந்தியின் முன்னங் கால்களில் வெளிப்புறம் இரெண்டும் உட்புறம் மூன்றுமாக ஊள்ள நகங்கள் பின்னங் கால்களில் வெளிப் புறம் மூன்றும் உட்புறம் இரெண்டுமாக இருக்கும்.

இப்படிப் பல வியக்கத் தக்க விநோதங்களை பச்சோந்திக்கு அதன் வாழ்க்கைக்கேற்ப அளித்திருக்கிறான் ஆண்டவன்.

பச்சோந்தி நல்ல பாம்பு போன்று விஷம்கொண்டது என்பர் சிலர்.  இது முற்றிலும் தவறான ஒரு கருத்து.  கொல்லப்படவிருந்த ஒரு பச்சோந்தியை காப்பாற்றும் பொருட்டு அதன் வாய்க்குள் என் விரலை விட்டிருக்கிறேன்.  அதுவும் நன்றாகக் கடித்தது.  ஆனால் இன்றும் நான் உயிருடன் தான் இருக்கிறேன்.  அந்தப்  பச்சோந்தியும் அன்று பிழைத்தது. 
            

ஆமை வேகத்தில் நகரும் பச்சோந்தி

பச்சோந்தி என்றால் பச்சையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.  வேறு நிறங்களிலும் இருக்கலாம். அடுத்து வரும் படங்களைப் பாருங்கள்.



இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனை நீங்கள் நிச்சயம் காண்பீர்கள்.

                                            நடராஜன் கல்பட்டு


                                                      ( வண்ணப் படங்கள் மட்டும் கூகுகிள் இணய தளத்திலிருந்து )


Sunday 9 March, 2014

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (33)
இறைவன் படைத்த ஹெலிகாப்டர்கள்


மேலெழும்ப, கீழிறங்க, முன்னே செல்ல, பின்னே செல்ல, ஒரே இடத்தில் பறந்திட என்று பல வேலைகளையும் செய்திட மனிதன் படைத்தான் ஹெலிகாப்டர்களை இன்று. 

என்றோ படைத்திட்டான் ஹெலிகாப்டரை இறைவன்.

பறவைகளில் தேன் சிட்டு, அமெரிக்காவின் ஹம்மிங் பேர்ட், பூச்சிகளில் தும்பி, தேனீ, பம்பிள் பீ என்னும் கரி வண்டு இவை எல்லாமே ஹெலிகாப்டரைப் போல மேலெழும்பவோ, கீழிறங்கவோ, முன் செல்லவோ, பின் செல்லவோ, பக்க வாட்டில் திரும்பவோ, ஒரே இடத்தில் பறக்கவோ முடிந்த உயிரினங்கள்.

தேன் சிட்டு
                              

      ஹம்மிங் பேர்ட்

தும்பி

தேனீ

கரி வண்டு (Bumble bee)

சில தாவரங்களின் விதைகளும் காற்றில் பறந்து செல்லும் தன்மை உடையவை.   ஆனால் அவை தானாகப் பறந்திடுவதில்லை.  காற்று வீசிடும் திசையில் எல்லாம் அவையும் பறந்து சென்று, பின் தரையை அடைந்து தக்க தருணம் வரும் போது புதிய செடியாக முளைத்திடும்.  உதாரணத்துக்கு இலவம் பஞ்சு, எருக்கு, கைரோகார்பஸ் என்றழைக்கப் படும் மரம் இவற்றின் விதைகள் காற்றின் உதவி கொண்டு பறந்து செல்லும்..


எருக்கஞ்செடியின் விதை.  காற்றில் பறந்து செல்லும் இதை தாத்தா பூச்சி என்போம். 

   
      கைரொகர்புஸ் விதை       


 
மரத்தில் இருந்து விழும்போது கைரொகார்பஸ் விதை பறந்து செல்லும் அழகினைப் பார்க்க கீழுள்ள இணைப்பிற்குச் சென்று பார்க்கவும்..
இயற்கையில் தான் எத்தனை வினோதங்கள்!

(கருப்பு வெள்ளை படம் மட்டும் எடுத்து நடராஜன் கல்பட்டு.  மற்றவை இணைய தளங்களில் இருந்து)

நடராஜன் கல்பட்டு


Friday 18 October, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (32) அழகே யமனாய்

சில விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அவற்றின் அழகான உடல் உறுப்புகளே யமனாகி விடுகின்றன.  அவற்றில் சில வற்றைப் பார்ப்போமா?
மனித வர்க்கத்தின் செயல்களால் இந்த உலகில் இருந்து பல விலங்குகளும் பறவைகளும் மறைந்து விட்டன.  விவரம் தெரிந்து முற்றிலுமாக முதல் முதலாய் மறைந்த பறவை டோடோ என்னும் பறவை.
டோடோ


மொரீஷியஸ் தீவில் மனித நடமாட்டம் இன்றி இருந்த நாட்களில் மிக அதிக அளவில் வாழ்ந்த ஒரு பறவை இனம் இது.  சுமார் மூன்றடி உயரமும் 20 முதல் 25 கிலோ வரையான எடையும் கொண்ட இப் பறவை புறா இனத்தைச் சேர்ந்து.
இறக்கையென ஒரு உறுப்பு இருந்தும் பறக்க முடியாத பறவை இது.  ஒரு காலத்தில் இந்தப் பறவைக்கு எதிரிகள் யாரும் இருக்கவில்லை.  இதன் மாமிசம் உண்ண லாயக்கற்றதாக இருந்ததாம்.  ஆனாலும் மொரீஷியஸ் வழியே கப்பல்களில் சென்ற மாலுமிகள் அதன் சுருள் சுருளான சிறகுகளுக்காக அவற்றை ஒரு தடி கொண்டு அடித்துக் கொன்றனராம்.  தன்னை அடிக்க வருகிறானே என்று அந்தப் பறவையும் ஓடித் தப்பீக்காது.  அருகில் நின்றிருக்கும் மற்றப் பறவைகளும் ஓடித் தப்பிக்காமல் அசடுபோல் அங்கேயே நின்று கொண்டு வேடிக்கை பார்த்திருக்கும்.  அடுத்து அதன் உயிர் போகும் என்பது தெரியாது அதற்கு.
பின் நாட்களில் மக்கள் அத்தீவில் குடியேறிய போது அவர்களுடன் வந்த பூனை, நாய் போன்ற மிருகங்கள் எஞ்சி இருந்த டோடோக்களை முற்றிலுமாக அழித்தன.
யானை
யானையின் தந்தம் அதற்கு மிகவும் உபயோகமான ஒரு உறுப்பு.  மரப் பட்டைகளைக் கிழித்தெடுக்க, தன்னைத் தாக்க வந்திடும் புலி சிங்கம் போன்றவற்றோடு போராட என பலவிதத்திலும் அதற்கு உதவிடும் ஒன்று. 


அழகிய தந்தம் கொண்ட யானை – படம் சுதீர் ஷிவராம்

அதே தந்தம், சந்தனக் கட்டை போல, நுணுக்கமான வேலைப் பாடுகள் உடைய சிற்பக் கலைப் பொருட்களைத் தயார் செய்வதற்கு உபயோகப் படுத்த ஏற்றதாக உள்ளது.  தந்தத்தினை எடுப்பதற்காக யானையைக் கொல்கின்றனர்.  அதனால் யானையின் தந்தமே அதற்கு யமன் ஆகிறது.


தந்தச் சிற்பம் – சீனர்களின் கைத்திறன்

நம் நாட்டில் சட்டம் இருக்கிறது யானைகளைக் கொல்லக் கூடாது என்று.  இருந்தாலும் அவ்வப்போது நாம் பத்திரிகைகளில் படிக்கிறோம் கொல்லப் பட்ட யானைகளின் தந்தங்கள் அறுக்கப் பட்ட நிலையில் அவற்றின் சடலங்கங்கள் காடுகளில் தென்படுவதைப் பற்றி.  சட்டமிருந்து என்ன பயன்.  சட்டத்தை மதிப்பவர்கள் இருந்தால் தானே?
புலி
புலி ஒரு கம்பீரமான தோற்றம் கொண்ட விலங்கு.  அதன் மஞ்சளில் கருப்பு வரிகள் கொண்ட தோல் அதற்கு அழகு சேர்க்கிறது.


புலி – படம் ஹிந்து நாளிதழில் இருந்து

புலியின் தலையும் தோலும் சொகுசு மாளிகைகளில் தரை விரிப்பாயும், சில ஆன்மீக வாதிகளுக்கு ஆசனமாயும் மாறுகிறது.  அதன் கூரிய நகங்களோ சிலருக்கு கழுத்தில் ஆபரணமாய்த் தொங்குகிறது.



புலித் தோல் தரை விரிப்பாய் 


புலி நகங்கள் ஆபரணமாய்

மான்

மான் ஒரு அழகான பிராணி.  அது தன் கொம்புகளோடு நம்மை நிமிர்ந்து பார்த்திடும் அழகே தனி


ஆண் புள்ளி மான் – படம் சுதீர் ஷிவ்ராம்

கொம்புகளோடு அழகாய்த் தோன்றிடும் இதன் தலையை சுவற்றில் மாட்டித் தங்கள் வீட்டிற்கு அழகு சேர்ப்பதற்காகவும், தரையில் இதன் தோலை விரித்து அதன் மீதமர்வதற்காகவும் இந்த மான் கொல்லப் படுகிறது.


மான் தலை வீட்டின் சுவற்றை அலங்கரிக்க

பாம்பு

பாம்பின் தோல் பார்க்க மிக அழகான ஒன்று.


நல்ல பாம்பு



பவழப் பாம்பு

பாம்புகளின் தோலை உரித்துப் பதப் படுத்தி கைப் பைகள், இடுப்பிற்கு பெல்டுகள் என்று தயாரித்து விற்கின்றனர்.





பாம்புத் தோலால் ஆன பெண்கள் கைப் பையும் இடுப்பு பெல்டும்

பாம்புத் தோல் உலகளாவிய ஒரு பெரிய வியாபாரம்.  இதற்காக பல பாம்புகள் கொல்லப் படுகின்றன.
இந்தக் கொடுமைகளுக்குப் பறவைகளும் விதி விலக்கல்ல.

மயில்
மயில் ஒரு அழகான பறவை.  அது நம் நாட்டின் (இந்தியாவின்) தேசீயப் பறவை. 

மயில்
தேசீயப் பறவைதான்.  கொல்லக் கூடாது தான்.  ஆனாலும்…………………………
அதன் அழகிய தோகையே அதற்கு யமன்.  அழகிய “மயில் கண்கள்” கொண்ட அதன் தோகை சிறகுகளுக்காக மயில்கள் கொல்ல படுகின்றன.



மயிலின் தோகை இறகுகள்


நெருப்புக் கோழி
பறவைகளில் மிகப் பெரியது நெருப்புக் கோழி.  இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாத பறவை இது.


நெருப்புக் கோழி
நெருப்புக் கோழியின் வெண் சிறகுகள் மிகவும் மிருதுவானவை.  சற்றே நீண்டிருக்கும்.  இவற்றை மேல் நாட்டுப் பெண்கள் தங்கள் தலைகளில் அணிந்திடும் தொப்பிகளை அலங்கரிக்க உபயோகிக்கின்றனர்.


சீமாட்டியின் தலையில் உள்ள தொப்பியில் நெருப்புக் கோழியின் சிறகுகள்

இன் நாட்களில் நெருப்புக் கோழிகள் அதன் மாமிசத்திற்காகவும் மிருதுவான சிறகுகளுக்காகவும் பண்ணைகளில் வளர்க்கப் படுகின்றன.

பெரிய வெண் கொக்கு (Large egret)


பெரிய வெண் கொக்கு – படம் சுதீர் ஷிவராம்
பாலின் நிறம் கொண்ட வெண் கொக்கு பார்க்க மிக அழகான ஒரு பறவை.  ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் காத்திருக்க வேண்டுமா அல்லது ஒற்றைக் காலில் தவம் செய்திட வேண்டுமா?  இவற்றைச் செய்திட கொக்குக்கு இணை யாரும் இல்லை.
இனப் பெருக்கக் காலத்தில் இந்தக் கொக்கின் உடலில் புதிதாக நுண்ணிய நீண்ட சிறகுகள் முளைக்கும்.  இந்த நீண்ட சிறகுகளும், மற்றும் உடல் பூறாவும் உள்ள சிறகுகளும் மிக மிக மிருதுவானவை.  நீண்ட சிறகுகள் ஆடை அலங்காரப் பொருளாகவும், மிருதுவான மெத்தைகள் தயாரிப்பதற்கும் உபயோகப் படுத்தப் படுகின்றன.



வெண் கொக்கு சிறகு மெத்தை


இறகுகளால் சிகையலங்காரம்


தலைப்பாகையில் சிறகுகள்

இறைவன் தந்துள்ளான் பறவைகளுக்கும் விலகுகளுக்கும் அழகான மற்றும் அவற்றுக்குத் தேவையான உறுப்புகளை.  அவ்வுறுப்புகளே அவற்றுக்கு யமனாகி விடுகின்றன மனிதனின் பேராசையால்.

(கருப்பு வெள்ளை படம் க.ந.நடராஜன்.  மற்ற படங்கள் இணைய தளங்களில் இருந்து)
10-4-2011                                          நடராஜன் கல்பட்டு