ஆண் குயில்
குயில் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அதன் குரல்தான். ஆனால் அந்தக் குயிலுக்குள் ஒரு குள்ள நரித் தனம் ஒளிந்திருப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும் ?
மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும்.
பெண் குயில்
சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும்.
சூதறியாத காகம் குயிலின் முட்டையயும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.
ஓன்று கவனித்திருக்கிறீர்களா? குயில் சாதாரணமாக அதிகாலையிலும் மாலையிலும் கூவும். அப்போது முதலில் ஒரு குயில் கூவும். அதைக் கேட்டு மற்றொரு குயில் சற்று தூரத்தில் இருந்து தன் குரல் எழுப்பும். இதைக் கேட்ட மூன்றாவது குயில் இன்னும் கொஞ்ச தூரத்திலிருந்து பாட ஆரம்பிக்கும். பின் முதல் குயில் மீண்டும் தன் குரலை எழுப்பும். இப்படியே பந்தயங்களில் - ரிலே ரேஸ் என்பார்களே - அதுபோல பல குயில்கள் சேர்ந்து தங்களது இசைக் கச்சேரியை நடத்தும்.
செவிலித் தாய் தந்தை காகமல்லாது வேறு ஏதாவது சிறு பறவையாக இருந்தால் குயில் குஞ்சு வளர வளர செவிலிகளின் உண்மைக் குழந்தைகள் நசுங்கியே இறந்துவிடும். சிலசமயம் உணவளிக்கும் சிறு பறவை குயில் குஞ்சின் மீதே வந்திறங்கி உணவளிக்கும்.
தாய் சிறிது சேய் பெரிது
குயில்களில் பல வகை உண்டு. குரல் கேட்டு நாம் மகிழும் குயில் ஒன்று. இது கொஞ்சும் குயில் என்றால் மற்றொரு குயிலின் பெயர் கெஞ்சும் குயில் (Plaintive cuckoo).
“அக்கூ ... அக்கூ ...” என்று கூவும் இப்பறவையை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தன் அக்காவை நினைத்து அழுவதாக நம்பும் நம் மக்கள் இதனை அக்கூ பக்ஷி என்றழைப்பார்கள்.
அக்கூ பக்ஷி
கொண்டைக் குயில்
‘பைடு க்ரெஸ்டெட் குக்கூ’ என்றொரு குயில் உண்டு. இது கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் கொண்டை போன்று சில சிறகுகள் இருக்கும் இப் பறவைக்கு.
மரங்கள் அடர்ந்த கிராமப் புறங்களில் வேறு ஒரு குயிலினைக் காணலாம். அதன் பெயர் என்ன தெரியுமா ?
(மூளைக் காய்ச்சல் பறவை )
அதன் பெயர் வேட்டையாடும் குயில் அல்லது மூளைக் காய்ச்சல் பறவை (Hawk cuckoo or the Brain fever bird). இதற்கு இப்பெயர் வரக் காரணம் இது எழுப்பும் ஒலிதான். இது கத்தும் போது, “ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்....” என்பது போலக் கத்தும். அவ்வாறு கத்தும்போது இப்பறவை தன் ஒலி அளவு, ஸ்தாயி (volume and pitch) இரண்டையும் உயர்த்திக் கொண்டே போகும். பிறகு சட்டென்று நிறுத்தி விட்டு சில நிமிஷ இடைவெளிக்குப் பின் மறுபடி முதலிலிருந்து தொடங்கும்.
சாதாரணமாக ரோமம் அடர்ந்த ( Hairy caterpillars ) கம்பளிப் பூச்சியை பறவைகள் உண்ணாது. காரணம் உங்களுக்கே தெரியும். தப்பித் தவறி நம்மேல் பட்டு விட்டால் எப்படி அரிக்கும் உடல் பூராவும் ? ஆனால் இந்தப் பறவையோ கம்பளிப் பூச்சியயை சர்வ சுதந்திர மாக உண்ணும். (இதை நேரில் பார்த்து ஆச்சரியப்படும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு முறை கிட்டியது.)
குரல் இனிமை படைத்த இசை பாடும் குயில். இந்தக் குயிலில் தான் எத்தனை விந்தைகளை வைத்திருக்கிறான் இறைவன் !
நடராஜன் கல்பட்டு
(வண்ணப் படங்கள் கூகிள் மற்றும் விகிபீடியா இணய தளங்களிலிருந்து)