Thursday, 14 March, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (26) மயில்

நம் இந்திய நாட்டின் தேசீயப் பறவை மயில்.  இதற்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர் ‘Pavo cristatus’ என்பதாகும்.



பறவைகள் அனைத்திலுமே பார்க்க மிக மிக அழகானது மயில். அது தன் மின்னும் நீலப் பச்சை வண்ணத்திலும் சரி, தோகை விரித்தாடும் அதன் நடன நளினத்திலும் சரி ஈடு இணையற்ற ஒரு பறவை.

ஆணும் பெண்ணும் வண்ணத்தில் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருக்கும்.  ஆனால் ஆண் பறவைக்கு மட்டும் தான் தோகை உண்டு.  தோகை என்பது வால் சிறகுகளின் மேல் வளரும் குச்சி போல் சுமார் இரெண்டடி முதல் மூன்றடி வரை நீளமுள்ள இறகுகள்.  இந்தத் தோகை இறகுகளில் தான் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் மயில் கண்கள் இருக்கும்.  இந்தக்கண்கள் வண்ண மிக்க மெல்லிய சிறகுகளால் ஆனவை.  தோகை விரித்தாடும்போது இந்தக் கண்கள் ஆங்காங்கே மிக அழகாகத் தெரியும்.


வால் சிறகின் மேல் வளர்ந்துள்ள தோகை இறகுகள்

நம் அனைவர் மனத்தையும் கவரும் கண்ணன் என்றவுடன் நமது
நினைவுக்கு வருவது அவன் தலையை அலங்கரிக்கும் அழகிய மயில் கண் கொண்ட இறகுகள்தானே.



மயில் ஆடுவது நாம் பார்த்து ரசிப்பதற்காக அல்ல.  அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய காலத்தில் துணைதனை வசியம் செய்வதற்காக ஆடுகிறது.

ஆண் மயில் ஆடும்போது அதன் பின்னே சாதாரணமாக நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் சிறகுகளை விரித்துக் கொண்டு மெதுவாக இப்படியும் அப்படியுமாகத் திரும்பும் வகையில் சிறு அடிகளை எடுத்து வைக்கும்.  அவ்வப்போது தன் தோகை சிறகுகளை பட பட வெனத் துடிப்பது போல ஆட்டும்.  இது கணகளுக்கு விருந்தாக இருக்கும்.

கண்களுக்கு விருந்தளிக்கும் மயிலின் குரலோ காதுகளுக்கு மிக நாராசமான ஒன்று.  காடுகளில் அதிகாலையில் மே..யாவ் மே..யாவ் என மயில் கத்துவது காட்டையே அதிர வைக்கும். இவை அதிகாலையில் மட்டும் கத்தும் என்பதில்லை.  புலி சிறுத்தை போன்ற மிருகங்கள் பதுங்கிப் பதுங்கி புதர்களில் மறைந்து செல்லும்போது மயில்கள் அவற்றுக்கு மேலாக மரத்துக்கு மரம் பறந்து சென்று மே..யாவ் மே..யாவ் என்று கத்தி மற்ற மிருகங்களுக்கு புலி சிறுத்தை பற்றித் தகவல் அறிவிக்கும்.

மயில் கூட்டம் கூட்டமாக வசிக்கும் ஒரு பறவை.  ஒரு கூட்டத்தில் ஒரு ஆணும் நான்கைந்து பெண் பறவைகளுமாக வாழும்.  முற்றிலும் வளர்ச்சியடையாத பறவைகள் ஒரே இனக் கூட்டங்களாக வசிப்பதும் உண்டு.

மயில், புதர்கள் அடியே சிறிய பள்ளம் செய்து அதில் சுள்ளிகள் இலைகள் இவற்றைச் சேர்த்து திறந்த கூடமைத்து அதில்  ஒரு கிண்ணப் பாலிலே இரண்டு சொட்டு காப்பிக் கஷாயம் விட்டது போன்ற வெளிர் பழுப்பு நிறத்தில் மூன்று முட்டைகளை இடும்.  முட்டைகளை அடை காப்பது பெண் மயிலே.

மயில் தரையில் தன் உணவைத் தேடும். உண்பது தானியங்கள், புழு, பூச்சிகள், பல்லி, ஓணான், பாம்பு எனப் பல வகையாகும்.

இந்துக்கள் வணங்கும் முருகக் கடவுளின் வாகனம் மயில்.

உலகப் புகழ் பெற்ற ராஜா ரவி வர்மா அவர்கள் வரைந்த இந்த முருகன் படத்தைப் பாருங்கள். மயிலின் கால் விரல்களின் பிடியில் பாம்பு.



மயிலினத்தில் மற்றொரு வகையும் உண்டு.  அதன் நிறம் பால் வெள்ளை.

வெள்ளை மயில்

மயில் இந்தியாவின் தேசீயப் பறவை. அப்படி இருந்தும் இந்தியாவில் மயிலைக் கொல்பவர் அனேகம்.  மயிலுக்கு முதல் எதிரி அதன் அழகிய தோகைப் பீலிகள்.  இதை வைத்து கை விசிறிகள் தயாரிக்க பலர் மயில்களைக் கொல்கின்றனர்.  கடைகளில் சாம்பிராணிப் புகை போட்டு காசு வாங்கிடுவோர் கையில் நீண்ட விசிறியாய் மயில் தோகை இறகுகள்.  

இரண்டாவது எதிரி இதன் ரத்தத்திலிருந்து தயாரிக்கப் படும் தைலமும் மயில் உடல் கொழுப்பும் பல வியாதிகளுக்கு மருந்து என நாட்டில் பரவியுள்ள தவறான நம்பிக்கைகள்.  

மயில்கள் அழிவதை நாம் தடுக்கவில்லை என்றால் அடுத்த சந்ததியினர் இவ்வளவு அழகிய ஒரு பறவையை படங்களில் தான் பார்க்க வேண்டி வரும்.

இந்திய மயிலுக்கு நீல மயில் என்றொரு பெயரும் உண்டு.  காரணம் இதன் நிறம் மின்னும் நீலப் பச்சை.  இந்தொனேசியா, பர்மா இங்கெல்லாம் காணப்படும் மயில் பச்சை வண்ணம் கொண்டது என்பதால் அது பச்சை பயில் என்றழைக்கப் படுகிறது.

வெள்ளை மயில் வெள்ளைப் புலி போன்று நீல மயிலின் மறுவிய தோற்றமே என்றெண்ணப் படுகிறது.

நீல மயிலினை ஒரே கூண்டில் நான்கைந்து மயில்களை ஒன்றாக வைத்து வளர்க்க முடியும்.  பச்சை மயிலை அவ்வாறு வளர்க்க முடியாதாம்.  காரணம் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு இறந்து விடும் என்பதாம்.

ஒன்றுபோல் காணப் பட்டாலும் அவற்றுள் தான் எத்தனை வித்தியாசம்!


இயற்கையின் எழிலில் நீ எப்படியெல்லாம் எங்களுக்கு காட்சி தருகின்றாய் இறைவா!

(படங்கள் விக்கிபீடியா மற்றும் இதர தளங்களில் இருந்து)


நடராஜன் கல்பட்டு


Wednesday, 13 March, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்  (25) ஸால்மன் மீன்கள்

இயற்கையின் எழில் நமக்களிக்கும் பல விந்தைகளில் ஒன்று ஆங்கிலத்தில் ஸால்மன்’ (Salmon) என்றழைக்கப் படும் மீன்கள்.

   


இந்த மீன்கள் வாழ்வது உப்பு நீர் கொண்ட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் சமுத்திரங்களில்.  ஆனால் இவை பிறப்பதோ வட அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நதியிலும் அதன் உப நதிகளிலும் மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் உள்ள நதிகளிலும் ஆகும்.

மீன் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்த பின் முழு வளர்ச்சி அடய சுமார் ஒன்று முதல் மூன்றாண்டுகள் எடுத்துக் கொள்கின்றன.   பின்னர் அவை கடலை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கும்.  அவ்வாறு பயணிக்கும் போது அவை சில காலம் சற்றே உப்பு நீராலான இடங்களில் (in brackish waters) வசிக்கும்.  அந்த நாட்களில் அவற்றின் உடலில் நல்ல தண்ணீரில் பிறந்த அவை உப்பு நீரில் வாழ்வதற்கான மாற்றங்கள் ஏற்படுகின்றன.  கடலை அடைந்த ஸால்மன் மீன்கள் சுமார் நன்கு ஐந்து ஆண்டுகள் பல ஆயிரம் மைல்கள் கடலில் சுற்றித் திரிகின்றன.

கடல் வாழ்க்கை முடிந்ததும் (அலுத்ததும்???) ஸால்மன் மீன் தான் பிறந்த இடத்திற்கே திரும்புகிறது.  திரும்பியதும் ஆற்றில் தனது வால் செதிள்களால் சிறு பள்ளம் தோண்டி பெண் மீன் அதில் சுமார் ஐயாயிரம் முட்டைகளை இடும்.  கூடவே நீந்திக் கொண்டு இருக்கும் ஆண் மீன் தனது விந்துக்களை அந்த முட்டைகளின் மீது தெளிக்கும்.  இது நடந்த பின் பெண் மீன் முட்டைகளை சிறு கற்களைக் கொண்டு மூடிவிடும்.  முட்டை இடும் வேலை நன்றே முடிந்த பின் சில நாட்களுள் தாயும் தந்தையும் இறந்து விடும்.


பெரிது படுத்தப் பட்டுள்ள, ஸால்மன் மீன் முட்டைகள்
(http://en.wikipedia.org/wiki/Image:Salmoneggskils.jpg)

முட்டைகளிலிருந்து வெளி வரும் குஞ்சுகள் பிறந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு முட்டைப் பைக்குள் மிச்சம் மீதம் இருக்கும் கருவினை உண்டு வாழும்.  அதன் பிறகு குஞ்சுகள் மெதுவாக சிறு சிறு நீர் வாழ் உயிரினங்களை உண்ண ஆரம்பிக்கும்.



முட்டையிலிருந்து வெளி வந்த மீன் குஞ்சு (பெரிதாக்கப் பட்ட படம்)
(http://en.wikipedia.org/wiki/Image:Salmonlarvakils.jpg)
ஸால்மன் மீன் பல ஆயிரம் முட்டைகளை இட்டாலும் அவற்றில் நூற்றுக்குத் தொண்ணூறு குஞ்சுகள் மீன் உண்ணும் கடல் வாழ் உயிர் இனங்களுக்கும், பறவைகளுக்கும், மனிதனுக்கும் இறையாகி விடுவதால் சுமர் பத்து சதவிகிதமே கடலைச் சென்று அடையும்.

முட்டை இடத் திரும்பும் மீன்கள் ஆற்று நீரின் வேகத்தினை எதிர்த்து, கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்திற்கு அந்த ஆறுகளில் ஒடும் நரில் நீந்தி தன் பிறந்த வீட்டினை அடைய வேண்டும்.

மனிதர்களின் மேம்பாட்டுக்காக ஆறுகளில் கட்டப்பட்ட அணைகள்
ஸால்மன் மீன்கள் எளிதாக நீந்தி தன் பிறந்த இடங்களுக்குப் போய்ச் சேர்வதில் தடங்கல் ஏற்படுத்தியதால் ஸால்மன் மீன்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.  மீன் பிடிப்பதை நம்பி வாழ்வோரின் வருமானமும் குறைய ஆரம்பித்தது.  முதல் முதலாக பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த சிலர் ஸால்மன் மீன்கள் அணைகளைத் தாண்டி தன் பிறந்த வீட்டிற்குச் செல்வதற்காக மரக் கட்டைகளைக் கட்டி படிகள் அமைத்து அதன் வழியே கொஞ்சம் நீரைச் செலுத்தி மீன்கள் ஏறிச் செல்வதற்காக மாற்றுப் பாதை அமைத்தனர்.

சமீப காலத்தில் ஸால்மன் மீன்கள் ஏறிச் செல்வதற்காக அணைகளின் பக்கத்தில் சிமெண்ட் கான்க்ரீட்டால் ஆன படிக் கட்டுகளையே (Fish ladder) அமைக்க ஆரம்பித்துள்ளனர்.  இது மட்டும் அல்ல.  சில இடங்களில் மின்சாரத்தினால் இயங்கும் மீன் தூக்கிகளையும் (Elevators) அமைத்துள்ளனர்.

இவ்வாறெல்லாம் ஸால்மன் மீன்கள் பிறந்த வீடு செல்ல வழி அமைத்துக் கொடுப்பது முற்றிலும் வியாபார நோக்கினால் மட்டுமே என்றாலும் அவை ஸால்மன் மீன்கள் இவ்வுலகில் இருந்து மறைந்து விடாமல் இருக்க உதவுகின்றன.  இதோ ஒரு மீன் ஏணியைப் பாருங்கள்.


அணைக்கட்டின் பக்கத்தில் மீன்கள் ஏறிச்செல்ல மீன் ஏணி
(http://en.wikipedia.org/wiki/Image:John_Day_Dam_fish_ladder.jpg)

நம் நாட்டில் அணைக்கட்டுகளிலும் மதகுகளிலும் மீன்கள் அதி வேகமாக விழும் நீரை எதிர்த்துத் துள்ளிக் குதிப்பதை நாம் பார்க்கிறோமே. அவையும் தன் பிறந்த வீடுகளுக்குச் செல்லத் துடிக்கும் பெற்றோர்கள் தானோ?

பிள்ளை பெறப் பிறந்த வீடு திரும்பும் ஸால்மன் மீன்கள் பல ஆயிரம் மைல்கள் கடலில் சென்று பின் பிறந்த வீடு திரும்ப தனது மோப்ப சக்தியை உபயோகிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  பல ஆறுகளிலிருந்தும் நீர் கடலில் கலக்கின்றதே.
அப்போது வாசனையும் கலந்து விடாதா?  அப்படி இருக்க பிறந்த வீட்டு நீர் வாசனை மீன்களுக்கு எப்படித் தெரிகின்றது?

இயற்கையின் எழிலில்தான் எத்தனை வினோதங்கள் வழியே நீ எங்களுக்குக் காட்சி தருகின்றாய் இறைவா!

  (படங்கள் விகிபீடியாவிலிருந்து)

                                            நடராஜன் கல்பட்டு
                                      

Saturday, 9 March, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (24)
பிணம் தின்னிக் கழுகு அல்லது பெருங்கழுகு  (Vulture)

http://en.wikipedia.org/wiki/File:Gyps_rueppellii_-Nairobi_National_Park,_Kenya-8-4c.jpg

இறைவன் எந்த ஒரு உயிரிடத்தும் பாரபட்சம் காட்டுவதில்ல.  ஒவ்வொன்றும் அது வாழ்வதற்கேற்ற அமைப்புககளை, தேவைகளை அளிக்கிறான்.  உதாரணம் வேண்டுமா  படியுங்கள் மேலே.

பிணம் தின்னிக் கழுகு என்று ஒரு பறவை.  இது நாம் சாதாரணமாகப் பார்க்கும் கருடன், கழுகு, வல்லூறு இவைகளின் இனத்தை சேர்ந்தது.  ஆனால் உருவத்தில் பெரியது.  இவற்றின் உணவு இறந்த அல்லது இறந்து கொண்டிருக்கும் மிருகங்களின் மாமிசம்.  ஏன், உலகெங்கும் உள்ள பார்ஸீ என நாம் அழைக்கும் சொராஷ்ட்றியன் (சூரிய உபாசிகள்) என்ற இனத்தவரது இறந்த உடல்கள் கூடத்தான் இப்பறவைகளின் உணவு.


http://jameswhipple.info/images/uploads/Parsee_Tower_of_Silence_Bombay.jpg
பார்ஸீக்கள் ஊரில் ஒரு உயரமான இடத்தில் அகலமான வட்ட வடிவிலான தொட்டி ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள்.  அதற்கு அமைதியின் கோபுரம் என்று பெயர்.  ஆங்கிலத்தில் Tower of silence என்றழைப்பார்கள் அதை.  இறந்தவர்களின் உடலை அதனுள் எறிந்து விடுவார்கள் பார்ஸீக்கள்.  அவ்வாறு எறியப் பட்ட உடல்கள் பிணம் தின்னிக் கழுகுகளுக்கு உணவாகும்.

பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்தக் கழுகுகளின் தலை கழுத்து இவற்றின் நிறம் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, வெளிர் கருப்பு என மாறு பட்டாலும் ஒரு விதத்தில் இப்பறவைகள் ஒரே மாதிரி இருக்கும்.  தலையிலும் கழுத்திலும் சிறகுகள் இருக்காது மற்ற பறவைகளைப் போல இவற்றுக்கு.  இது ஏன் தெரியுமா?

  Griffin vulture
வெள்ளைத் தலை

 Turkey_vulture_Bluff.jpg
 சிவப்புத் தலை

இந்தப் பறவைகள் பிணத்தினைக் கிழித்து உள்ளிருந்து மாமிசத்தைப் பிய்த்தெடுத்துத் தின்னும்போது ரத்தமும் வேறு சில திரவங்களும் தலையிலும் கழுத்திலும் ஒட்டிக்கொள்ளும்.  சிறகுகள் இருந்தால் அவற்றுக்கடியில் தங்கிவிடும் இப் பொருட்களில் இருந்து கிருமிகள் உண்டாகும்.  சிறகுகள் இன்றி மொட்டையாக இருக்கும் கழுத்து தலை இவற்றின் மீது படிந்துள்ள இப்பொருட்கள் சற்று நேரத்தில் வெய்யிலும், காற்றும் பட்டுக் காய்ந்து விடுமாதலால் கிருமிகள் உண்டாகாது.

இவ்வகைக் கழுகுகள் தங்கள் கழுத்தின் நீளத்தினை தேவையான அளவு நீட்டவோ குறைத்துக் கொள்ளவோ முடியும்.  இது எதற்காக தெரியுமா?  பிணத்தின் உள்ளே தலையை விட்டு மாமிசம் பிடுங்கத்தான்.



மேலே உள்ள படத்தில் கழுகு தன் கழுத்தின் நீளத்தை சற்றே குறைத்துக் கொண்டிருப்பதால் தோலில் சுருக்கம் தெரிகிறது பாருங்கள்.

பிணம் தின்னிக் கழுகுகளுக்கு இறைவன் அளித்துள்ள வரங்கள் இன்னும் சில உள்ளன.  ஒன்று அவற்றின் கூரி வளைந்த அலகுகள்.  மற்றொன்று கண்களிலே மூன்றாவது இமை.


மூன்றாம் இமை

நம் கண் இமைகளை நாம் அடிக்கடி சிமிட்டுவது விழிகளில் எப்போதும் ஈரப் பசை இருக்க வேண்டும், கண்ணில் விழும் தூசியினை அவ்வப்போது ஓரம் கட்ட வேண்டும் என்பதற்காக.  இந்த வசதி கழுகிற்கும் வேறு சில பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் சற்று அதிகமாகவே தேவைப் படுகிறது.  காரணம் அவை உணவு தேடும் விதம்.  ஆகவேதான் இறைவன் அவற்றிற்கு இந்த மூன்றாவது இமையினை அளித்திருக்கிறான்.

தெரிகிறதா கரு விழியையும் சற்றே முடிய மூன்றாம் இமைமூன்றாம் இமை, (ஆங்கிலத்தில் இதன் பெயர் Nictitating membrane என்பதாகும்.), மேலும் கீழுமாக அசைவதில்லை.  பக்க வாட்டில் நகரும்.  கழுகினத்தின் மூன்றாம் இமை முற்றிலும் ஒளி ஊடுருவிச் செல்வதாக அமைந்தது அல்ல.  சிறிது குழம்பியே இருக்கும்.  ஆனால் கோழிக்கும் வேறு சில பறவைகளுக்கும் இந்த மூன்றாம் இமை தெள்ளத் தெளிவாக இருக்கும். 


http://en.wikipedia.org/wiki/File:Chickenblinking.jpg
கோழியின் தெள்ளத் தெளிவான மூன்றாம் இமை

கோழி குப்பை மேட்டில் மண்ணைக் கிளறி இரை தேடும்போது அதன் கண்களில் மண்ணும், தூசியும் கட்டாயம் விழும்.  இதை எதிர் கொள்ளத்தான் கோழிகளுக்கு இந்த மூன்றாம் இமை.

மரங்கொத்திக்கும் மூன்றாம் இமை உண்டு.  அது மரத்தினை வேகமாகக் கொத்தும்போது விழிகள் வேளியே தெறித்து விடாமல் இருக்க அது தன் மூன்றாம் இமைகளால் தன் கண்களை இறுக்க மூடிக்கொள்ளுமாம்.

கழுகை விட்டு அதிக தூரம் போய் விட்டோம்.  மீண்டும் கழுகுக்கு வருவோம்.

சொல்ல மறந்த ஒரு விஷயம் இந்தக் கழுகுகளின் கண், மூக்கு இவற்றின் அபார சக்தி பற்றி.  ஆகாயத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே தரையில் எங்கு ஒரு மிருகம் செத்துக் கொண்டிருக்கிறது அல்லது செத்துக் கிடக்கிறது என்பதை மிகத் துல்லியமாகக் கண்டறிய வல்லது இப்பறவை.

எகிப்தியக் கழுகு என்னும் கழுகு பிணந்தின்னிக் கழுகளை விட உருவத்தில் சற்றே சிறிதானது.  மஞ்சள் நிறத் தலையும் வெள்ளை நிறச் சிறகுகளையும் கொண்ட ஒரு வகைக் கழுகு இது.  இதை கிராமப் புரங்களில் பார்க்கலாம்.  இவை இறந்த உயிரினங்களைத் தின்பதோடு மட்டும் அல்லாமல், கசாப்புக் கடைக் காரர்கள் எறிந்திடும் கழிவுப் பொருட்களையும் தின்று தீர்க்கும்.  அவ்வளவு ஏன், மனித மலத்தினையும் உண்ணும்!  இந்த வகைக் கழுகின் பெயர் ஆங்கிலத்தில் ‘Scavenger vulture அல்லது ‘Pharaoh’s chic’ என்பதாகும்.  ஆதி நாளைய எகிப்த்திய மன்னர்களின் கிரீடத்தினை அலங்கரித்தவை இவை.



தமிழ் நாட்டில் திருக்கழுக் குன்றத்தில் தினம் பகல் பன்னிரெண்டு மணிக்கு அங்குள்ள வேதகிரீஸ்வரரின் கோவில் பூஜாரி இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்த சர்க்கரைப் பொங்கலை ஒரு கல்லின் மீது வைக்க எங்கிருந்தோ வரும் இரு எகிப்தியக் கழுகுகள் அதை உண்ணும் காட்சியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் நேரில் கண்டிருக்கிறேன்.  (இப்போதெல்லாம் அவை வருவதில்லை என்று சொல்கிறார்கள் சிலர்.)

இந்தப் பறவைகள் இரு ரிஷிகள் என்றும், அவர்கள் தினமும் கங்கை, திருக் கழுக்குன்றம், ராமேஸ்வரம் ஆகிய இந்த மூன்று இடங்களுக்கும் சென்று வருவதாகவும் சொல்வார்கள்.  ஸ்தல புராணத்திலும் இது இருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

இந்தக் காட்சி பறவைகள் நிபுணர் காலஞ்சென்ற டாக்டர் சாலிம் அலி அவர்களையே வியக்கச் செய்தது.  இந்தியப் பறவைகள் பற்றிய அவரது புத்தகத்தில் எழுதி உள்ளார், இப்பறவைகள் ஒரு மனிதனால் பழக்கப் பட்டவை என்றால் அவற்றைப் பழக்கப் படுத்தியவர் யார்?  ஒரு ஜோடிப் பறவைகள் இறந்தால் அடுத்த ஜோடியினைத் தயார் செய்வது யார்?  ஏன் ஒரு ஜோடியே வருகின்றன? என்று.

எகிப்தியக் கழுகு ஒன்று அல்லது இரண்டு முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பது கோவில் கோபுரங்களிலோ அல்லது பாழடைந்த கட்டிடங்களிலோ.  குஞ்சுகளுக்கு அவை அளித்திடும் உணவு பாம்பு, ஓணான், தவளை போன்றவை.  குஞ்சுகளின் சிறகுகளின் நிறம் தாய் தந்தைப் பறவையின் நிறத்திற்கு நேர் மாறானது.  பெரிய பறவைக்கு எங்கெல்லாம் வெள்ளைச் சிறகுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் குஞ்சுக்கு கருப்புச் சிறகுகளும், எங்கெல்லாம் கருப்புச் சிறகுகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வெள்ளை சிறகுகளும் இருக்கும்.  குஞ்சுகள் வளர்ந்திடும் போது நிறம் முற்றிலுமாக மாறி விடும்!

இயற்கையில் தான் எத்தனை வேடிக்கை காட்டுகிறான் இறைவன்!


நடராஜன் கல்பட்டு                                       


Sunday, 3 March, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (23) பறவைகள் வலசை போதல் அல்லது பருவ கால இடப் பெயர்ச்சி செய்தல்

இயற்கையின் வினோதங்களில் மிகப் பெரிய வினோதம் பறவை வலசை போதல் அல்லது வருடா வருடம் ஒரு பருவ காலத்தில் இடம் பெயர்ந்து வாழ்தல் (Bird migration). 

இடம் பெயர்வது ஒன்றோ இரண்டோ அல்ல.  வித விதமான பறவைகள் கோடிக் கணக்கான எண்ணிக்கையில்.  அவ்வாறு இடம் பெயர்வதற்காக பறவைகள் பறக்கும் தூரம் சில நூறு மைல்களில் இருந்து பல ஆயிரக் கணக்கான மைல்கள் வரை.

வலசை போகும் பாதையில் பறவைகள் இளைப்பாருதல்

வலசை போதல் நாம் ஒரே ஊரில் அல்லது ஒரே நாட்டில் வீடு மாறுவது போல் அல்ல.  வட துருவப் பிரதேசங்களில் இருந்து தென் துருவப் பிரதேசம் வரை இட மாற்றம் செய்கின்றன பல பறவைகள், சுமார் 10,000 மைல்களிலிருந்து 14,000 மைல்கள் தூரத்திற்கு.  அது அந்தப் பறவைகளால் கடும் குளிரினைத் தாங்க முடியாமல் அல்ல.  போதுமான அளவு உணவு கிடைக்காததால் என்பது தெரிய வந்துள்ளது.

பறவைகள் இடம் பெயர்தல் குறித்து பல ஆராய்ச்சிகள் நடத்தப் பட்டுள்ளன.  நடந்துகொண்டு இருக்கின்றன.  அவற்றால் பல வியக்கத் தக்க உண்மைகள் கண்டு அறியப் பட்டுள்ளன.  இந்த ஆராய்ச்சிக்கு உதவி புரிவது பறவைகளுக்கு வளயம் அல்லது காப்புப் போடுதல் என்ற நடவடிக்கை ஆகும்.  (Bird ringing or banding)

இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் ஆஃப் நேசர், அமெரிக்காவில் உள்ள ஆடுபான் சொசைடி, அமெரிகன் ஜியலாஜிகல் சொசைடியின் விஞ்ஞான கேந்திரங்கள், இந்தியாவில் உள்ள பாம்பே நேசுரல் ஹிஸ்டரி சொசைடி மற்றும் உலகில் பல நாடுகளிலும் உள்ள இயற்கையில் ஈடுபாடு கொண்ட சங்கங்களும், பல்கலைக் கழகங்களும், தனி நபர்களும் பறவைகளைப் பிடித்து அதன் காலிலோ இறக்கையிலோ அலுமினியம் அல்லது ப்ளாஸ்டிக்கினால் ஆன காப்பினைமாட்டி விடுவர்.  அந்தக் காப்பில் ஒரு எண்ணும் காப்பினை மாட்டியவரின் விலாசமோ டெலிஃபோன் எண்ணோ இருக்கும்.

பிடித்த பறவையின் காலில் போடப்படும் வளையம்

சிறு பறவைகளைக் காப்பிடுவதற்காகப் பிடிப்பதற்கு பனி வலை எனப்படும் மிக மெல்லிய தான நைலான் நூலினால் பின்னப் பட்ட வலையினை உபயோகிப்பார்கள்.

(பனி வலை)

பெரிய பறவைகளை வேறு விதங்களில் பிடிப்பார்கள்.  இப்படிப் பிடிக்கும் போது ஏற்கெனவே ஒரு பறவைக்குக் காப்பிருந்தால் அதில் உள்ள எண் மற்றும் தகவல்களை குறித்துக் கொண்டு பிடிக்கப் பட்ட இடம், தேதி,  பிடிபட்டபோது அதன் எடை போன்றவற்றை முதலில் காப்பிட்டவருக்குத் தெரிவிப்பார்கள்.  இத்தகவல் பரிமாற்றம் பிடிபட்ட பறவையின் வயது, அது பறந்து சென்றுள்ள தூரம் போன்ற பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.

சமீப காலத்தில் பறவைகளின் உடலில் மிக நுண்ணிய மின் அலை பரப்பியினைப் பொருத்தி அதிலிருந்து எழும் அலைகளை தரையில் உள்ள மின் அலை வாங்கி நிலயங்களின் மூலமோ அல்லது செயற்கைக் கோள்களின் மூலமோ கிடைக்கப் பெற்று அந்தப் பறவை உள்ள இடம், பறக்கும் உயரம், வேகம் போன்ற தகவல்களைக் கண்டறிகின்றன.

இந்த ஆராய்ச்சிகளினால் பல ஆச்சரியப் படும் படியான விஷ்யங்கள் வெளி வந்துள்ளன.


சில வியக்கத் தக்க உண்மைகள் உங்களுக்காக இதோ:


1.  தூரம்:

உலகிலேயே அதிக தூரம் பறந்து வலசை போகும் பறவை ஆர்டிக் கடல் ஆலா (Arctic Tern).  இது கடற்கரை ஓரமாகவே பறந்து செல்லும், சுமார் 12,000 மைல்கள் (19,000 கிலோ மீடர்) தூரம் (ஒரு வழி).  போகும் வழியில் உணவு (மீன்கள்) உண்ணவும் மற்றும்  இளைப்பாருவதற்கும் வசதி வேண்டுமல்லவா?  அதனால்தான் கடற்கரை ஓரப் பயணம்.

 ஆர்டிக் ஆலா ஜோடி 


 ஆர்டிக் ஆலா வலசை போகும் பாதையும் வாழும் இடங்களும்.

சிவப்பு :  இனப் பெருக்கம் செய்யும்போது வாழும் இடங்கள்.
கடல் பச்சை :  இடம் பெயர்ந்து வாழும் நாட்களில் தங்கும் இடங்கள்.
பச்சை அம்புக்குறிகள் :  இடம் பெயர்வதற்காப் பறந்து செல்லும் பாதை.  சுமார் 12,000 மைல்கள் (19,000 கிலோமீடர்கள்) ஒரு வழிபறப்பது நிலப் பரப்புக்கு மேலாக அல்ல.  கடலுக்கு மேலாகத்தான். காரணம் அதன் உணவு கடல் வாழ் மீன்கள்.

பிறந்து சில நாட்களுக்குள் காப்பு போடப்பட்ட ஒரு ஆர்டிக் ஆலா குஞ்சு பறக்க ஆரம்பித்ததும் இங்கிலாந்தின் கிழக்குக் கரையில் இருந்து கிளம்பி மூன்று மாதத்தில் 14,000 மைல்கள் கடந்து ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னை அடைந்தது என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

(“ஏண்டா ஆலாப் பறக்கறே என்ற கேள்விக்கும் பல்லாயிரக் கணக்கான மைல்கள் பறந்து வலசை போகும் கடல் ஆலாவுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ?)

 நம் நாட்டு க்ரௌன்ச பக்ஷி போன்றே ஆர்டிக் கடல் ஆலாவும் ஒரு முறை ஜோடி சேர்ந்தால் அந்த பந்தம் ஆயுள் பூராவும் நீடிக்கும்.

சமீப காலம் வரை வலசை போகும் போது உலகிலேயே அதிக தூரம் சுமார் 3,000 மைல்கள் (4,800 கிலோ மீடர்கள்) ஒரே மூச்சில் நிற்காமல் பறந்து செல்வதற்கான சான்றிதழ் பெற்ற பறவை கல் பொறுக்கி என்று தமிழ் நாட்டில் அழைக்கப் படும் கோல்டன் ப்ளோவர் (Golden Plover) ஆகும். 

கல் பொறுக்கி வட அமெரிக்காவின் வட பகுதி, வட ஐரோப்பா, வடக்கு ஆசியா போன்ற இடங்களில் இனப் பெருக்கம் செய்து பின் கடல் உறையும் குளிர் நாட்கள் வந்தவுடன் தெற்கு நோக்கிப் பறக்கிறது.

     கல்பொருக்கி ஆண் பறவை      கல்பொருக்கி பெண் பறவை

இந்தப் பறவையை தமிழ் நாட்டில் தஞ்சை ஜில்லாவில் உள்ள கோடியக்கரையிலும் (Point Calimere) மற்றும் சுற்றுப் புறங்களிலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் காணலாம்.

இந்தப் பறவைக்கு கல் பொறுக்கி என்ற பெயர் ஏன் வந்தது தெரியுமா?  இது கடற்கரையில் உள்ள சிறு கற்களைத் தள்ளி அதனடியில் கிடைக்கும் புழு பூச்சிகளைத் தின்னும்.

சென்ற ஆண்டு செப்டம்பர் வரை முதல் இடத்தில் இருந்த கல் பொருக்கியை கவிழச் செய்தது மூக்கான் என்று தமிழ் நாட்டில் அழைக்கப் படும் Godwit என்ற பறவை. இந்தப் பறவை சாதித்து                                                                                                                                   இருப்பது என்ன என்று பாருங்கள்.

மூக்கான்

ந்யூசிலாந்தில் வடக்குத் தீவில் உள்ள மிராண்டா என்ற ஊரில் பிப்ரவரி, 2007ல் சிறிய ரேடியோ மின் அலை பரப்பி பொருத்தப் பட்ட சில பறவைகளில் ஒரு பெண் மூக்கானும் இருந்தது. 

E-7 என்று பெயர் கொடுக்கப் பட்ட இதன் போக்கு வரத்து செயற்கைக் கோள் மூலம் கண் காணிக்கப் பட்டது.

     
மிராண்டா, ந்யூசிலாந்து

மூக்கானின் வலசை போகும் பாதை
        
                       
மார்ச் 17ம் தேதி மிராண்டாவிலிருந்து கிளம்பிய மூக்கான் எங்கும் தரையிறங்காமல் 6,300 மைல் தூரத்தில் சீனாவில் உள்ள யாலு ஜியாங் என்ற இடத்தை 8 நாட்களில் அடைந்தது.  5 வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து கிளம்பிய மூக்கான் 5 நாட்களில் 4,500 மைல் தூரத்தில் உள்ள மேற்கு அலாஸ்காவின் யூகான்-குஷாக்வின் முகத்துவார பிரதேசத்தை அடைந்தது.  இந்த இடம் தான் அது இனப் பெருக்கம் செய்யும் இடம்.

பின்னர் ஆகஸ்ட் 29ம் தேதி கிளம்பி வேறு பாதயில் 7,200 மைல் தூரம் ஒரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில் ந்யூசிலாந்தின் மிராண்டாவை மீண்டும் அடைந்தது.

மூக்கான்களை கோடியக்கரையிலும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை காணமுடியும்.

2.  உயரம்:

வலசை போகும்போது பறவைகள் பறக்கும் தூரம் பற்றிப் பார்த்தோம்.  உயரம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டாமா?
நாம் பயணம் செய்யும் ஜெட் விமானங்கள் பறப்பது சுமார் 28,000 அடியிலிருந்து 35,000 அடி உயரம் வரை.

தலையில் கோடுகள் கொண்ட வாத்து (Bar headed goose) பறப்பது 30,000 33,850 அடிகள் உயரத்தில்.  லடாக், திபெத் போன்ற பிரதேசங்களில் உள்ள ஏரிகள் அருகே இனப் பெருக்கம் செய்து வாழும் இப் பறவைகள் குளிர் நாட்களில் இமயம் தாண்டி இந்தியா வருகின்றன.



தமிழ் நாட்டில் தலையில் கோடுகள் கொண்ட பெரிய வாத்தினை திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவரயனேரியிலும், தஞ்சை மாவட்டம் கோடடியக்கரையிலும், வேறு பல பறவை சரணாலயங்களிலும் காணலாம்.

கடல் பறவைகளும் கடற்கரை வாழ் பறவைகளும் பறப்பது 20,000 முதல் 25,000 அடி வரையிலான உயரத்தில்.

சிறிய இசை பாடும் பறவைகள் பறக்கும் உயரம் 500 முதல் 5,000 அடி உயரம் வரை.

3.  வேகம்:

வலசை போகும் பறவைகள் பறக்கும் வேகம் சுமார் மணிக்கு 20 மைல்களிலிருந்து 40 வரை.  ஊலகிலேயே அதிக தூரம் ஒரே மூச்சில் பறந்து சாதனை செய்துள்ள மூக்கனின் வேகம் மணிக்கு 36 மைல்கள் அதாவது மணிக்கு 58 கிலோ மீடர்கள்.  பெரிய பறவைகளின் வேகம் குறைவு.

4.  பறக்கும் நேரம்

வலசை போகும் பறவைகளில் அதிக பட்சம் இரவில் பறப்பவை.  ஒரே மூச்சில் பறக்கும் பறவைகள் பகல் இரவு இரு நேரத்திலும் பறக்கும்.

5.  பறக்கத் தேவையான சக்தி:

விமானம் பறக்க வேண்டுமானால் அதற்கு எரிபொருள் தேவை.  அதே போல் ஒரு பறவை பறக்க வேண்டுமானால் அதற்கும் எரிபொருள் தேவை.  அதிக தூரம் பறக்க வேண்டி இருக்கும் வலசை போகும் பறவைகள் இடம் பெயரும் முன் தனது எடை எவ்வளவோ அதில் பாதி அளவுக்கு கொழுப்பை தன் உடம்பில் தோலின் கீழ் சேகரித்துக் கொள்ளும்.  உதாரணத்திற்கு சுமார் 200 கிராம் எடையுள்ள கல்பொருக்கி தனது 4,800 கிலோ மீடர் பயணத்தைத் தொடங்கும் முன் தன் உடலில் 100 கிராம் கொழுப்பைச் சேமித்துக் கொள்கிறது.

எண்ணிப் பாருங்கள் மனிதனால் ஆக்கப் பட்ட எந்த ஒரு பொருளாவது 100 கிராம் எரிபொருளை வைத்துக் கொண்டு 4,800 கிலோ மீடர் தூரம் பறந்து செல்ல முடியுமா என்று.

(ஒரே மூச்சில் 7,200 மைல்கள் பறக்கும் மூக்கானால் எட்டரை நாட்கள் பட்டினி கிடக்க முடிகிறது.  வேண்டும்போது தன் உடல் எடையை ஒன்றரை மடங்காக்கிக் கொள்ள முடிகிறது.  நம்மால் முடியுமாஅவ்வையார் வார்த்தைகளை எண்ணிப் பாருங்கள்:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் ஒரு நாளும்
என் நோவறியாய் இடும்பைகூர் என் வயிரே
உன்னோடு வாழ்தல் அரிது

பறவைகள் எங்கே?  நாம் எங்கே?)

6.  திசை மற்றும் வழி காணுதல்:

ஒரு விமானம் சேரவேண்டிய இடத்திற்கு ஒழுங்காகப் போய்ச்சேர வேண்டுமானால் விமானம் நல்ல நிலயில் இருக்க வேண்டும்.  விமான ஓட்டிக்கு அந்த விமானத்தை நல்ல முறையில் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.  விமானத்தில் திசை, போக வேண்டிய பாதை மற்றும் போக வேண்டிய பாதையில் விமானம் அந்த நொடியில் இருக்கும் இடத்தைக் காட்டும் கருவி, அந்த நொடியில் பறக்கும் உயரம் காட்டும் கருவி, வேகத்தினைக் காட்டும் கருவி இவை அனைத்தும் இருக்க வேண்டும்.  தரையிலிருந்து விமானத்தைக் கண்காணிக்கும் நிலயங்களில் விமானம் பறந்து கொண்டிருக்கும் இடத்தைக் காட்டும் கருவிகள் மற்றும் விமான ஓட்டியுடன் தொடர்பு கொள்ளத் தொலைபேசித் தொடர்புக் கருவிகள் இருக்க வேண்டும்.

மேற்சொன்னவை எல்லாம் பறவைகளிடம் இருக்கின்றனவா?
பின் எப்படி அவை வழி தப்பாமல் வருடா வருடம் சேர வேண்டிய இடங்களுக்கு ஒழுங்காகப் போய்ச்சேருகின்றன?

இந்தக் கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து பல கால கட்டத்திலும் பல விதமான பதில்கள் வந்துள்ளன.

முதல் முதலாக பறவைகளின் மனத் திறையில் கீழே தரையில் காணப்படும் சில முக்கிய இடங்களின் படம் பதிவாகி விடுகிறது.
அந்த ஞாபகத்தில் பறவைகள் வழி தப்பாது வருடா வருடம் பறக்கின்றன என்று சொல்லப் பட்டு வந்தது.  அப்படி என்றால் முதல் முதலாகப் பறந்து செல்லும் குஞ்சுளுக்கு வழி எப்படித் தெரிகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை.

சூரியனைப் பார்த்து வழி கண்டன பறவைகள் என்றனர் சிலர்.
அப்படியெனின் மேகம் அடர்ந்த மழை நாட்களில் எவ்வாறு வழி கண்டன, இரவில் பறக்கும் பறவைகள் எவ்வாறு வழி கண்டன?

இரவில் பறக்கும் பறவைகள் சந்திரனைப் பார்த்து தன் பாதை அறிகிறது என்றனர் சிலர்.  அப்படியென்றால் அமாவாசையன்று
பறவைகள் விடுமுறை எடுத்துக் கொள்கின்றனவா என்றால் இல்லயே.

நக்ஷத்திரங்களைப் பார்த்து வழி அறிகின்றன என்கிறார்கள் சில ஆர்ராய்ச்சியாளர்கள்.  அப்படியெனில் பறவைகள் யாரிடம் வான சாஸ்திரம் கற்றுக் கொண்டு வல்லுனர்கள் ஆயின?

வான சாஸ்திர வல்லுனர்களோ இல்லையோ பறவைகள் கட்டாயம் வானிலை பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவை என்று தோன்றுகிறது.  இல்லை என்றால்
அவை வலசை போகும் வழியில் புயலோ கடும் மழையோ வந்தால் அவை முற்றிலுமாக அழிந்து விடும்.   போகும் வழியில் அபாயம் இல்லை என்று தெரிந்த பின்னரே அவை தங்களது பயணத்தைத் தொடங்க வேண்டும்.  தொடங்குகின்றன.

புவியின் காந்த சக்தியை உணர்வதன் மூலம் வழி அறிகின்றன பறவைகள் என்கின்றனர் சிலர்.  அது உண்மை எனின் மாலுமிகளிடம் உள்ள புவியின் காந்த சக்தியால் இயங்கும் மேரினர்ஸ் காம்பஸ் என்ற கருவி என்ன காட்டுகிறது?
எட்டு திசைகளைத் தானே?  இடங்களை அல்லவே.

7.  பறக்கும் விதம்:
இனப் பெருக்க காலத்தில் ஜோடி ஜோடியாக வாழ்ந்த பறவைகள்
வலசை போகும் காலம் நெருங்கும்போது இன வாரியாக கூட்டம் கூட்டமாக சேர ஆரம்பிக்கும்.சரியான சமயம் வந்ததும் அவை போக வேண்டிய இடம் நோக்கிப் பறக்கும்.  அப்படிப்
பறக்கும் முறையில் ஒரு ஒழுங்கு இருக்கும்.  பெரிய பறவைகள் போர் விமானங்களோ, அல்லது விமானக் கண்காட்சிகளில் பறக்கும் விமானங்களோ போல ஆங்கில வி எழுத்தைக் கவிழ்த்துப் போட்டாற்போல் பறக்கும், ஒரு பறவை முன்னே செல்ல மற்றவை அதன் பின்னே.
                                                                                                                                           

 முன்று வித பெரு வாத்துக்கள் வலசை போகும் காட்சியினைப் பாருங்கள்.   (Greater White-fronted, Snow, and Canada Geese migrate in spectacular formation)

ஒரே பறவையே எப்போதும் முன் செல்லும் என்பதல்ல.  கொஞ்ச தூரம் பறந்தபின் அதன் பொறுப்பை பின்னால் வரும் ஒரு பறவை ஏற்றுக்   கொள்ளும்.  இது தற்செயலாக நடக்கும் ஒரு விஷயம் அல்ல.  ஒரு காரணமாகத்தான் என்பது சமீப கால ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  முன்னால் பறக்கும் பறவையின் இறக்கைகளின் அசைவுகளினால் ஏற்படும் காற்று அலை அதிர்வுகள் பின்னால் வரும் பறவைகளுக்கு பறக்கத் தேவையான எரிபொருள் அளவில் சிக்கனம் அளிக்கிறதாம்.  ஒரே பறவை தலமை தாங்கிச் சென்றால் அது தளர்ந்து விடும்.  அப்படி நடக்காமல் இருப்பதற்காகத் தான் இட மாற்றம்.  என்ன விந்தை !!!

8.  நடுவான் விபத்து!

பல திறமை மிக்க கருவிகள் கொண்ட விமானங்கள் அவ்வப் போது நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாவதைப் பற்றிப் படிக்கிறோம், பார்க்கிறோம்.

அதிருஷ்ட வசமாக விபத்திலிருந்து தப்பிய விமானங்கள்

கோடியக்கரை போன்ற பறவைகள் சரணாலயத்திற்குச் சென்றவர்கள் பார்த்திருப்பீர்கள் கொசு உள்ளான் (Sand Piper)  போன்ற சிறிய இடம் பெயர்ந்து வரும் பறவைகளை.  இவை ஆயிரக் கணக்கில் சதுப்பு நிலத்தில் இரை தேடிக் கொண்டு இருக்கும்.  திடீரென ஒரு பறவை வானில் எழும்.  அதைத் தொடர்ந்து அத்தனை பறவைகளும் பறக்கும்.  சற்றே தூரம் சென்ற தலைவன் திடீரெனத் திரும்ப அத்தனை பறவைகளும் அடுத்த நொடியே திரும்பும்.  ஆனால் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதில்லை. இது எப்படி சாத்தியமாகிறது?

விமானத்தைப் படைத்தவர் ஒருவர்.  ஓட்டுபவர் ஒருவர்.  வழி காட்டுபவர் ஒருவர்.  ஆனால் பறவைகளின் விஷயத்திலோ விமானமும் அவரே.  படைத்தவரும் அவரே.  ஓட்டுபவரும் அவரே.  வழி காட்டுபவரும்  அவரே.


அன்பர்களே,

இயற்கையின் எழிலில் இறைவனைக் கண்டீர்களா?  நான் கண்டேன்.  நீங்களும் காண்பீர்கள் நிச்சயமாக.  முயற்சி செய்யுங்கள்.  முயற்சி திருவினை ஆக்கும்.

சும்மாவா பாடினான் பாரதி அன்று,

       காக்கைச் சிறகினிலே நந்த லாலா
        உந்தன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
        பார்க்கும் மரங்கள் எல்லாம் நின்றன்
        பச்சை நிறம் தோன்றுதையே நந்த லாலா” 
என்று?                                     


(வண்ணப் படங்கள் விக்கிபீடியா இணய தளத்திலிருந்து)


                                         நடராஜன் கல்பட்டு