Saturday, 27 April 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (29) செம்போத்துக் குருவி



(செம்போத்துக் குருவி – படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து)

செம்போத்துக் குருவி என்றொரு பறவை.  இது அண்டங் காக்காய் போன்று இருக்கும் உருவ அளவில்.  இதன் உடல் மின்னும் கருப்பு நிறத்திலும் இறக்கைகள் செம்பட்டை நிறத்திலும் இருக்கும்.  இதன் அலகுகள் காகத்தின் அலகுகளை விட சற்றே குட்டையாக வளைந்து இருக்கும்.  கண்கள் குயிலின் கண்களைப் போன்று, கரு விழியைச் சுற்றிலும் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.  இதன் வால் சிறகுகள் காகத்தின் வால் சிறகுகளையும் விட சற்று நீளமாகவும், தரையில் நடந்திடும் போது அவ்வப்போது தரையைத் தொட்டுக் கொண்டும் செல்லும்.

உருவத்தில் குயில் போலத் தோன்றினாலும், செம்போத்துக் குருவியின் குரல் சற்று வினோதமானது.  அது உரத்த குரலில் “பாங்க்….பாங்க்….பாங்க்” என்று கத்தும்.  அந்த ஒலி எண்ணை கண்டிடாத ராட்டிணம் எழுப்பும் ஒலி போன்றிருக்கும். 

செம்போத்துக் குருவி தரையில் சருகுகளுக்கடியில் கிடைக்கும் புழு பூச்சிகளையும், செடிகளின் விதைகளையும் உண்ணும்.  இப்படித் தன் உணவைத் தரையிலேயே தேடிக் கொள்வதால் இது அதிகமாக உயரத்தில் பறப்பதில்லை.

குயில் இனத்தை சேர்ந்தாலும் குயிலைப் போல் அல்லாது செம்போத்துக் குருவி கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்த்திடும்.

செம்போத்துக் குருவி, பெரிய பந்து போன்று குச்சிகள், காய்ந்த புல், இலைச் சரகுகள் இவற்றால் கட்டப்பட்ட கூட்டினை அடர்ந்த புதர் போன்ற செடிகளுள் அமைத்திடும்.  கூட்டிற்குள் செல்லும் வழி வட்ட வடிவில் பக்க வாட்டில் அமைக்கப் படும்.  கூடு கட்டுதல், அடை காத்தல், இரை தேடி குஞ்சுகளுக்கு ஊட்டல் ஆகிய பணிகளில் ஆண் பெண் இரு குருவிகளுமே பங்கேற்கும். 

இயற்கையில் தான் எத்தனை காட்சிகள் நாம் பார்த்து ரசிக்க!



எங்கள் விட்டிற்கு சென்ற ஆண்டு தினமும் ஒரு விருந்தினர் வந்து கொண்டிருந்தார்.  தினமும் வருபவரை விருந்தினர் என்று எப்படி அழைக்கலாம் என்கிறிர்களா?  வருபவர் உங்களுக்குப் பிடித்தவராக இருந்து, அவர் வரவை ஆவலுடன் நீங்கள் எதிர் பார்ப்பதாக இருந்தால் அவரை விருந்தினர் என்று அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே.

வருகையை அறிவிக்க அவர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டுவதோ அல்லது அதில் உள்ள அழைப்பு மணியை இயக்கிடும் ஸ்விட்சைத் தட்டுவதோ இல்லை.  பதிலாக உரக்கத் தன் குரலில், “போங்க்… போங்க்… போங்க்” என்று அழைப்பார் என்னை.  நானும் உடனே வாசல் கதவினைத் திறந்து கொண்டு அவர் தோட்டத்தில் தரையில் ஒய்யார நடை போட்டு அவ்வப்போது குனிந்து எதோ ஒரு பொருளைக் கொத்தித் தின்பதைப் பார்த்து ரசிப்பேன். 

அவர் உடல் நிறம் கறுப்புதான்.  அந்தக் கறுப்பு நிறத்திற்கும் அழகு சேர்த்திடும் அவரது மின்னும் கறும் பச்சை நிறக் கழுத்தும், செங்கற் சிவப்பு இறக்கைகளும், ரத்தச் சிவப்பு கண்களும்.

இந்தப் பறவையின் ஆங்கிலப் பெயர் க்ரோ ஃபெஸன்ட் (Crow pheasant) அல்லது க்ரேடர் கௌகால் (Greater Coucal) என்பதாகும்.  ஸென்ற்றோபஸ் சைனென்ஸிஸ் (Centropus sinensis) என்பது விஞ்ஞான ரீதியாய் இதற்கு அளிக்கப் பட்ட பெயர்.  தமிழில் இந்தப் பறவையினை செம்போத்துக் குருவி என்று அழைப்பார்கள்.

எங்கள் விட்டிற்குப் பக்கத்தில் ஒரு காலி மனை.  அதில் புல் பூண்டுகளும், செடிகளும், மரங்களும் ஒரு குட்டிக் காடு போல் வளர்ந்திருந்தன.  அதற்கு அடுத்த வீடு ஏழெட்டு வருஷங்களாகப் பூட்டி இருக்கும் ஒன்று.  அங்கும் காடென வளர்ந்திருந்தன மரம், செடி, கொடிகள்.

இந்த இரண்டு இடங்களில் தான் எங்கள் விருந்தினர் வசித்து வந்தார் தன் கணவரோடு.  ஆறு மாதங்களுக்கு முன்பு காடாய் வளர்ந்திருந்தவற்றை முனிசிபாலிடி காரர்களும் காலி வீட்டின் சொந்தக் காரர்களுமாக அகற்றினர்.  அத்துடன் செம்போத்து தம்பதியினருக்கு மறைவாய் வாழ்ந்திட இருந்த இடம் மறைந்தது.

செம்போத்து கூடு அமைப்பது வினோதமாக இருக்கும்.  சணல் கயிறு, துண்டுகள், வாழை நார், துணிக் கந்தல்கள், மெல்லிய குச்சிகள் இவற்றைக் கொண்டு ஒரு கால் பந்தளவிற்கு உருண்டையான கூட்டினை அமைக்கும்.

இப்படிப் பட்ட ஒரு வீட்டை எங்கள் வீட்டு எலுமிச்சை மரத்தில் அண்மையில் கட்டியது செம்போத்து.  ஆனால் பாவம்.  கட்டிய அந்த வீட்டில் வாழ்ந்து குழந்தை குட்டிகள் பெற்றிடக் கொடுப்பினை இல்லை அதற்கு.  காரணங்கள் இரண்டு.  ஒன்று அது விதவை.  அதன் கணவனை பறவை மாமிசம் உண்ணும் யாரோ சிலர் சென்ற ஆண்டு இறுதியில் கொன்று விட்டனர்.  சமீபத்தில் அவரையும் தான் தங்கள் உண்டி வில்லுக்கு இரையாக்கினர். 

இப்போது அந்தக் கூண்டு மட்டும் நிற்கிறது ஊமை சாட்சியாய் எங்கள் விருந்தினர் வாழ்ந்ததற்கு.


(படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

கொடுப்பினை எங்களுக்குந்தான் இல்லை விருந்திரை இனி தினமும் கண்டு களித்திட. :((


நடராஜன் கல்பட்டு

Monday, 15 April 2013




இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (28) முனியா

முனியா என்றதும் நான் யாரையோ கூப்பிடுவதாக நினைத்து விடாதீர்கள்.  ஆங்கிலத்தில் ‘Munia’ என்பது ஒரு பறவை.  சிட்டுக் குருவியை விட சிறியது.  தேன் சிட்டை விட உருவத்தில் சற்றே பெரியது. 

நம் நாட்டிலேயே ஐந்தாறு வித முனியாக்கள் உள்ளன.  அவை:

1.  நெல்லுக் குருவி என்றழைக்கப் படும் கருப்பு தலை கொண்ட முனியா (Black-headed munia),






2.  சிவப்பு ராட்டினம் என்ற பெயர் கொண்ட சிவப்பு முனியா (Red munia),






3.  பொரி ராட்டினம் என்றழைக்கப் படும் புள்ளி முனியா (Spotted munia).



http://www.finchworld.com/spice.html 



4. வெள்ளை ராட்டினம் எனப் பெயர் கொண்ட வெள்ளை முதுகுகொண்ட முனியா(White-backed munia),




5. வாயலாட்டான் அல்லது வெள்ளி மூக்கான் என்றழைக்கப் படும் வெள்ளைத் தொண்டை முனியா (White-throated munia).




6.  கருப்புத் தொண்டை கொண்ட முனியா (Black-throated Munia)






முனியாக்கள் கிட்டத்தட்ட வருடம் பூராவுமே இனப் பெருக்கம் செய்யும்.  அவை புல் வைக்கோல் இவற்றைக் கொண்டு பந்து போன்ற கூட்டினை அமைக்கும்.  பந்துக்குள் நுழைய பக்க வாட்டில் ஒரு வட்ட வடிவ நுழை வாயில் அமைகப் பட்டிருக்கும்.



தானியங்களைத் தின்று வாழும் இந்தப் பறவைகள், கூட்டம் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை.  சிட்டுக் குருவிகளைப் போல் அல்லாது இவற்றைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்க்க முடியும்.  இந்தத் தகுதியே இதன் முதல் எதிரி.
 
வனவிலங்குப் பாதுகாபு சட்டம் அமூலில் இருக்கிறதோ இல்லையோ பறவைகள் விற்கும் கடைகளில் அதிக அளவில் முனியாக்களைப் பார்க்கலாம். 

இந்தப் பறவைக்கு மற்றொரு எதிரியும் உண்டு.  அதுதான் சில நிலக்கரி சுரங்கங்கள்.  இந்த அழகிய பறவைக்கும் நிலக்கரிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறிர்களாஇருக்கிறது சம்பந்தம். 

நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைத்துத் தகர்த்த பின் அந்த இடத்தில் ஆட்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய விஷ வாயு இருக்கிறதா என்று கண்டறிய ஒருவர் ஒரு கூண்டில் முனியாவை எடுத்துக் கொண்டு முன்னே செல்வார்.  முனியாவின் தலை சாய்ந்து உயிர் விட்டாலோ அல்லது உயிர் விடும்போல் தோன்றினாலோ உடனே ஆட்கள் எல்லோரும் பின் வாங்கி விடுவார்கள். 

பின்னர் குழாய்கள் மூலம் வெளிக் காற்றினை சுரங்கத்திற்குள் செலுத்தி விஷ வாயுவை வெளி ஏற்றுவார்கள்.  நாம் உயிர் பிழைப்பதற்காக பாவம் இந்தப் பறவைகள் உயிர் விட வேண்டும்!  இம் முறை ஐம்பதுகளில் பழக்கத்தில் இருந்து வந்தது.  தற்போது மின் அணு நுண் கருவிகள் முனியாவின் வேலையை எடுத்துக் கொண்டிருக்கலாம்.

முனியாவைப் பார்க்கும் போதெல்லாம், மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று எனக்குத் தோன்றும்.  நாம் கண்டு களிக்க இறைவன் எப்படியெல்லாம் காட்சி யளிக்கிறார்!


நடராஜன் கல்பட்டு