Saturday 29 December, 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (14) பக்கி

ஒரு பொருள் தனக்குக் கிடைக்க வேண்டுமே என்பதற்காக லோ லோ என்று அலைபவனை ஏண்டா பக்கியாட்டம் அலயறே ?” என்று கேட்பார்கள்.

பக்கி என்றே ஒரு பறவை உண்டு.  அதுதான் ஆங்கிலத்தில் நைட்ஜார் (Nightjar) என்றழைக்கப் படும் பறவை.  இதற்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் மற்றுமொரு பெயரும் உண்டு.  தமிழில் பாதுகைக் குருவி என்றும் ஆங்கிலத்தில் கோட் ஸக்கர் (Goat sucker) என்றும் இதனை அழைக்கின்றனர்.  இப்பெயர்கள் காரணப் பெயர்கள்.  இது பற்றி பின்னர் பார்ப்போம்.

விஞ்ஞான ரீதியாக இதற்கு அளிக்கப்பட்ட பெயர் கேப்ரிமல்கஸ் ஏஷியாடிகஸ் (Caprimulgus asiaticus) என்பதாகும்.  கேப்ரிமல்கஸ் என்றால் லத்தீன் மொழியில் ஆட்டுப் பால் உரிஞ்சி என்று பொருள்.

பக்கி  பகலில் படுத்துறங்கி இறவில் வெளிக் கிளம்பும் விட்டில் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் ஒரு பறவை.  பறந்து கொண்டு இருக்கும் போதே பூச்சிகளைப் பிடிக்க லாயக்காக அகலமான வாயினையும், அலகின் இரு பக்கங்களிலும் பூனைக்கு மீசை முளைத்திருப்பதைப் போன்ற ரோமங்களையும் கொண்டது பக்கி.

இரவில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உட்கார்ந்திருக்கும் இப் பறவையின் கண்கள் காரின் விளக்கு வெளிச்சத்தில் சிவப்பு ஆபரணக் கற்கள் போன்று பிரகாசிக்கும்.  காரின் விளக்கு ஒளியில் தென்படும் விட்டில் பூச்சிகளை பறந்து சென்று பிடித்துத் தின்னும்.  அவ்வாறு ரோடின் குறுக்கே பறந்து செல்லும் போது சில சமயம் காரில் அடிபட்டு விழுவதும் உண்டு.


சிவப்பு ஆபரணக் கல் போன்று ஜ்வலிக்கும் கண்
(http://orientalbirdimages.org/search.php?action=searchresult&Bird_ID=579)

இப்பறவை படுத்துறங்குவது ஆற்றுப் படுகைகளிலும், தரிசல் காடுகளிலும் காணும் செடிகளின் அடியிலோ அல்லது மரக் கிளைகளிலோ. அப்படிக்  கிளைகளில் உறங்கும் போது மற்ற பறவைகளைப்  போல குறுக்கு வாட்டில் உட்காராமல் நீள வாட்டில் உட்கார்ந்து தூங்கும்.  ஏன் தெரியுமா?  அப்பொதுதானே மரப் பட்டையோடு ஒன்றி விடும் பக்கி, மரக்கிளையில் உட்கார்ந்திருப்பது அதன் எதிரிகளுக்குத் தெரியாது.

உறக்கம் என்றால் ஆழ்ந்த நித்திரை அல்ல.  இதன் கண் இமைகள் முற்றிலுமாக மூடி இருக்காது.  சிறிய கீற்றாகத் திறந்திருக்கும்.  இவ்வாறு ஆழ் நித்திரை இன்றி உறங்குவதால் அருகில் சத்தமோ எதிரிகளோ நெருங்கினால் கிட்ட வரும் வரை அசைவின்றி இருக்கும் பக்கி திடீரெனப் பறந்து செல்லும்.  கிளையில் நீள வாட்டில் உட்கார்ந்து தூங்கும் பக்கி
http://en.wikipedia.org/wiki/File:Lesser_Nighthawk.jpg

கருப்பு, கரும் பழுப்பு, பழுப்பு, வெளிர் பழுப்பு, வெள்ளை ஆகிய நிறங்கள் கொண்ட இதன் சிரகுகள் இது வாழும் சுற்றுப் புரத்தோடு ஒன்றி விடுவதால் இதனைக் கண்டு பிடிப்பது மிகக் கடினம்.  தனது மாய்மாலத்தில் கொள்ளை நம்பிக்கை பக்கிக்கு. அதனால் தான் கிட்ட நெருங்கும் வரை பறப்பதில்லை.

அடுத்த பக்கத்தில் உள்ள புகைப் படத்தினை நான் எடுக்கச் சென்ற போது குஞ்சு தனது இறக்கைகளை பட படவென அடித்தது, அம்மா....அம்மா.... எழுந்திரு.  யாரோ நம்மை நோக்கி வருகிறார் என்பது போல.  ஆனால் தாய்ப் பறவையோ, கவலைப்  படாதே. நாம் இருப்பது யாருக்கும் தெரியாது என்பது போல் அலட்டிக் கொள்ளாமல் இருந்தது.  கிட்ட நெருங்கிப் படம் எடுத்துக் கொண்டிருக்கையில் எனது காலடியில் இருந்த ஒரு சிறு கல் உருண்டு பக்கியின் அருகே ஓட அது திடீரெனப் பறந்தது.  


குஞ்சின் மீது தலை வைத்துப் படுத்துறங்கும் பக்கி
(கருப்பு   வெள்ளை படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

படுத்து உறங்கும் போது கவிழ்த்துப் போடப்பட்ட பாதுகை எனக் காணப் படுவதால் இதன் பெயர் பாதுகைக் குருவி என வந்திருக்க வேண்டும். 


நைட்ஜார் என்ற பெயர் ஒருகாரணப் பெயராகத்தான் இருக்க வேண்டும்.  ஏனெனில் இது இரவில் எழுப்பும் ஒலியான சக்...சக்...சக்...சர்ர்ர்…” என்பது காதுக்கு நாராசமாக (jarring sound) இருக்கும்.

இரவு நேரங்களில் விட்டில் பூச்சிகளைத் தேடி ஆட்டுத் தொழுவங்களில் பறப்பதால் மேலை நாட்டவர் இப்பறவை ஆடுகளின் பாலை உரிஞ்சிக் குடிக்க வருவதாக எண்ணி இதற்கு ஆட்டுப் பால் உரிஞ்சி (Goat sucker) என்று பெயர் சூட்டினர்.

பக்கி பற்றிய ஒரு விசேஷத் தகவல் இதோ.

மண்ணை மண்வெட்டியால்  வெட்டும்போது சில சமயம் மண்ணுக்கடியில் சில மாதங்களாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் தவளையைக் காணமுடியும்.  அதே போல வட அமெரிக்காவில் வாழும் பக்கிகள் குளிர் நாட்களில் சுமார் மூன்று மாதங்கள் ஒரு வித சலனமும் இன்றி சிறு பள்ளங்களில் தூங்குமாம்.  அப்பொது அவற்றின் எடையில் 28 கிராம் கொழுப்பு மட்டுமே குறையுமாம்.
நம் நாட்டில் காணப் படும் பக்கிகளுக்கு இத் தூக்கம் தேவை இல்லை.


இயறையின் எழிலில் தான் எத்தனை இன்பக் காட்சிகளை அளிக்கிறாய் இறைவா !

                                      நடராஜன் கல்பட்டு
         

Wednesday 26 December, 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (13) இருவாட்சி
பறவைகளில் நாம் தையல்காரர், நெசவாளர், பாடகர், தச்சர்   இவர்களைப் பார்த்தோம்.  ஒரு கட்டிடத் தொழிலாளியைப் பார்க்க வேண்டாமா?

இருவாட்சி, மலை இருவாட்சி, செண்டு என்ற சொற்கள் மலர்களைப் பற்றிப் பேசும்போது  வரும் வார்த்தைகள்.  இச் சொற்களையே தன் பெயராகக் கொண்ட ஒரு வினோதப் பறவையும் உண்டு.  அதுதான் ஆங்கிலத்தில் ஹார்ன்பில் (Hornbill) என்றழைக்கப் படும் பறவை.  நம் நாட்டில், ரெட்டைச் செண்டு அல்லது சின்ன இருவாட்சி (Grey Hornbill) என்ற ஒரு பறவையும், மலை இருவாட்சி (The Great Indian or Malabar Hornbill) என்னும் பறவையயும் சுமார் ரெண்டாயிரம் அடிகளுக்கு மேல் உயர்ந்த பிரதேசங்களில் மரங்களில் வசிப்பதைக் காணலாம்.

பெயருக்கு ஏற்றாற்போல் இவற்றின் மேல் அலகு கொம்பு முளைத்தது போன்று இருக்கும்.  இந்த உருப்பின் உபயோகம் என்ன தெரியுமா ?

இருவாட்சி மரப் பொந்துகளில் தனது கூட்டினை அமைக்கும்.  முட்டைகள் இட்டபின் அவற்றினை அடை காக்கப் பெண் பறவை கூட்டினுள் உட்கார்ந்து கொண்டு, தனது எச்சத்தைக் கொண்டு பொந்தின் துவாரத்தினை தனது கொம்பு முளைத்த அலகினை கட்டிடத் தொழிலாளியின் கையில் உள்ள கொலுறு போன்று உபயோகித்து காரை பூசியதுபோல் அடைத்துவிடும்.  பின் அதில் ஒரு சிறு துவாரம் செய்து விடும்.  அடுத்த பதினைந்து இருபது நாட்களுக்கு மனைவிக்கு உணவு கொண்டு வந்து ஊட்டிவிட வேண்டியது கணவனின் பொறுப்பு.  இந்த வேலையைச் செய்ய வேண்டி இருப்பதால் ஆண் பறவை தான் உண்ண நேரமின்றி இளைத்துத் துரும்பாகிவிடும்.  பெண் பறவையோ உட்கார்ந்த இடத்திலேயே உண்டு உறங்குவதால் கொழுத்துவிடும்.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வந்தபின், தாய்ப் பறவை பூசிய காரையினை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும்  முன் போலவே பூசிவிட்டு, தாய் தந்தை இருவருமாக குஞ்சுகளுக்கு இரை கொண்டு வந்து கொடுக்கும். இப்பறவைகளின் உணவு ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களின் பழங்கள்.

இனி பாருங்கள் இருவாட்சியின் இரு காட்சிகளை.

இரெட்டைச்செண்டுக் குருவி அல்லது சின்ன இருவாட்சி
(Grey hornbill)
(http://en.wikipedia.org/wiki/Image:Indian_Grey_Hornbill_I_IMG_4051.jpg)
                               

மலை இருவாட்சி (The Malabar Great Indian Hornbill)
(http://en.wikipedia.org/wiki/Image:Doppelhornvogel-09.jpg)

இயற்கையின் எழிலினைக்கூட்ட எப்படியெல்லாம் படைப்புகளைத் தந்துள்ளான் இறைவன் ! நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப்  படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான் ?

                                      நடராஜன் கல்பட்டு

Friday 21 December, 2012

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (12) தவிட்டுக் குருவி


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (12) தவிட்டுக் குருவிசாம்பல் நிறத்தில் மைனா அளவில் இருக்கும் தவிட்டுக் குருவியை நமது தோட்டங்களில் காண முடியும். ஒன்று இரண்டாக அல்ல, ஏழெட்டு குருவிகள் அடங்கிய ஒரு கும்பலாக  எங்கிருந்தோ திடீரென வந்திறங்கித் தரையில் கிடக்கும் இலை சரகுகளைத் தள்ளி அதனடியில் கிடைக்கும் புழு பூசிகளை உண்ணும்.  அப்போது இப்பறவைகள், கீச்..மூச்”…“கீச்..முச்”, என்று பலமாக குரல் எழுப்பும், எல்லாக் குருவிகளுமாக ஒரே சமயத்தில்.  அதனால் தான் இந்தக் குருவியின் ஒரு ஆங்கிலப் பெயர் ‘Babbler’  என்பதாகும்.  பேப்ளிங் என்றால் பொருள் புரியா வண்ணம் கூச்சல் எழுப்புவது.  விஞ்ஞான ரீதியான் பெயர் Turdoides caudatus என்பது.
பார்ப்பதற்கு ஒன்றும் அழகற்ற நிறத்தில் இருக்கும் இந்தக் குருவியின் முட்டைகளின் நிறம் என்ன தெரியுமா?  நாம் திருடிச் சென்று விடலாமா என்று நினைக்கும் அளவிற்கு அழகான நீலப் பச்சை நிறம் !

              “..என்ன அழகு?  திருடிச் செல்வோமா?...”
                         (http://i159.photobucket.com/albums/t123/amyl65/eggs0512.jpg)

தவிட்டுக் குருவியின் மற்றொரு ஆங்கிலப் பெயர் ‘Seven sisters’ என்பதுஇதுவும் காரணப் பெயரேகாரணம் என்னவென்று பாருங்கள்.  ஒரு பறவை கூடு கட்டி முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து இருந்தால் குஞ்சுகளின் சித்தப்பா, சித்தி, மாமா, மாமி என எல்லொருமாக குஞ்சுகளுக்கு இரை கொண்டு வந்து கொடுப்பார்கள்.  ஏழு சகோதரிகள் என்று பெயர் வந்த காரணம் இப்போது புரிகிறதா ?
                                                                                                                     
நாம் அவனைக் கண்டு களிக்க எத்தனை காட்சிகளை இயற்கையின் எழிலில் நமக்கு அளிக்கிறான் இறைவன் பார்த்தீர்களா ?

(படங்கள் இணைய தளங்களில் இருந்து)

                                            நடராஜன் கல்பட்டு                                                                                            

                                                                                                                                                                   

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : 11. தேனீ தின்னும் பச்சைக் குருவி 


தேனீக்களைத் தின்று வாழ்வதெற்கென்றே ஒர் பறவையைப் படைத்திருக்கிறான் ஆண்டவன்.  அதுதான் தேனீ தின்னும் பச்சைக் குருவி.இதன் வண்ணத்தைப் பார்த்து சிலர் இப் பறவையை கிளியின் குஞ்சோ என்று எண்ணிவிடக் கூடும்.  ஆனால் இதன் அலகும் வால் சிறகுகளின் நுனியில் கம்பி போல நீண்டிருக்கும் நடுச்                                 சிறகுகளும் இது கிளிக் குஞ்சல்ல என்பதைக் காட்டி விடும்.  

இந்தக் குருவி கிராமப் புரங்களில் தந்தி, மின் கம்பிகளின் மீதோ, வேலிக் கம்பிகளின் மீதோ அல்லது செடிகளின் ஒரு உயர்ந்த கிளையின் மீதோ உட்கார்ந்திருக்கும்.  திடீரென அது சிறு தூரம் பறந்து சென்று பின் திரும்பி வந்து முதலில் உடகார்ந்திருந்த இடத்திற்கே வந்து சேரும்.  அப்போது பார்த்தால் அதன் அலகில் ஒரு தேனீ இருக்கும்.  தலையை சற்றே தூக்கி இரண்டு மூன்று விழுங்கலில் தேனீயைத் தின்னும்.

ராம பாணம் குறி தப்பாது என்பார்கள்.  வல்லரசுகள் படைத்த ஏவு கணைகள் கூட சில சமயம் குறி தப்பலாம்.  ஆனால் தேனீத் தின்னியின் குறி ஒரு நாளும் தப்பாது.

பல தேனீக்களை உண்ட சில நேரத்துக்குப் பின் தேனீத் தின்னும் குருவி அதன் வாயினால் சுமார் ஒரு சென்டிமீடர் நீளம் உள்ள நீண்ட கோழி முட்டை வடிவிலான ஒரு கருப்புக் கட்டியை வெளியே துப்பும். அதைக் கையில் எடுத்து பார்த்தால் அதில் அப் பறவையால் ஜீரணிக்க முடியாத தேனீயின் இறக்கை, கால்கள் மற்றும் உடல் கூடு இவை இருக்கும்.


வினாடிகளில் வெளி வரப் போவது ஜீரணிக்க முடிபியாத பகுதிகள்.
                                                          
தேனீத் தின்னிகள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் பேன் போன்ற சிறு பூச்சிகளிடம் இருந்து விடுபட மணலில் குளித்திடும்.

மனல் குளியல்


தேனீத் தின்னிகள் கூடு அமைப்பது மண் சரிவுகளில்.  அவை எலி வளை போன்ற பொந்து செய்து அதில் கூடு கட்டும்.

இயற்கையின் எழிலில்தான் இறைவன் நாம் பார்த்து ரசிக்க                                                      
எத்தனை காட்சிகளை அளித்துள்ளான் ! 
                                   
 (முதல் இரண்டு படங்கள் சுதீர் ஷிவ்ராம் எடுத்தவை. மூன்றாவது விக்கிபீடியா தளத்தில் இருந்து)


                     நடராஜன் கல்பட்டு


                     

Tuesday 18 December, 2012


இயற்கையின் எழலில் இறைவனைக் காண்போம் (10) மரங்கொத்தி

மரங்கொத்தி என்றவுடன் நம் அனைவருக்கும் மனத்திரையில் தோன்றும் பறவை இதோ இந்தப் பறவை தான்.                  

கருங்கல் இடை வெளியில் ஹூபோவின் கூடு

ஆனால் இப் பறவையின் பெயர் ஆங்கிலத்தில் ஹூபோ என்பதாகும்.  விஞ்ஞானிகள்  இதை உபாபா இபாப்ஸ் என்பர்.  காரணம் என்ன தெரியுமா?  இது கத்தும்போது உப்பாப்பாப்...உப்பாப்பாப்.. என்று குரல் எழுப்பும் என்பதுதான்.
         
உண்மையான மரங்கொத்தி போல இது மரத்தைக் கொத்தி ஒரு பொந்து செய்து அதன் கூட்டை அமைப்பதும் இல்லை.  மரம் கொத்தி போல மரப் பட்டைகளின் இடையே இருந்து புழு பூச்சிகளைத் தேடி உண்பதும் இல்லை.  சுவர்களில் உள்ள  இடைவெளி களிலோ அல்லது மரங்களில் ஏற்கெனவே உள்ள பொந்துகளிலோ தனது கூட்டினை அமைத்துக் கொள்ளும்.  இரை தேடுவது தரையில் கிடக்கும் இலை, சரகு, கற்கள் இவற்றைத் தள்ளி அவற்றுக்கடியில் கிடைக்கும் புழு பூச்சிகளை.

தரையில் இரை தேடும் ஹூபோ

இதன் கூட்டருகே மனிதர்களோ, பூனை, காகம் போன்றவையோ நெருங்கினால் குச்சி போலத் தோன்றும் கொண்டைச் சிரகினை விசிறி போல் விரித்துக் கொண்டு சர்...சர்...சர்... என்று கத்தியபடி                                                                                                                                  மேலும் கீழுமாகப் பறக்கும். 

("யாரு என் கூட்டருகே வரது?"


உண்மையான மரங்கொத்திகள் அடிமரத்தினைத் தனது கால் விரல்களால் இறுகப் பிடித்த படி சுற்றிச் சுற்றி மேல் ஏறும்.  அவ்வாறு ஏறும் போது தனது அலகினால் மரப் பட்டையினை டொக் டொக் டொக் என்று தட்டிக் கொண்டே செல்லும்.  சில சமயம் ஏதோ மறந்து விடடாற்போல சர்ரென்று செங்குத்தாகக் கீழிறங்கி மரப் பட்டையினைத் தட்டிப் பார்க்கும்.  அப்படிச் செய்வது மரப் பட்டைகளுக்கு இடையே இருக்கும் புழு பூச்சிகள் மற்றும் வண்டுகள் செய்துள்ள துளைகள் இவற்றைக் கண்டு பிடிக்கவே.  உணவு கிடைக்கும் என்று தெரிந்த உடன் தனது வலுவான் அலகினைக் கொண்டு அவ்விடத்தில் ஒரு துளை செய்து தனது நீண்ட நாக்கினை உள்ளே விட்டு புழு பூச்சி வண்டு இவற்றை ஈட்டியினால் குத்தி இழுப்பதுபோல் வெளியே இழுத்து உண்ணும். 

மரங்கொத்தியின் நாக்கு 10 முதல் 15 சென்டிமீடர் நீளத்திற்கு எலியின் வால் போன்று இருக்கும். நுனியில் அறை சென்டிமீடர் தூரத்துக்கு  ஈட்டி முனையில் இருப்பது போன்ற பல அலகுகள் இருக்கும்.  இவ்வாறு அமைந்திருப்பதால் புழு, பூச்சி, வண்டு இவற்றைக் குத்தி வெளியே கொண்டுவர முடிகிறது.

மரங்கொத்தி கூடு அமைப்பது பார்க்க வெகு வேடிக்கையாக இருக்கும்.  தனது கால் விரல்களினால் மரத்தினை இறுகப் பிடித்துக் கொண்டு உளி போன்ற அலகினால் வேகமாக டொக்..டொக்..டொக்.. என்று கொத்தி சுமார் மூன்றங்குலம் விட்டம் கொண்ட ஒரு துளை செய்து பின் அத் துளையினை கீழ் நோக்கி 6 முதல் 8 அங்குல நீளத்திற்குக் கொண்டு செல்லும். பின் துளையின் விட்டத்தை சற்று அதிகரிக்கும்.  இவ்வாறு அதிகரிக்கப் பட்ட பாகம் 3 முதல் 4 அங்குலம் வரையிலான நீளத்திற்கு இருக்கும்.  இந்த பாகம் தான் அது முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும் அறை.  மரத் துகள்கள்தான் குஞ்சுகளுக்கு மெத்தை. 

மரங்கொத்தி கூடு அமைப்பதற்காக மரத்தினைக் கொத்தும்போது மின் துளைப்பானால் துளை போடுவது போல நாலா பக்கமும் மரத் துகள்கள் வாரித் தெரிக்கும்.  மரங்கொத்தியின் மற்றொரு தமிழ்ப் பெயர் தச்சன் குருவிசரியான பெயர் தான்!

மரங்கொத்திகளுக்கு இறைவன் அதன் வாழும் முறைக்கேற்ப சில விசேஷ அமைப்புகளை அளித்திருக்கிறான்.  அது  மரத்தினைக் கொத்துவதற்கு ஏற்ற உளி போன்ற அலகு, கொத்தும் போது ஏற்படக்கூடிய எதிர் சக்தியில் கீழே விழுந்து விடாமல் இருக்க
உடும்புப் பிடியெனப் பிடிக்கும் கால் விரல்கள், எதிர் அதிர்வுகளைத் தாங்கும் தசைகள் அடர்ந்த கழுத்து,  அதிர்வுகள் மூளைக்குச் சென்று தாக்காமல் இருக்க மிருதுவான மண்டை ஓடு, இரையைக் குத்தி வெளியே கொண்டு வர லாயக்கான நீண்ட நுனியில் அலகுகள் கொண்ட நாக்கு இப்படிப் பல.

பறவைகள் பலவிதம்
அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்
என்று கண்ணதாசன் பாடியது நினைவுக்கு வருகிறதா?

நம் நாட்டில் நான்கைந்து வகையான மரங்கொத்திகள் காணப் படுகின்றன.  அவற்றில் சிலவற்றினைக் கீழே பாருங்கள். 


தங்க நிற முதுகு கொண்ட மரங்கொத்திதங்க நிற மார்பு கொண்ட மரங்கொத்தி
(http://nationalzoo.si.edu/ConservationAndScience/MigratoryBirds/Featured_photo/Images/Bigpic/gfwo5.jpg)
                            
  
இமயத்து மரங்கொத்தி                   

                                          
இயற்கையின் எழிலில் தான் எத்தனை இன்பம் அளிக்கிறாய் இறைவா !                            
                                              

                                   (கருப்பு வெள்ளை படங்கள் எடுத்தது கல்பட்டு நடராஜன்)


நடராஜன் கல்பட்டு