Saturday, 15 December, 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (9) ஆந்தை

ந்தை நம்மில் பலரால் கெட்ட பறவை எனத் தவறாகக் கருதப் படும் ஒன்று.  ஒரு வீட்டருகே ஆந்தை அலறினாலோ அல்லது கோட்டான் (அது ஒரு வகை ஆந்தை) கூவினாலோ அந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும் என்பது சிலர் எண்ணம்.  இது உண்மை அல்ல.  அப்படியே உண்மை என்றாலும் ஆந்தை செய்ததென்ன ?  முன் அறிவிப்பு தந்தது.  மரணத்தை அது ஏற்படுத்தவில்லை.

தபால் இலாகாவின் தந்தி ஊழியர் தந்திகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார் அவற்றில் சில நல்ல செய்திகளாக இருக்கும்.  சில கெட்ட செய்திகளாக இருக்கும்.  நல்ல செய்திகள் கொண்டு வந்தால் அவரை வாழ்த்துவதும் கெட்ட செய்தி கொண்டு வந்தால் அவரை வீழ்த்துவதும் இல்லையே. ஆந்தையை மட்டும் நாம் ஏன் வெறுக்க வேண்டும் ?  ஏன் சிலரைப் போல் அவற்றைக் கண்டவுடன் அடித்துக் கொல்ல வேண்டும் ?

உண்மையில் ஆந்தை மனிதனின் நண்பன்.  எப்படித் தெரியுமா ?
வயல்களிலும்  கிடங்குகளிலும் தானியங்களுக்கு பெருத்த சேதம் விளைவிப்பது எலிகள். 



எலிகள் பற்றிய ஆராய்ச்சியில் வல்லுனரான ஸ்டீபன் பேடர்ஸ்பி சொல்கிறார், இரண்டு எலிகள் ஓர் ஆண்டில் 500 முதல் 2000 வரையாகப் பெருகும், என்று.  இவ்வாறு அளவுக்கு மீறி பெருகும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது அவற்றையே உணவாக உட்கொள்ளும் ஆந்தைகளும் பாம்புகளும் தான்.  ஆந்தைகள் இல்லை என்றால் என்னவாகும் என்பதை எண்ணிப் பாருங்கள்.  எலிகளின் எண்ணிக்கை கட்டுக்கு மீறிப் பெருகும்.  எலிகள் தானியங்களுக்கு சேதம் விளைவிக்கும் என்பது மட்டுமல்ல.  ஆட்கொல்லி நோய்களான ப்ளேக், லெப்டொ ஸ்பிரோஸிஸ் இவற்றைப் பரப்புவதும் எலிகள்தான்.  இப்பொது புரிகிறதா ஆந்தை எப்படி மனிதனின் நண்பன் என்று ?

(படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

இந்த ஆந்தை தன் குஞ்சுக்கு என்ன இரை கொடுத்து இருக்கிறது என்று தெரிகிறதா ?  ஒரு முழு எலி.  ஒரு குஞ்சு ஒரு இரவில் ஒன்றிரண்டு எலிகளைத் தின்னும் என்றால் தாயும், தந்தையும் எவ்வளவு எலிகளை உண்ணும்?

படத்தில் இருப்பது பெரிய ஆந்தை.  இதன் ஆங்கிலப் பெயர் “The Indian Great Horned Owl”.  விஞ்ஞான ரீதியான பெயர் “Bubo Bubo” என்பதாகும்.  இது காரணப் பெயரே.  பெரிய ஆந்தை கத்தும்போது பூபுபோ...........பூபுபோ........... என்று கத்தும்.

நம் நாட்டில் நான்கைந்து வகையான ஆந்தைகளைக் காணலாம்.
அவை சின்ன புள்ளி ஆந்தை (Spotted owlet) , பெரிய ஆந்தை (The Indian Great Horned Owl) , கோட்டான் என்றழைக்கப் படும் தானியக் கிடங்கு ஆந்தை (Barn owl), மீன் பிடிக்கும் ஆந்தை (Brown Fish Owl) , இமாலயப் பனி ஆந்தை (Himalayan Snowy Owl) என்பவையாகும்.  இவற்றை இப்போது பாருங்கள்.

                                                          

 சின்னப் புள்ளி ஆந்தை (The Spotted Owlet)
  (கருப்பு வெள்ளை படம் எடுத்தது க. ந. நடராஜன்)

புள்ளி ஆந்தை நகரத் தெரு ஓரங்களில் உள்ள மரங்களின் பொந்துகளிலோ அல்லது பாழடைந்த கட்டிடங்களிலோ வசிக்கும்.  சூரியன் மறைந்தவுடன் இவை வெளியே வந்து கெர்ர்ர்.... என ஒலி எழுப்பும்.  இதன் உணவு வண்டுகள், பூச்சிகள், சுண்டெலி, பல்லி, ஓணான் போன்றவையாகும்.


              கோட்டான் என்றழைக்கப் படும் தானியக் கிடங்கு ஆந்தை (Barn Owl)
(படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு)


(இமயத்துப் பனி ஆந்தை)
(படம் இணையத்தில் இருந்து)

பழுப்பு நிற மீன் பிடிக்கும் ஆந்தை (Brown Fish Owl)
(படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

ஆந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் பல சுவையான உண்மைகள் தெரிய வரும்.

ஆந்தைகள் பகலில் தூங்கி இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் பறவைகள்.  அதற்கேற்றார்ப் போல் அவற்றின் கண் பார்வை அமாவாசை இரவிலும் துல்லியமாகத் தெரியும்.

ஆந்தையின் இறக்கையில் உள்ள இறகுகள் மிக மிக மிருதுவானவை.  ஆகவே அவை பறக்கும் போது சத்தமே கேட்காது.  புறா, காடை, கவுதாரி இவை பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களா ?   பட பட பட வென சத்தம் வரும்.  அதற்கு நேர் எதிர் ஆந்தைகள்.  அப்படி இருந்தால்தானே தன்னைப் பிடிக்க ஆந்தை வருகிறது என்பது எலிகளுக்குத் தெரியாது ,  ஆந்தைக்கும்  நிச்சயமாக உணவு கிடைக்கும் ?                              

ஆந்தை தன் கழுத்தை கிட்டத் தட்ட 359 டிகிரி திருப்ப வல்லது.  ஆந்தையைச் சுற்றி நாம் நடந்தால் இது புலப்படும்.  359 டிகிரி திருப்பிய தன் தலையை நொடிப் பொழுதில் மீண்டும் 0 டிகிரி நிலைக்கே (ஆரம்ப நிலைக்கே) திருப்பிவிடும்.  இது நம் கண்களுக்குத் தெரியாது.  இது புறியாத சிலர் ஆந்தையைக் கொல்ல வேண்டுமென்றால் அதைச் சுற்றிச் சுற்றி சில முறை நடந்தாலே போதும்.  அது தானே தன் கழுத்தைத் திருகிக் கொண்டு இறந்துவிடும் என்பர் !

ஆந்தை (குஞ்சுகள் உட்பட) முழு எலியை விழுங்கிவிட்டு சில மணி நேரத்திற்குப் பின் வாயினால் ஒரு உருண்டையைக் கக்கும்.  அந்த உருண்டையைக் கையில் எடுத்துப் பார்த்தால் அதில் எலியின் மயிரும், நகங்களும், எலும்புகளும் மட்டும்தான் இருக்கும்.  இம்மியளவும் மாமிசமோ ரத்தமோ இருக்காது.  அவ்வளவு நல்ல ஜீரண சக்தி ஆந்தைக்கு.  அதனால் தானோ என்னவோ, உலகின் தலை சிறந்த ஜீரண சக்திக்கான மருந்து என்று சொல்லப்பட்டு வந்த ஹ்யூலெட்ஸ் மிக்ஸ்சரின் ட்ரேட் மார்க் ஆந்தை ! 


தானியக் கிடங்கில் பிடித்த எலியுடன் திரும்புகிறது கோடுகள் கொண்ட ஆந்தை.

             (இந்த கருப்பு வெள்ளை படம் டி. என். ஏ. பெருமாள் எடுத்தது )

பறந்து வருவது வேடம் தறித்த மனிதன் அல்ல.  மனிதன் போல முகம் உடய தானியக் கிடங்கு ஆந்தை.

 (தனியக் கிடங்கு ஆந்தை வண்ணப் படம் இணைய தளத்தில் இருந்து)

 ஆந்தையிலும் அழகும் ஆச்சரியமூட்டும் விஷயங்களும் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். இயற்கையின் எழிலை நாம் கண்டு களிக்கும்போது அவற்றைப் படைத்த இறைவன் நமது கண்களுக்குத் தெரிகிறான் அல்லவா ?

                                                                              

நடராஜன் கல்பட்டு
                    
                                                                                                    

No comments:

Post a Comment