Friday 18 October, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (32) அழகே யமனாய்

சில விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அவற்றின் அழகான உடல் உறுப்புகளே யமனாகி விடுகின்றன.  அவற்றில் சில வற்றைப் பார்ப்போமா?
மனித வர்க்கத்தின் செயல்களால் இந்த உலகில் இருந்து பல விலங்குகளும் பறவைகளும் மறைந்து விட்டன.  விவரம் தெரிந்து முற்றிலுமாக முதல் முதலாய் மறைந்த பறவை டோடோ என்னும் பறவை.
டோடோ


மொரீஷியஸ் தீவில் மனித நடமாட்டம் இன்றி இருந்த நாட்களில் மிக அதிக அளவில் வாழ்ந்த ஒரு பறவை இனம் இது.  சுமார் மூன்றடி உயரமும் 20 முதல் 25 கிலோ வரையான எடையும் கொண்ட இப் பறவை புறா இனத்தைச் சேர்ந்து.
இறக்கையென ஒரு உறுப்பு இருந்தும் பறக்க முடியாத பறவை இது.  ஒரு காலத்தில் இந்தப் பறவைக்கு எதிரிகள் யாரும் இருக்கவில்லை.  இதன் மாமிசம் உண்ண லாயக்கற்றதாக இருந்ததாம்.  ஆனாலும் மொரீஷியஸ் வழியே கப்பல்களில் சென்ற மாலுமிகள் அதன் சுருள் சுருளான சிறகுகளுக்காக அவற்றை ஒரு தடி கொண்டு அடித்துக் கொன்றனராம்.  தன்னை அடிக்க வருகிறானே என்று அந்தப் பறவையும் ஓடித் தப்பீக்காது.  அருகில் நின்றிருக்கும் மற்றப் பறவைகளும் ஓடித் தப்பிக்காமல் அசடுபோல் அங்கேயே நின்று கொண்டு வேடிக்கை பார்த்திருக்கும்.  அடுத்து அதன் உயிர் போகும் என்பது தெரியாது அதற்கு.
பின் நாட்களில் மக்கள் அத்தீவில் குடியேறிய போது அவர்களுடன் வந்த பூனை, நாய் போன்ற மிருகங்கள் எஞ்சி இருந்த டோடோக்களை முற்றிலுமாக அழித்தன.
யானை
யானையின் தந்தம் அதற்கு மிகவும் உபயோகமான ஒரு உறுப்பு.  மரப் பட்டைகளைக் கிழித்தெடுக்க, தன்னைத் தாக்க வந்திடும் புலி சிங்கம் போன்றவற்றோடு போராட என பலவிதத்திலும் அதற்கு உதவிடும் ஒன்று. 


அழகிய தந்தம் கொண்ட யானை – படம் சுதீர் ஷிவராம்

அதே தந்தம், சந்தனக் கட்டை போல, நுணுக்கமான வேலைப் பாடுகள் உடைய சிற்பக் கலைப் பொருட்களைத் தயார் செய்வதற்கு உபயோகப் படுத்த ஏற்றதாக உள்ளது.  தந்தத்தினை எடுப்பதற்காக யானையைக் கொல்கின்றனர்.  அதனால் யானையின் தந்தமே அதற்கு யமன் ஆகிறது.


தந்தச் சிற்பம் – சீனர்களின் கைத்திறன்

நம் நாட்டில் சட்டம் இருக்கிறது யானைகளைக் கொல்லக் கூடாது என்று.  இருந்தாலும் அவ்வப்போது நாம் பத்திரிகைகளில் படிக்கிறோம் கொல்லப் பட்ட யானைகளின் தந்தங்கள் அறுக்கப் பட்ட நிலையில் அவற்றின் சடலங்கங்கள் காடுகளில் தென்படுவதைப் பற்றி.  சட்டமிருந்து என்ன பயன்.  சட்டத்தை மதிப்பவர்கள் இருந்தால் தானே?
புலி
புலி ஒரு கம்பீரமான தோற்றம் கொண்ட விலங்கு.  அதன் மஞ்சளில் கருப்பு வரிகள் கொண்ட தோல் அதற்கு அழகு சேர்க்கிறது.


புலி – படம் ஹிந்து நாளிதழில் இருந்து

புலியின் தலையும் தோலும் சொகுசு மாளிகைகளில் தரை விரிப்பாயும், சில ஆன்மீக வாதிகளுக்கு ஆசனமாயும் மாறுகிறது.  அதன் கூரிய நகங்களோ சிலருக்கு கழுத்தில் ஆபரணமாய்த் தொங்குகிறது.புலித் தோல் தரை விரிப்பாய் 


புலி நகங்கள் ஆபரணமாய்

மான்

மான் ஒரு அழகான பிராணி.  அது தன் கொம்புகளோடு நம்மை நிமிர்ந்து பார்த்திடும் அழகே தனி


ஆண் புள்ளி மான் – படம் சுதீர் ஷிவ்ராம்

கொம்புகளோடு அழகாய்த் தோன்றிடும் இதன் தலையை சுவற்றில் மாட்டித் தங்கள் வீட்டிற்கு அழகு சேர்ப்பதற்காகவும், தரையில் இதன் தோலை விரித்து அதன் மீதமர்வதற்காகவும் இந்த மான் கொல்லப் படுகிறது.


மான் தலை வீட்டின் சுவற்றை அலங்கரிக்க

பாம்பு

பாம்பின் தோல் பார்க்க மிக அழகான ஒன்று.


நல்ல பாம்புபவழப் பாம்பு

பாம்புகளின் தோலை உரித்துப் பதப் படுத்தி கைப் பைகள், இடுப்பிற்கு பெல்டுகள் என்று தயாரித்து விற்கின்றனர்.

பாம்புத் தோலால் ஆன பெண்கள் கைப் பையும் இடுப்பு பெல்டும்

பாம்புத் தோல் உலகளாவிய ஒரு பெரிய வியாபாரம்.  இதற்காக பல பாம்புகள் கொல்லப் படுகின்றன.
இந்தக் கொடுமைகளுக்குப் பறவைகளும் விதி விலக்கல்ல.

மயில்
மயில் ஒரு அழகான பறவை.  அது நம் நாட்டின் (இந்தியாவின்) தேசீயப் பறவை. 

மயில்
தேசீயப் பறவைதான்.  கொல்லக் கூடாது தான்.  ஆனாலும்…………………………
அதன் அழகிய தோகையே அதற்கு யமன்.  அழகிய “மயில் கண்கள்” கொண்ட அதன் தோகை சிறகுகளுக்காக மயில்கள் கொல்ல படுகின்றன.மயிலின் தோகை இறகுகள்


நெருப்புக் கோழி
பறவைகளில் மிகப் பெரியது நெருப்புக் கோழி.  இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாத பறவை இது.


நெருப்புக் கோழி
நெருப்புக் கோழியின் வெண் சிறகுகள் மிகவும் மிருதுவானவை.  சற்றே நீண்டிருக்கும்.  இவற்றை மேல் நாட்டுப் பெண்கள் தங்கள் தலைகளில் அணிந்திடும் தொப்பிகளை அலங்கரிக்க உபயோகிக்கின்றனர்.


சீமாட்டியின் தலையில் உள்ள தொப்பியில் நெருப்புக் கோழியின் சிறகுகள்

இன் நாட்களில் நெருப்புக் கோழிகள் அதன் மாமிசத்திற்காகவும் மிருதுவான சிறகுகளுக்காகவும் பண்ணைகளில் வளர்க்கப் படுகின்றன.

பெரிய வெண் கொக்கு (Large egret)


பெரிய வெண் கொக்கு – படம் சுதீர் ஷிவராம்
பாலின் நிறம் கொண்ட வெண் கொக்கு பார்க்க மிக அழகான ஒரு பறவை.  ஓடு மீன் ஓட உரு மீன் வருமளவும் காத்திருக்க வேண்டுமா அல்லது ஒற்றைக் காலில் தவம் செய்திட வேண்டுமா?  இவற்றைச் செய்திட கொக்குக்கு இணை யாரும் இல்லை.
இனப் பெருக்கக் காலத்தில் இந்தக் கொக்கின் உடலில் புதிதாக நுண்ணிய நீண்ட சிறகுகள் முளைக்கும்.  இந்த நீண்ட சிறகுகளும், மற்றும் உடல் பூறாவும் உள்ள சிறகுகளும் மிக மிக மிருதுவானவை.  நீண்ட சிறகுகள் ஆடை அலங்காரப் பொருளாகவும், மிருதுவான மெத்தைகள் தயாரிப்பதற்கும் உபயோகப் படுத்தப் படுகின்றன.வெண் கொக்கு சிறகு மெத்தை


இறகுகளால் சிகையலங்காரம்


தலைப்பாகையில் சிறகுகள்

இறைவன் தந்துள்ளான் பறவைகளுக்கும் விலகுகளுக்கும் அழகான மற்றும் அவற்றுக்குத் தேவையான உறுப்புகளை.  அவ்வுறுப்புகளே அவற்றுக்கு யமனாகி விடுகின்றன மனிதனின் பேராசையால்.

(கருப்பு வெள்ளை படம் க.ந.நடராஜன்.  மற்ற படங்கள் இணைய தளங்களில் இருந்து)
10-4-2011                                          நடராஜன் கல்பட்டு

5 comments:

 1. இறைவன் மற்ற உயிரினங்களையும் மனிதனுக்கு இணையாகத்தான் படைத்தான் என்பதை எப்போதுதான் உணருவோமோ!

  ReplyDelete
 2. மிகச்சிறப்பான பகிர்வு. சந்தோஷம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  அன்புடையீர்,

  நமஸ்காரங்கள்.

  இன்று தங்கள் பெயர் வலைச்சரத்தில் இடம்பெற்று பாராட்டிப்பேசப்பட்டுள்ளது.

  இணைப்பு இதோ:

  http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_9.html

  தங்களுக்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  பிரியமுள்ள
  கோபு [VGK] வை. கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete
  Replies
  1. உகளுக்கு இந்த மடல் பிடித்திருந்தது அன்று அறிய மகிழ்ச்சி.

   Delete
 3. வலைத் தளத்துள் இருந்த மடல்கள் பிடித்திருந்ததா?

  ReplyDelete