Tuesday 19 February, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (21) கரிச்சான் குருவி

கரிச்சான் குருவி என்று ஒரு குருவி.  இதற்கு மாட்டுக்காரன், இரெட்டைவால், வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் இதனை  Black drongo அல்லது King crow என்றழைப்பார்கள்.

விஞ்ஞான ரீதியாக இதற்களிக்கப் பட்ட பெயர் ‘Decrurus macrocercus என்பதாகும்.

http://en.wikipedia.org/wiki/Image:Dicrurus_macrocercus.jpg


கரிச்சான் குருவியின் நிறம் பளபளவென மின்னும் கருப்பு நிறம். புறாவை விட சற்று சிறிதான உடல்.  நீளமான வால் சிறகுகள்.
அலகுகள் ஆரம்பிக்கும் இடத்தில் மீசை போன்ற ரோமங்கள்.  இந்த ரோமங்கள் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கும் போதே அவற்றைப் பிடிக்க உதவுகின்றன.

கரிச்சான் குருவிகள் கிராமப் புரங்களில் இடையன் ஆடு மாடுகளை மேய ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும்.  அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் கிளப்பிவிட அவை பறக்கும்போது, கரிச்சான் குருவி இறக்கைகளை விரித்தபடி வைத்துக் கொண்டு கிளைடர் விமானம் போல பறந்து சென்று பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு அதே மூச்சில் தான் இருந்த இடத்திற்கே வந்து சேரும் பூமரேங் என்னும் ஆயுதம் போல.

கரிச்சான் குருவியை மின் கம்பிகள், விளக்குக் கம்பங்கள் இவற்றின் மீதும் பார்க்கலாம்.  அவ்வப்போது சிறிது தூரம் பறந்து சென்று இருந்த இடத்திற்கே திரும்புவதைக் காண முடியும்.  இதுவும் அவை தன் உணவை அடையும் பொருட்டே.


கிராமப் புரங்களில் ஒரு பாட்டு,

வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனால்
கால் வீழ்ந்த கிழவியும்தான் குமரியாவாளே என்று.

இவ்வாறு  வழக்கில் வரக் காரணம் ஒருக்கால் எப்போதுமே வால் நீண்ட கருங்குருவி தான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க கடிகார முள் போன்று இடமிருந்து வலமாகவே பறக்குமோ?


சில பறவைகள் தங்களது சிறகுகளில் பேன் போன்ற சிறு பூச்சிகள் சேராமல் தடுக்க ஒரு உத்தியினைக் கையாளும்.  அவை எறும்புப் புற்றின்மீது சென்றமரும்.  அப்போது அவற்றின் மீது ஏறும் எறும்புகள் வெளியிடும் ஃபார்மிக் அமிலத்தில் பேன்கள் இறந்து விடுகின்றன. 

கரிச்சான் குருவி எறும்பு வைத்தியம் செய்து கொள்கிறது

என்ன சுலபமான பேன் நிவாரணி வைத்தியம்!  நீங்கள் இந்த வைத்தியத்தை செய்து பார்த்து விடாதீர்கள்.  எறும்புக் கடியைத் தாங்க முடியாது.

கரிச்சான் குருவிகளில் மற்றொரு வகை துடுப்பு வால் கரிச்சான் குருவி.  இதன் வால் நீண்டு துடுப்பு போன்று இருக்கும்  இதை ஆங்கிலத்தில் Racket-tailed Drongo என்று சொல்வார்கள்.


துடுப்பு வால் கரிச்சான் குருவி

கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே துளியும் கிடையாது.  இது தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டும்.  அந்தப் பறவைகளும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிப் பாராமல் அதி வேகமாகப் பறந்து செல்லும்.  இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான ஒன்று.  King crow என்ற பெயர் வரக் காரணம் இதுவே.

இயற்கையின் எழில் மூலம் இறைவன் நமக்கு அளிக்கும் இக் காட்சிகளில் தான் எத்தனை பாடங்கள் ! 

உருவத்தில் சிறியவனாக இருந்தாலும் உள்ளத்தில் உரம் இருந்தால் உன்னைவிட பலசாலியான எதிரியையும் ஓட ஓட உன்னால் விரட்ட முடியும் என்பதை நமக்கு இப்பறவையின்  மூலம் ஆண்டவன் உணர்த்துகிறாரோ!

ஒரு சொந்த அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எண்ணைக் கம்பெனிகளில் இருந்து லாரிகளை நிப்பியபின் சீல் செய்து அனுப்புவார்கள்.  சில லாரி ஓட்டுனர்கள் சாலை ஒரத்தில் லாரிகளை நிறுத்தி சீலைப் பிரித்து குழாயைத் திறந்து லாரியில் இருந்து எண்ணையைத் திருடுவார்கள்.  இரு முறை அவ்வாறு திருடிக் கொண்டிருந்த ஓட்டுனர்களை சம்பவம் நடக்கும் போதே பிடித்து அறைந்திருக்கிறேன்.  ஒரு முறை அவர் திருடிய டீசல் எண்ணையினாலேயே அவருக்கு அபிஷேகமும் செய்து இருக்கிறேன்.
 
நான் பிடித்த இருவருமே என்னை விட பலசாலிகள்.  திருடனை திருடும்போது பிடித்தால் அவன் பலமெல்லம் அப்போது எங்கோ பறந்து சென்று விடும் என்பது என் கணிப்பு.

நான் செய்த காரியத்தால் என் மனைவிக்கு பல நாட்கள் தூக்கம் போயிற்று, எந்த நிமிஷம் ஓட்டுனர்கள் வந்து என்னைக் கொன்று விடுவார்களோ என்ற பயத்தினால்.


நடராஜன் கல்பட்டு
 


1 comment:

  1. Very good information about the bird and about your experience.

    I also want to add another information about the Racket tailed Drongo. It can mimick 17 different voices including that of a cat's. This information was given by the forest guide in Parambikulam.

    ReplyDelete