Friday 8 February, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (18) பட்டாணி உள்ளான்

ஆங்கிலத்தில் ப்ளோவர் என்று அழைக்கப் படும் ஒரு இனப் பறவைகள் உள்ளன.  இந்த இனத்தில் சுமார் நாற்பது உட்பிரிவுகள் உண்டு.  அவற்றில் ஒன்றுதான் பட்டாணி உள்ளான் என்றழைக்கப் படும் Little ringed Plover.

பட்டாணி உள்ளான்
(http://en.wikipedia.org/wiki/Image:Charadrius_dubius_4_(Marek_Szczepanek).jpg)

உச்சந்தலை, முதுகு, இறக்கை இவை பழுப்பு நிறத்திலும், மேல் கழுத்து, மார்பு, வயிறு இவை வெள்ளை நிறத்திலும் உள்ள ஒரு பறவை இது.  புறாவை விட சற்று சிறியது உருவத்தில்.  ஆனால் கால்கள் புறாவின் கால்களை விட சற்றே நீளமானது.  அடிக் கழுத்து, நெற்றி, முகத்தின் இரு பக்கங்கள் இவை கருமையான சிறகுகளால் கவரப் பட்டு இருக்கும்.  கண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் தோலால் ஆன வட்டம் இருக்கும்.

பட்டாணி உள்ளான்கள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தஞ்சை மாவட்டம் கோடியயக்கரையில் காணப்படும் வலசை வரும் பல வகையான ஆழமற்ற நீரில் இரை தேடும் பறவைகள் (Waders) மற்றும் கடலோரப் பறவைகள் (Shore birds) இவற்றுடன் காணப் பட்டாலும் இவை நம் நாட்டிலேயே உள்ள ஆற்றுப் படுகைகளில் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும் ஒரு பறவை.

நெல்லூர் அருகே வட பெண்ணை ஆற்றுப்படுகையில் தன் முட்டைகளை அடைகாத்துக் கொண்டு இருக்கும் ஒரு பட்டாணி உள்ளானைக் கீழே பாருங்கள்.        

(நெல்லூர் அருகே வட பெண்ணை ஆற்றுப் படுகையில் பட்டாணி உள்ளான்)


உள்ளான்களைப் பற்றி உலா வரும் செய்தி ஒன்று உண்டு.  முதலைகள் பெரிய சிறிய மிருகங்களை மட்டுமின்றி பறவைகளையும் உண்ணும்.  ஆனால் உள்ளான்களை மட்டும் உண்பதில்லையாம்.  காரணம் உள்ளான்கள் முதலையின் பல் வைத்தியராம்.

(மைசூர் அருகே ரங்கன திட்டுவில் முதலை)

ஆற்றோரம் வாயைப் பிளந்து கொண்டு அசையாமல் படுத்து இருக்கும் முதலையின் வாய்க்குள் சர்வ சுதந்திரத்துடன் செல்லும் உள்ளான்கள் அங்கு பற்களிடையே சிக்கிக் கொண்டு அழுகி வரும் மாமிசத் துண்டுகளை பிடுங்கி எடுத்து உண்ணுமாம்.  இதனால் முதலைக்கு பல் சுத்தமாகி வியாதியோ வலியோ வருவது இல்லையாம்.  வயித்தியரை உண்ணலாமா? கூடாதல்லவா?

இந்த செய்தி நான் திரிக்கும் கதை அல்ல. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிரோடோடஸ் என்ற புகழ்பெற்ற கிரேக்க நாட்டு சரித்திர ஆசிரியர் எகிப்திய உள்ளான்களைப் பற்றி எழுதிய குறிப்பு களிலிருந்து பரவிய ஒரு செய்தி.  இச்செய்தியினை பின் நாட்களில் சில பறவை அன்பர்களும் கண்டு தங்கள் குறிப்புகளில் எழுதியுள்ளனர். 


முதலையின் பல் வைத்தியர் என்று ஹிரடோடஸால் அழைக்கப் பட்ட எகிப்து நாட்டு  உள்ளான் (http://en.wikipedia.org/wiki/Image:Egyptian_Plover.jpg)
இயற்கையின் எழிலினைக் கூட்டும் பறவைகளில் தான் எத்தனை விதங்கள், எத்தனை அழகு இறைவா!

                                                                                               நடராஜன் கல்பட்டு

                                   (கருப்பு   வெள்ளை படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

1 comment:

  1. Nice photos and an excellent information sir.

    Thanks for sharing.

    Ram

    ReplyDelete