Saturday, 9 February 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (19) மீன் கொத்தி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (19) மீன் கொத்தி

தேனீத் தின்னிக்கு அடுத்த படியாக உண்ணும் உணவை வைத்தே பெயர் கொண்ட ஒரு பறவை மீன் கொத்தி.  நம் நாட்டில் அதிகமாகக் காணப் படும் மீன் கொத்திகள் மூன்று வகை.  அவை சாதாரண மீன் கொத்தி, வெள்ளை மார்பு கொண்ட மீன் கொத்தி மற்றும் திட்டுத் திட்டாக வெள்ளை கருப்பு நிறம் கொண்ட மீன் கொத்தி  (Common Kingfisher, White-breasted Kingfisher and the Pied Kingfisher).

சாதாரண மீன் கொத்தி (Common Kingfisher)
(http://en.wikipedia.org/wiki/Image:Common_Kingfisher_I_Picture_115.jpg)


(வெள்ளை மார்பு அல்லது தொண்டை கொண்ட மீன் கொத்தி (White breasted or throated Kingfisher)                                   (http://en.wikipedia.org/wiki/Image:White_throated_Kingfisher_I2-Haryana_IMG_9005.jpg)





கருப்பு வெள்ளை மீன் கொத்தி ( Pied Kingfisher )
(http://en.wikipedia.org/wiki/Image:Ceryle_rudis.jpg)
மீன் கொத்திகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது நீர் நிலைகள் அருகே உள்ள சரிவான மண் திட்டுகளில்.  சுமார் மூன்று முதல் ஆறடி நீளமுள்ள மூன்று / நான்கு அங்குல விட்டம் கொண்ட வளைகளைத் தோண்டி அதனுள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும்.  கிணறுகளின் சுவர்களில் வளைகளைத் தோண்டி அவற்றுள் கூடு அமைப்பதும் உண்டு.

மீன் கொத்திகள் மீன் பிடிப்பது பார்க்க ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி.

சாதாரண மீன் கொத்தியும், வெள்ளை மார்பு கொண்ட மீன் கொத்தியும் நீர் நிலைகள் அருகே சற்று உயரமான இடத்தில் அதாவது ஒரு கல்லின் மீதோ, செடியின் மீதோ அல்லது மின் கம்பிகள் மீதோ ( சுமார்  இரண்டடி முதல் இருபது அடி வரையான உயரத்தில் ) உட்கார்ந்து  கொண்டு தண்ணீரையே பார்த்துக் கொண்டு இருக்கும்.  திடீரெனத் தண்ணீருக்குள் பாய்ந்து வெளியே அடுத்த நொடியில் வாயில் ஒரு மீனைக் குறுக்கு வாட்டில் கவ்விக்கொண்டு வரும்.  பின் நேராக முதலில் உட்கார்ந்து கொண்டு இருந்த இடத்திற்குச் சென்றமர்ந்து சிறிய மீன்களை ஆகாசத்தில் தூக்கிப் போட்டோ அல்லது வாயில் வைத்தபடியே சிறிது சிறிதாகத் திருப்பியோ மீனின் தலை பாகம் முதலில் வாய்க்குள் செல்லுமாறு விழுங்கும்.

கருப்பு வெள்ளை மீன் கொத்திக்கு இரை தேடும் இடத்தருகே உட்கார இடம் தேவை இல்லை.  இவ்வகை மீன் கொத்திகள் நீர் நிலை களுக்கு மேலாகப் பறந்து கொண்டிருக்கும். 

கூட்டமாக மீன்கள் போவதைக் கண்ட உடன் ஒரே இடத்தில் நின்றபடி பறக்கும்.


ஒரே இடத்தில் நின்று கொண்டு பறந்திடும் மீன் கொத்தி
http://en.wikipedia.org/wiki/File:Pied_kingfisher_hovering_square.jpg

மீன் கூட்டம் நீரின் மேல் பரப்புக்கு நெருங்கும் போது திடீரென                                                         செங்குத்தாக நீருக்குள்  விழுந்து மீனைக் கொத்திக் கொண்டு மேலே வரும்.  பின் பறந்த படியே வாயில் உள்ள மீனைத்தூக்கிப் போட்டு தலை முதலில் வாயுள் போகும்படி விழுங்கும்.  இந்த வகை மீன் கொத்திகள் ஆறு, ஏரி, குளம் மட்டுமின்றி கடலிலும் மீன் பிடிக்கும்.  அதனால் தான் இவை நீர் நிலை அருகே உட்கார இடம் தேடுவதில்லை.  கடலில் உட்கார இடம் எங்கு கிடைக்கும்?

மூன்று வகை மீன் கொத்திகளுமே சிறிய மீன்களை அப்படியே விழுங்கிவிடும்.  மீன் பெரிதாக இருந்தால் ஒரு மரக்கிளையின் மீதோ அல்லது கல்லின் மீதோ அடித்துக் கொன்றபின் விழுங்கும்.

மீன் கொத்தியின் கண்கள் நீருக்கு வெளியேயும் நீருக்குள்ளேயும் துல்லியமாகப் பார்க்கும் திறன் கொண்டவை.


பறவைகள் உணவு தேடும் விதத்தில் கூட எத்தனை மாறுபட்ட   காட்சிகளை நமக்குக் காட்டுகிறான் இறைவன் !  காட்சிகளைக் காட்டுகிறானா ? அல்லது அந்த காட்சிகளே அவன் தானா ?

                                      நடராஜன் கல்பட்டு

                                         


                                                        

Friday, 8 February 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (18) பட்டாணி உள்ளான்

ஆங்கிலத்தில் ப்ளோவர் என்று அழைக்கப் படும் ஒரு இனப் பறவைகள் உள்ளன.  இந்த இனத்தில் சுமார் நாற்பது உட்பிரிவுகள் உண்டு.  அவற்றில் ஒன்றுதான் பட்டாணி உள்ளான் என்றழைக்கப் படும் Little ringed Plover.

பட்டாணி உள்ளான்
(http://en.wikipedia.org/wiki/Image:Charadrius_dubius_4_(Marek_Szczepanek).jpg)

உச்சந்தலை, முதுகு, இறக்கை இவை பழுப்பு நிறத்திலும், மேல் கழுத்து, மார்பு, வயிறு இவை வெள்ளை நிறத்திலும் உள்ள ஒரு பறவை இது.  புறாவை விட சற்று சிறியது உருவத்தில்.  ஆனால் கால்கள் புறாவின் கால்களை விட சற்றே நீளமானது.  அடிக் கழுத்து, நெற்றி, முகத்தின் இரு பக்கங்கள் இவை கருமையான சிறகுகளால் கவரப் பட்டு இருக்கும்.  கண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் தோலால் ஆன வட்டம் இருக்கும்.

பட்டாணி உள்ளான்கள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தஞ்சை மாவட்டம் கோடியயக்கரையில் காணப்படும் வலசை வரும் பல வகையான ஆழமற்ற நீரில் இரை தேடும் பறவைகள் (Waders) மற்றும் கடலோரப் பறவைகள் (Shore birds) இவற்றுடன் காணப் பட்டாலும் இவை நம் நாட்டிலேயே உள்ள ஆற்றுப் படுகைகளில் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும் ஒரு பறவை.

நெல்லூர் அருகே வட பெண்ணை ஆற்றுப்படுகையில் தன் முட்டைகளை அடைகாத்துக் கொண்டு இருக்கும் ஒரு பட்டாணி உள்ளானைக் கீழே பாருங்கள்.        

(நெல்லூர் அருகே வட பெண்ணை ஆற்றுப் படுகையில் பட்டாணி உள்ளான்)


உள்ளான்களைப் பற்றி உலா வரும் செய்தி ஒன்று உண்டு.  முதலைகள் பெரிய சிறிய மிருகங்களை மட்டுமின்றி பறவைகளையும் உண்ணும்.  ஆனால் உள்ளான்களை மட்டும் உண்பதில்லையாம்.  காரணம் உள்ளான்கள் முதலையின் பல் வைத்தியராம்.

(மைசூர் அருகே ரங்கன திட்டுவில் முதலை)

ஆற்றோரம் வாயைப் பிளந்து கொண்டு அசையாமல் படுத்து இருக்கும் முதலையின் வாய்க்குள் சர்வ சுதந்திரத்துடன் செல்லும் உள்ளான்கள் அங்கு பற்களிடையே சிக்கிக் கொண்டு அழுகி வரும் மாமிசத் துண்டுகளை பிடுங்கி எடுத்து உண்ணுமாம்.  இதனால் முதலைக்கு பல் சுத்தமாகி வியாதியோ வலியோ வருவது இல்லையாம்.  வயித்தியரை உண்ணலாமா? கூடாதல்லவா?

இந்த செய்தி நான் திரிக்கும் கதை அல்ல. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிரோடோடஸ் என்ற புகழ்பெற்ற கிரேக்க நாட்டு சரித்திர ஆசிரியர் எகிப்திய உள்ளான்களைப் பற்றி எழுதிய குறிப்பு களிலிருந்து பரவிய ஒரு செய்தி.  இச்செய்தியினை பின் நாட்களில் சில பறவை அன்பர்களும் கண்டு தங்கள் குறிப்புகளில் எழுதியுள்ளனர். 


முதலையின் பல் வைத்தியர் என்று ஹிரடோடஸால் அழைக்கப் பட்ட எகிப்து நாட்டு  உள்ளான் (http://en.wikipedia.org/wiki/Image:Egyptian_Plover.jpg)
இயற்கையின் எழிலினைக் கூட்டும் பறவைகளில் தான் எத்தனை விதங்கள், எத்தனை அழகு இறைவா!

                                                                                               நடராஜன் கல்பட்டு

                                   (கருப்பு   வெள்ளை படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

Monday, 4 February 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (17) பூ நாரை
 

நாரை இனத்திலே பூ நாரை என ஒன்று.  இதை சங்குவலை நாரை, வர்ண நாரை என்றும் அழைப்பார்கள்.  விஞ்ஞான
ரீதியாக இதற்களிக்கப் பட்டு உள்ள பெயர் ‘Ibis leucocephalus’ என்பதாகும்.  ஆங்கிலத்தில் இதனை ‘Painted stork’ என்பர். 
பூ நாரையின் பெயர்கள் எல்லாமே காரணப் பெயர்கள் தான்.  மஞ்சள் நிற அலகுகள், மெழுகினால் செய்தது போன்ற ஆரஞ்சு நிறத் தலை, இறக்கை களில் மயில் கழுத்தென மின்னும் கருப்புக் கோடுகள், பாலெனத் தோன்றும் வெள்ளை உடல், மார்பிலே ஒரு கருப்புப் பட்டை, இறக்கைகளின் நுனி சிறகுகளிலும், வால் சிறகுகளின் மேல் புறத்திலும் மிக சன்னமாக ஒரு ரோஜாவின் வண்ணம், சாம்பல் பூத்த ரோஜா நிறக் கால்கள் என ஒரு ஓவியன் துரிகை கொண்டு வர்ணம் தீட்டி இருப்பது போல இருப்பதால் தான் இந்தக் காரணப் பெயர்கள்.
            

(http://en.wikipedia.org/wiki/Image:Painted_Stork.jpg) 

பூ நாரை வெளி நாட்டிலிருந்து நம் நாட்டுக்கு வலசை வரும் பறவை அல்ல.  உள் நாட்டிலேயே வாழும் பறவை தான்.  இவை செப்டம்பர் முதல் ஜனவரி வரையிலான நாட்களில் இனப் பெருக்கம் செய்யும்.  இனப் பெருக்கம் செய்யும் இடங்களில் மற்ற நாட்களில் காணப் படுவதில்லை என்பதால் பலர் இதனையும் வலசை வரும் பறவைகளின் பட்டியலில் சேர்த்து விடுகின்றனர்.

பூ நாரைகள் சாலையோர மரங்களிலோ, கிராம வீடுகள் நடுவே உள்ள புளிய மரம் போன்ற மரங்களிலோ கூட்டமாக பல ஜோடி பறவைகள் கூடுகள் கட்டி, முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து வாழும்.  ஆனால் சாதாரணமாக மக்கள் இவற்றைத் துன்புறுத்துவது இல்லை.  காரணம் தெரிய வேண்டுமா?

முன்னாள் முதல்வர் ப்ரகாசம் அவர்கள் ஊரான ஆந்திர மாநிலம் டங்குடூரு அருகில் உள்ள ஜருகுமல்லி என்ற கிராமத்தின் தலைவருடன் 1976ல் தெலுங்கில் நடந்த ஒரு சம்பாஷணையின் தமிழாக்கத்தைப் படியுங்கள்.

“ஏன் சார், நாம பேசறது கூடக் காதுலே விழாதபடி இப்படி கா...கா... ன்னு கூச்சல் போட்டுகிட்டு இருக்குதுங்களே இந்தப் பறவைங்க. ஒங்களுக்கெல்லாம் தொந்திரவா இல்லயா?  ஊர் ஜனங்க இதுங்களெ வெரட்டறது இல்லயா?”

“தொந்திரவு என்ன சார் தொந்திரவு?  இந்தப் பறவைங்க எங்க ஊருக்கு வந்திச்சுன்னா இந்த வருஷம் மழை நல்ல பேஞ்சு ஏரி குளமெல்லாம் நெறெஞ்சு வெளெச்சல் அமோகமா வரும்னு தெரிஞ்சுடும்.  அதுங்களெ நாங்க ஏன் சார் வெரட்டணும்?”

“சரி சத்தத்தெ உடுங்க.  தரையெல்லாம் வெள்ளை அடிச்சாப்ளெ பறவை எச்சமும் மீன் துண்டுங்களுமா கெடக்குது.  நாத்தம் வயத்தெக் கொமட்டி வாந்தியெடுக்க வருது.  இது கஷ்டமா இல்லியா ஒங்களுக்கு?”  (இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே என்மேல் ஒரு பறவையின் எச்சம் விழுகிறது)

“சார் இந்தப் பறவைங்க வயல்கள்லெ மேஞ்சுகிட்டு இருக்கும் போது போடுற எச்சமும், இங்கெ தரெலெ கெடெக்கற எச்சமும் அறெகொறெயாக் கடிச்ச மீன் துண்டுங்களும் நல்ல ஒரமாகுது.  இது மட்டுமா.  அப்பொப்போ ஊர் சனங்களுக்கு கருவாடும் கெடைக்குது.  எப்படிங்கிறீங்களா?  பறவைங்க குஞ்சுங்களுக்கு மீனெக் கொண்டு வந்து கொட்டும்போது கொஞ்சம் கீளேயும் விளும்.  ஊர் செனம் ஏன் சார் இதுங்களெ வெரெட்டுவாங்க?”

இப்போது புரிகிறதா பூ நாரைகள் ஜன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் எப்படி கூடுகள் கட்டி குடும்பம் நடத்த முடிகிறது என்று?


(ஜருகுமல்லியில் பூநாரையும் அதன் பூப்பந்து போன்ற குஞ்சுகளும்)

பூ நாரைகளின் கூடு குச்சிகளால் ஆன சுமார் 2 – 3 அடி விட்டமுள்ள ஒரு வட்ட வடிவமான மேடை போன்றது.  நடுப் பாகம் சற்றே பள்ளமாக இருக்கும்.  பள்ளத்தில் இலைகள் மற்றும் காய்ந்த புல், வைக்கோல் இவை இருக்கும். 

ஒவ்வொரு முறை பெரிய பறவைகள் வந்திறங்கும் போதும், குஞ்சுகள் நகரும் போதும் சில குச்சிகள் கீழே விழுந்து விடும்.  ஆகவே அவற்றுக்குப் பதிலாக வேறு குச்சிகளைக் கொண்டு வந்து கூட்டினை சரி செய்ய வேண்டி வரும்.  இந்த ரிபேர் வேலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு காட்சி.  எப்படி என்கிறீர்களா?

கூட்டில்குஞ்சுகள் இருக்கும் போது எப்போதும் ஒரு பறவை காவல் காத்துக் கொண்டு இருக்கும் தனது இறக்கைகளை சற்றே விரித்து குடைபோல நிழல் கொடுத்துக் கொண்டு.

(நிழற்கொடை)

வெளியே சென்று இரையுடன் திரும்பும் பறவை தன் அலகிலே ஒரு குச்சியையும் கொண்டு வரும்.

(கூடு ரிபேருக்குக் குச்சி வருது) 

குச்சி கொண்டு வந்த ப்றவை தானே ரிபேர் வேலையைத் தொடங்காது.  பதிலாக உட்கார்ந்திருக்கும் பறவையிடம் கொடுக்கும் ஏதோ அரச சபையிலோ அல்லது ஜனாதிபதி வீட்டிலோ ட்யூடீ மாறும் காவலர்கள் போல.  அதுவரை காவல் பணியில் ஈடுபட்டிருந்த பறவை கூட்டினை சரி செய்யும்.  பின்னர் இருவருமாக பாசத்துடன் அலகுளால் ஒன்றை ஒன்று மாறி மாறி தட்டிக்கொள்ளும் முத்தமிடுவது மாதிரி.  குஞ்சுகள் பசியில் வாயைப் பிளந்து “கவான் கவான்” என்று கத்திக் கொண்டு இருக்கும்.  ஆனால் சடங்குகள் பூர்த்தியாக முடியாமல் அவை கவனிக்கப் படமாட்டா.

குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதும் ஒரு காணவேண்டிய காட்சி.  இரை கொண்டு வரும் பறவை ஒரே ஒரு மீனைக் கொண்டு வராது.  தொண்டை, கழுத்து மற்றும் வாய் பூராவும் மீன்கள் தான்.  அவற்றினை ஒவ்வொன்றாகக் கக்கி குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.  அப்போது சில மீன்கள் கூட்டிற்குள்ளேயும் சில கீழேயும் விழும்.  அப்படி நடக்கும்போது குஞ்சுகள் இரைக்காகக் கெஞ்சினாலும் மேலும் மீனை வயிற்றிலிருந்து வெளியே கொண்டு வராமல் “அதோ பார் அங்கே ஒன்று”, என்பது போல கூட்டில் கிடக்கும் மீனைக் காட்டும்.  குஞ்சுகள் தானாக அதைப் பொறுக்கித் தின்ன வில்லை என்றால் பெரிய பறவை அந்த மீனைத் தானே எடுத்துக் குஞ்சுக்குக் கொடுக்கும்.  

(இங்கெ கெடெக்குது பாருங்க ரெண்டு மீனு)

ஐந்தறிவே படைத்தது என்று நாம் எண்ணும் பறவைகளுக்கும்தான் எத்தனை அறிவு!

தமிழ் நாட்டில் பூ நாரையை திருநெல்வேலி ஜில்லாவின் மூன்றடைப்பு என்ற இடத்திலும், தஞ்சை ஜில்லாவின் கோடியக்கரையிலும் காணலாம்.

இயற்கையின் எழிலைக் கண்டு ரசியுங்கள்.  இறைவனைக் காண்பீர்கள்.

                                            நடராஜன் கல்பட்டு

                                           (கருப்பு   வெள்ளை படங்கள் எடுத்தது நடராஜன் கல்பட்டு)    

Friday, 4 January 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (16) ஆலா

ஆலா என்று ஒரு பறவை.  இதை ஆங்கிலத்தில் டெர்ன் (Tern) என்பார்கள்.  இந்த இனப் பறவையில் உலகிலேயே அதிக தூரம், சுமார் 12,000 மைல்கள் ஒரு வழியில், வட துருவப் பிரதேசத்திலிருந்து தென் துருவப் பிரதேசத்துக்கு குளிர் நாட்களில் பறந்து இடம் பெயரும் ஆர்டிக் ஆலாவிலிருந்து நம் நாட்டிலேயே வாழும் இருபத்துமூன்று வித ஆலாக்களோடு, கிட்டத் தட்ட நாற்பத்தைந்து ரக ஆலாக்கள் அடக்கம். 


ஆர்டிக் ஆலா ஜோடி
(http://www.thewe.cc/thewei/&_/arctic/arctic_terns.jpe)
ஆலா பருமனில் புறாவை விட சற்றே மெலிந்திருக்கும்.  நீண்டு, அகலக் குறைவான, வளைந்த இறக்கைகளைக் கொண்டது ஆலா. அதன் வால் சிரகுகள் மீனின் வால் பொன்ற அமைப்பில் இருக்கும்.  இறக்கைகளின் மேல் புரம் சாம்பல் நிறத்திலும் அடிப் புரமும் வயிறும் வெள்ளையாகவும் இருக்கும்.  இப்பறவையின் கால்கள் குட்டையானவை.  தலை, கழுத்து, மார்பு, வயிறு, கால்கள், அலகு இவற்றின் நிறம் ஒவ்வொரு வகை ஆலாவில் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

ஆலாக்கள் இரை தேடுவதற்காக ஆறு, ஏரி, கடல் இவற்றுக்கு மேல் ஒரு கூட்டமாகப் பறந்து சென்று கொண்டிருக்கும்.  திடீரென ஒரு ஆலா செங்குத்தாக நீருக்குள் விழுந்து அடுத்த கணம் வாயில் ஒரு மீனுடன் வெளி வந்து விண்ணில் பறக்கும்.  அப்படிப் பறக்கும் போதே வாயில் உள்ள மீனை உயரத் தூக்கி எறிந்து மீன் தலை கீழாக வரும் போது மீண்டும் அதனைக் கவ்வி விழுங்கும்.  ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா?  இல்லை என்றால் மீனின் செதிள்கள் பறவையின் தொண்டையில் சிக்கிக் கொள்ளும். மீன் உள்ளே போகாது.

வேடர்கள் துப்பாக்கியால் சுட்டால் துப்பக்கித் தோட்டாக்களினால் அடி படுகிறதோ இல்லையோ ஐந்தாறு ஆலாக்கள் அடிபட்டு செத்து விட்டது என எண்ணும்படி சிறிது தூரம் கீழே விழுவது போல போக்குக் காட்டிவிட்டு மீண்டும் பறந்து போய்விடும்.  இவ்வாறு செய்வது பயத்தினாலா அல்லது ‘செத்து விழும்’ என நம்பி ஆலாக்களைப் பொறுக்குவதற்காக துப்பாக்கியைக் கீழே வைத்துவிட்டு விறையும் வேடனை ஏமாற்றவா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.

ஆற்று ஆலா (River Tern) என்ற பறவையை நம் ஊர்களில் ஆறு, ஏரிகளின் அருகில் காணலாம்.  இவற்றின் கால்கள் சிவப்பு நிறத்திலும் அலகுகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.  கோடை காலத்தில் தலையும் பின் கழுத்தும் கருப்பு நிறமாக இருக்கும்.

ஆற்று ஆலா (River Tern)
River_tern.jpg‎ (480 × 320 pixels, file size: 24 KB, MIME type: image/jpeg)

உடலை விட நீளமான இறக்கைகள் கொண்டது ஆலா
 Smallarctern.jpg‎ (434 × 242 pixels, file size: 190 KB, MIME type: image/jpeg)

ஆலாக்களின் இறக்கைகள் நீளமாகவும் பின்புறமாக வளைந்தும் இருப்பதால் அவை தரையில் உட்கார்ந்திருக்கும் போது வலது இறக்கையின் நுனி உடலின் இடது பக்கமும், இடது பக்க இறக்கையின் நுனி உடலின் வலது பக்கமும் வெளியே நீட்டிக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம்.

இயற்கையின் எழிலை ரசியுங்கள்.  இறைவனைக் காண்பீர்கள்.


                                            நடராஜன் கல்பட்டு

                                            





Wednesday, 2 January 2013


 இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (15) கசாப்புக் காரன்

பறவைகளில் தையல் காரரைப் பார்த்தோம்.  நெசவாளரைப் பார்தோம்.  தச்சுவேலை செய்பவரைப் பார்த்தோம். கட்டிடத் தொழிலாளரைக் கூட பார்த்தோம்.  ஒரு கசாப்புக் கடைக் காரரையும் பார்க்க வேண்டாமா?

அசுரக் கிளி அல்லது கசாப்புக் காரன் என்று ஒரு குருவி.  இதன் ஆங்கிலப் பெயர் ஷ்ரைக் அல்லது புச்சர் பேர்ட் (Shrike or Butcher bird) என்பதாகும்.

இந்தப் பறவைக்கு ஏன் இந்த வினோதப் பெயர் தெரியுமா?  இது தனக்குக் கிடைக்கும் ஆகாரத்தை, அதாவது வெட்டுக்கிளி, ஓணான், சிறு பறவைகள் போன்றவற்றை, வேலமரம் போன்ற ஒரு மரத்தின் நீண்ட முட்களில் குத்தி வைத்துக் கொள்ளும்.  பின்னர் பசி எடுக்கும்போது நிதானமாக தான் சேகரித்து வைத்த மாமிசத்தை உட்கொள்ளும்.  வேறு ஏதேனும் ஒரு பறவயோ, விலங்கோ அந்த மரத்தினை நெருங்கினால் அவற்றைத் துரத்தித் துரத்தி விரட்டி அடிக்கும்.  அசுரக்கிளி தான் போங்க!

நம் கசாப்புக் காரர் வியாபாரத்துக்குக் கடை திறக்கவில்லை.  சொந்த உபயோகத்திற்காகத் தான் கடை திறந்திருக்கிறார் என்பது மற்றப் பறவைகளுக்குத் தெரியாது போலும் !

இந்தியாவில் சுமார் ஐந்தாறு வகையான கசாப்புக் காரக் குருவிகள் உள்ளன.  அவற்றில் தமிழ் நாட்டில் பே பேக்ட் ஷ்ரைக் என்பதையும், க்ரே ஷ்ரைக் என்பதையும் (Bay backed shrike and Grey shrike) நாட்டுப் புரங்களிலும், தரிசுக் காடுகளிலும் காணலாம்.  முட்கள் உள்ள மரம் அருகில் கட்டாயம் இருக்கவேண்டும்.  அடுத்த பக்கத்தில் பாருங்கள் சாம்பல் நிற கசாப்புக்க காரர் எப்படிக் கடை திறந்து வைத்திருக்கிறார் என்று.
                                                  
கசாப்புக் காரர் கடையில் ஒரு சுண்டெலி
(http://upload.wikimedia.org/wikipedia/commons/4/44/Lanius_excubitor_1_%28Marek_Szczepanek%29.jpg)

இவர் கடையில் ஒரு கோழிக் குஞ்சு
                                                                                                                     
செம்முதுகு கசாப்புக் காரன் (Bay backed Shrike (http://en.wikipedia.org/wiki/Image:Bay-backed_Shrike_(Lanius_vittatus) _at_Sultanpur_I_Picture_052.jpg)                                                  
                                                                            
இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை !


                                      நடராஜன் கல்பட்டு