Saturday, 15 December 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (9) ஆந்தை

ந்தை நம்மில் பலரால் கெட்ட பறவை எனத் தவறாகக் கருதப் படும் ஒன்று.  ஒரு வீட்டருகே ஆந்தை அலறினாலோ அல்லது கோட்டான் (அது ஒரு வகை ஆந்தை) கூவினாலோ அந்த வீட்டில் ஒரு மரணம் சம்பவிக்கும் என்பது சிலர் எண்ணம்.  இது உண்மை அல்ல.  அப்படியே உண்மை என்றாலும் ஆந்தை செய்ததென்ன ?  முன் அறிவிப்பு தந்தது.  மரணத்தை அது ஏற்படுத்தவில்லை.

தபால் இலாகாவின் தந்தி ஊழியர் தந்திகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார் அவற்றில் சில நல்ல செய்திகளாக இருக்கும்.  சில கெட்ட செய்திகளாக இருக்கும்.  நல்ல செய்திகள் கொண்டு வந்தால் அவரை வாழ்த்துவதும் கெட்ட செய்தி கொண்டு வந்தால் அவரை வீழ்த்துவதும் இல்லையே. ஆந்தையை மட்டும் நாம் ஏன் வெறுக்க வேண்டும் ?  ஏன் சிலரைப் போல் அவற்றைக் கண்டவுடன் அடித்துக் கொல்ல வேண்டும் ?

உண்மையில் ஆந்தை மனிதனின் நண்பன்.  எப்படித் தெரியுமா ?
வயல்களிலும்  கிடங்குகளிலும் தானியங்களுக்கு பெருத்த சேதம் விளைவிப்பது எலிகள். 



எலிகள் பற்றிய ஆராய்ச்சியில் வல்லுனரான ஸ்டீபன் பேடர்ஸ்பி சொல்கிறார், இரண்டு எலிகள் ஓர் ஆண்டில் 500 முதல் 2000 வரையாகப் பெருகும், என்று.  இவ்வாறு அளவுக்கு மீறி பெருகும் எலிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருப்பது அவற்றையே உணவாக உட்கொள்ளும் ஆந்தைகளும் பாம்புகளும் தான்.  ஆந்தைகள் இல்லை என்றால் என்னவாகும் என்பதை எண்ணிப் பாருங்கள்.  எலிகளின் எண்ணிக்கை கட்டுக்கு மீறிப் பெருகும்.  எலிகள் தானியங்களுக்கு சேதம் விளைவிக்கும் என்பது மட்டுமல்ல.  ஆட்கொல்லி நோய்களான ப்ளேக், லெப்டொ ஸ்பிரோஸிஸ் இவற்றைப் பரப்புவதும் எலிகள்தான்.  இப்பொது புரிகிறதா ஆந்தை எப்படி மனிதனின் நண்பன் என்று ?

(படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

இந்த ஆந்தை தன் குஞ்சுக்கு என்ன இரை கொடுத்து இருக்கிறது என்று தெரிகிறதா ?  ஒரு முழு எலி.  ஒரு குஞ்சு ஒரு இரவில் ஒன்றிரண்டு எலிகளைத் தின்னும் என்றால் தாயும், தந்தையும் எவ்வளவு எலிகளை உண்ணும்?

படத்தில் இருப்பது பெரிய ஆந்தை.  இதன் ஆங்கிலப் பெயர் “The Indian Great Horned Owl”.  விஞ்ஞான ரீதியான பெயர் “Bubo Bubo” என்பதாகும்.  இது காரணப் பெயரே.  பெரிய ஆந்தை கத்தும்போது பூபுபோ...........பூபுபோ........... என்று கத்தும்.

நம் நாட்டில் நான்கைந்து வகையான ஆந்தைகளைக் காணலாம்.
அவை சின்ன புள்ளி ஆந்தை (Spotted owlet) , பெரிய ஆந்தை (The Indian Great Horned Owl) , கோட்டான் என்றழைக்கப் படும் தானியக் கிடங்கு ஆந்தை (Barn owl), மீன் பிடிக்கும் ஆந்தை (Brown Fish Owl) , இமாலயப் பனி ஆந்தை (Himalayan Snowy Owl) என்பவையாகும்.  இவற்றை இப்போது பாருங்கள்.

                                                          

 சின்னப் புள்ளி ஆந்தை (The Spotted Owlet)
  (கருப்பு வெள்ளை படம் எடுத்தது க. ந. நடராஜன்)

புள்ளி ஆந்தை நகரத் தெரு ஓரங்களில் உள்ள மரங்களின் பொந்துகளிலோ அல்லது பாழடைந்த கட்டிடங்களிலோ வசிக்கும்.  சூரியன் மறைந்தவுடன் இவை வெளியே வந்து கெர்ர்ர்.... என ஒலி எழுப்பும்.  இதன் உணவு வண்டுகள், பூச்சிகள், சுண்டெலி, பல்லி, ஓணான் போன்றவையாகும்.


              கோட்டான் என்றழைக்கப் படும் தானியக் கிடங்கு ஆந்தை (Barn Owl)
(படம் பிடித்தது நடராஜன் கல்பட்டு)


(இமயத்துப் பனி ஆந்தை)
(படம் இணையத்தில் இருந்து)

பழுப்பு நிற மீன் பிடிக்கும் ஆந்தை (Brown Fish Owl)
(படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

ஆந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் பல சுவையான உண்மைகள் தெரிய வரும்.

ஆந்தைகள் பகலில் தூங்கி இரவில் சுறுசுறுப்பாக இயங்கும் பறவைகள்.  அதற்கேற்றார்ப் போல் அவற்றின் கண் பார்வை அமாவாசை இரவிலும் துல்லியமாகத் தெரியும்.

ஆந்தையின் இறக்கையில் உள்ள இறகுகள் மிக மிக மிருதுவானவை.  ஆகவே அவை பறக்கும் போது சத்தமே கேட்காது.  புறா, காடை, கவுதாரி இவை பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களா ?   பட பட பட வென சத்தம் வரும்.  அதற்கு நேர் எதிர் ஆந்தைகள்.  அப்படி இருந்தால்தானே தன்னைப் பிடிக்க ஆந்தை வருகிறது என்பது எலிகளுக்குத் தெரியாது ,  ஆந்தைக்கும்  நிச்சயமாக உணவு கிடைக்கும் ?                              

ஆந்தை தன் கழுத்தை கிட்டத் தட்ட 359 டிகிரி திருப்ப வல்லது.  ஆந்தையைச் சுற்றி நாம் நடந்தால் இது புலப்படும்.  359 டிகிரி திருப்பிய தன் தலையை நொடிப் பொழுதில் மீண்டும் 0 டிகிரி நிலைக்கே (ஆரம்ப நிலைக்கே) திருப்பிவிடும்.  இது நம் கண்களுக்குத் தெரியாது.  இது புறியாத சிலர் ஆந்தையைக் கொல்ல வேண்டுமென்றால் அதைச் சுற்றிச் சுற்றி சில முறை நடந்தாலே போதும்.  அது தானே தன் கழுத்தைத் திருகிக் கொண்டு இறந்துவிடும் என்பர் !

ஆந்தை (குஞ்சுகள் உட்பட) முழு எலியை விழுங்கிவிட்டு சில மணி நேரத்திற்குப் பின் வாயினால் ஒரு உருண்டையைக் கக்கும்.  அந்த உருண்டையைக் கையில் எடுத்துப் பார்த்தால் அதில் எலியின் மயிரும், நகங்களும், எலும்புகளும் மட்டும்தான் இருக்கும்.  இம்மியளவும் மாமிசமோ ரத்தமோ இருக்காது.  அவ்வளவு நல்ல ஜீரண சக்தி ஆந்தைக்கு.  அதனால் தானோ என்னவோ, உலகின் தலை சிறந்த ஜீரண சக்திக்கான மருந்து என்று சொல்லப்பட்டு வந்த ஹ்யூலெட்ஸ் மிக்ஸ்சரின் ட்ரேட் மார்க் ஆந்தை ! 


தானியக் கிடங்கில் பிடித்த எலியுடன் திரும்புகிறது கோடுகள் கொண்ட ஆந்தை.

             (இந்த கருப்பு வெள்ளை படம் டி. என். ஏ. பெருமாள் எடுத்தது )

பறந்து வருவது வேடம் தறித்த மனிதன் அல்ல.  மனிதன் போல முகம் உடய தானியக் கிடங்கு ஆந்தை.

 (தனியக் கிடங்கு ஆந்தை வண்ணப் படம் இணைய தளத்தில் இருந்து)

 ஆந்தையிலும் அழகும் ஆச்சரியமூட்டும் விஷயங்களும் இருப்பதைக் கண்டிருப்பீர்கள். இயற்கையின் எழிலை நாம் கண்டு களிக்கும்போது அவற்றைப் படைத்த இறைவன் நமது கண்களுக்குத் தெரிகிறான் அல்லவா ?

                                                                              

நடராஜன் கல்பட்டு
                    
                                                                                                    

Thursday, 13 December 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (8) வானம்பாடி


                                          வானம்பாடியும் குஞ்சுகளும்

இசைக் குயிலைப் பற்றிப் பார்த்தோம்.  பாடகரைப் பார்க்க வேண்டாமோ ?

ஒரு நெல் வயலில் வானம்பாடி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது.  ஒரு நாள் இரையுடன் திரும்பிய தாய்ப் பறவையிடம் குஞ்சுகள், அம்மா, அம்மா இன்று இருவர் வந்திருந்தனர்.  ஒருவர் சொன்னர் நெல் கதிர்கள் நன்றாக முற்றி விட்டன.  வெளி ஊரில் உள்ள நம் சொந்தக் காரர்களுக்கு சேதி அனுப்பி அவர்கள் வந்ததும் அறுவடை செய்ய வேண்டும் என்று.  எங்களுக்கு பயமா இருக்கம்மா.  வேறெ எங்கயாவது போயிடலாம்மா என்றன.

தாய்ப் பறவை சொல்லிற்று, கவலைப் படாதீங்க.  மறுபடி அவங்க வந்து பேசினா கவனமாக் கேட்டு எங்கிட்டெ சொல்லுங்க என்ன பேசிகிட்டாங்கன்னு.  சரிம்மா என்றன குஞ்சுகள்.

இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு குஞ்சு சொல்லிற்று, அம்மா, அம்மா இன்னெக்கி மறுபடி அந்த ஆளுங்க வந்து பேசிக்கிட்டாங்க சொந்தக் காரங்க வரதாக் காணும்.  கூலி ஆளுங்களுக்கு சொல்லி அனுப்பலாம்னு.  அம்மா ரொம்ப பயமா இருக்கும்மா.  ஆளுங்க வந்து எங்களெ மிதிச்சுட்டா நாங்க செத்துப் போயிடுவோமேம்மா.    

தாய், கவலைப் படாதீங்க.  மறுபடி வந்தா என்ன பேசினாங்கன்னு கவனமா கேட்டு சொல்லுங்க, என்றது.

மறு நாள் மாலை, அம்மா, அம்மா இன்னெக்கி அவர் சொல்லிட்டு இருந்தார், ஆளுங்க வர்ரதாக் காணும்.  நாளெக்கி நாமே வந்து அறுவடை செஞ்சிடலாம்னு,  என்றது ஒரு குஞ்சு.  இதைக் கேட்ட தாய்ப்பறவை, இப்போ நாம வேறெ எடத்துக்குக் கெளம்ப வேண்டியதுதான் என்று சொல்லி ஒவ்வொரு குஞ்சாக வாயில் கவ்விச்சென்று பாதுகாப்பான இடத்திற்கு குஞ்சுகளை மாற்றியது.

இந்தக் கதையில் நமக்கு இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன.  ஒன்று தன் கையே தனக்குதவி என்பது.  மற்றொன்று வானம்பாடி தரையில் கூடு கட்டும் என்பது.

தரிசல் நிலங்கள், ஆற்றுப் படுகைகள்,வயல் வெளிகள் இவற்றில் ஈர மண்ணில் மாட்டுக் குள்ம்பினால் ஏற்பட்ட குழி அல்லது இயற்கையிலேயே உள்ள சிறிய பள்ளம் இவற்றில் காய்ந்த வேர் இலை சரகுகளைக் கொண்டு கிண்ணம் போன்ற தனது கூட்டினை அமைக்கும் வானம்பாடி.  ஆமாம், இது பாடுவது எப்போது ?

சாதாரணமாக பிப்ரவரி முதல் ஜுலை வரையிலான நாட்களில் ஆண் வானம்பாடி தான் உட்கார்ந்திருக்கும் கல்லிலிருந்தோ அல்லது செடியிலிருந்தோ செங்குத்தாக மேலே பறந்து கண்ணுக் கெட்டாத தூரத்தை அடையும்.  பின் தன் இறக்கைகளை மெதுவாக அடித்துக் கொண்டு ஒரே இடத்தில் இருந்தபடி தன் அழகான குரலில் சிறிது நேரம் இசை எழுப்பும்.  அவ்வாறு இசை எழுப்புவது சில சமயம் ஐந்து நிமிஷங்களுக்குக் கூட நிகழும்.  பின் தன் இறக்கைகளை மடித்துக் கொண்டு ஒரு கல் விழுவது போல செங்குத்தாக கீழே பல மீடர் தூரம் இறங்கி தன் இறக்கை களை விரித்துக் கொண்டு மீண்டும் சிறிது நேரம் இசை எழுப்பும்.  இவ்வாறு இரண்டு மூன்று மட்டங்களில் பாடி முடித்தபின் வானம்பாடி முன்பு உட்கார்ந்து இருந்த இடத்தினை வந்தடையும்.



இந்த இசைக் கச்சேரி வாழ்க்கைத் துணை கிடைக்கும் வரை தொடரும்.
இப்படி வானத்தில் இசை எழுப்பி துணை தேடுவதை ஒரு ஆண்
குருவி மட்டடுமின்றி பல ஆண் குருவிகள் போட்டி போட்டுக் கொண்டு செய்வதும் உண்டு.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தபின், தாய் தந்தை ஆகிய இரு பறவைகளுமே அவற்றுக்கு உணவளிப்பதில் பங்கேற்கும்.

ந்ம் நாட்டில் கணப்படும் வானம்பாடிகளில், மூன்று முக்கிய வகைகள் உண்டு.  அவை கொண்டைகொண்ட வானம்பாடி (Crested lark),   ஆகாசத்து வானம்பாடி (Skylark), சாம்பல் தலை வானம் பாடி (Ashy crowned finch lark) என்பவையாகும். 

  

             கொண்டை கொண்ட  வானம்பாடி                               
                (Crested lark)  

(http://birdblog.merseyblogs.co.uk/CRESTED%20LARK.jpg) 

     
                   ஆகாசத்து வானம்பாடி (Skylark)
                     (http://en.wikipedia.org/wiki/Image:Alauda_arvensis_2.jpg)




              சாம்பல் தலை வானம்பாடி (Ashy crowned finch lark)


இயற்கையின்  எழிலை  நாம்  காணும்போது  நமக்கு எவ்வளவு
இன்பம் அளிக்கிறான் இறைவன் !  அளிக்கிறான் என்னும்போது இருக்கிறான் என்பது தெரியாமலா போகும்?

(படங்கள் 1ம் 5ம் எடுத்தது நடராஜன் கல்பட்டு.  மற்ற மூன்றும் இணையத்தில் இருந்து)


                                      நடராஜன் கல்பட்டு


                 (கருப்பு வெள்ளை படங்கள் எடுத்தது நடராஜன் கல்பட்டு)



                                                             

Friday, 7 December 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் ( 7 ) ஆள் காட்டிக் குருவி


மஞ்சள் நிற ஆள்காட்டிக் குருவி (Yellow Wattled Lapwing)

ஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு.  ஆங்கிலத்தில் இதை லேப்விங் (Lapwing) என்று அழைப்பார்கள்.  நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக் காணலாம்.  இவை எல்லோ வேட்டில்ட் லேப்விங்  (Yellow wattled Lapwing) ரெட் வேட்டில்ட் லேப்விங்  (Red wattled Lapwing) என்பவை ஆகும்.  வேட்டில் என்பது இப்பறவையின் அலகு ஆரம்பிக்கும் இடத்தில் தலையின் இரு பக்கங்களிலும் காணப்படும் தோல் போன்ற ஒரு உறுப்பாகும்.  இதன் நிறத்தை வைத்துதான் இந்த இரண்டு பெயர்கள்.  இவ்வுருப்பு இப்பறவைக்குத் தேவையான ஒரு உருப்பா அல்லது ஒரு ஆபரணமா என்பது பற்றி யாரும் இதுநாள் வரை ஆராய்ச்சி செய்துள்ளதாகத் தகவல் ஏதும் இல்லை.



மஞ்சள் ஆள்காட்டிக் குருவி

மஞ்சள் ஆள்காட்டிக் குருவியைப் பார்த்தோம்.  சிவப்பு ஆள்காட்டிக் குருவியைப் பார்க்க வேண்டாமா?  திருப்புங்கள் பக்கத்தை.                                              


சிவப்பு ஆள்காட்டிக் குருவி
(http://en.wikipedia.org/wiki/Image:Red_wattled_Lapwing_I_IMG_0607.jpg)

ஆள் காட்டிக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மரக் கிளிகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ கூடு கட்டி அல்ல, தரையில் தான். தரையில் கூடு என்றவுடன் ஏதோ தேன் சிட்டு,  தையல்காரக் குருவி, தூக்கணாங்குருவி போல நன்றாகக் கூடு கட்டியிருக்கும் என்று நினைக்காதீர்கள்.  தரிசல் நிலங்கள், வயல் வெளிகள், ஆறு குளங்களில் நீர் வற்றிய இடங்கள் இவற்றில் சிறிய கற்கள் பலவற்றை ஒரு குழிவான தட்டு போல சேகரித்து அவற்றின் நடுவே முட்டை இடும்.

இக்குருவி இடும் புள்ளிகள் கொண்ட முட்டைகளின் நிறம் சற்று ஆச்சரியம் அளிக்கக் கூடியது.  சுற்றுப்புர நிலத்தின் நிறத்திற்க்கு ஏற்ப செம்மண் கலரிலோ ஸ்லேட் கலரிலோ இவை இருக்கும்.  அப்படி இருந்தால் தானே எதிரிகளின் கண்களில் இம்முட்டைகள் சட்டென்று தென்படாது ?

பறவைகளின் முட்டைக்கு ஓடு உண்டாவதோ அந்த ஓட்டிற்கு நிறம் தீர்மானிக்கப் படுவதோ முட்டைகள் ஜனன உருப்பிலிருந்து கிளம்பிக் கீழ் இறங்கி வெளிவரும்போது கடைசியாக நிகழும் ஒரு சம்பவமாம்.  இந்தப் பறவைகளுக்கு கூடு இருக்கும் நிலத்தின் நிறத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப முட்டையின் நிறத்தை மாற்றும் சக்தி இருக்க வேண்டும்.

ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள்.

ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும்.  ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, கிரக்...கிரக்... என அபாய ஒலி எழுப்பும்.  உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறு தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத் (dive bombing) தாக்குதல் செய்யும்.  அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே “Did you do it?  Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும் ஆதலால் இப்பறவைகளை Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள்.  இப்போது புரிகிறதா இந்தக் குருவியை ஏன் ஆள்கட்டிக் குருவி என்று பலரும் அழைக்கிறார்கள் என்பது?

இவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் குருவியை நான் சில நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து வந்தேன்.  முதலில் கேமராவை மட்டும் கூட்டின் அருகில் வைத்து விட்டு தூரத்தில் இருந்து ரிமோட் ரிலீஸ் மூலம் படம் பிடித்து வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சென்று இறுதியில் அதனைத் தடவிக் கொடுத்தேன்.  பின் அடை காத்துக் கொண்டிருந்த பறவையை கையில் எடுத்து சுமார் இரண்டடி தூரத்தில் விட்டு அது தன் கூட்டினை அடையும் போது படம் எடுத்தேன். 

 ஒரு முறை எனது நண்பர் ஒருவரை அப்பறவையைதடவிக் கொடுக்கச் செய்து எடுத்த படம் கீழே:

                   

அடர்ந்த காடுகளில் புதர்களுக்கு இடையே புலி யார் கண்ணுக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து தன் இரை நோக்கிச் செல்லும்போது அதனைத் தன் அபாயச் சங்கினை ஊதி (Did you do it?....Did you do it? என்றபடி) பிறருக்கு அறிவிப்பது இந்த ஆள்காட்டிக் குருவி தான்.

இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகளுக்கு ஒரு எல்லையும் உண்டோ?

                                            நடராஜன் கல்பட்டு

               (கருப்பு / வெள்ளை படங்கள் நடராஜன் கல்பட்டு எடுத்தது)



Sunday, 4 October 2009

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (6) குயில்





ஆண் குயில்

குயில் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அதன் குரல்தான். ஆனால் அந்தக் குயிலுக்குள் ஒரு குள்ள நரித் தனம் ஒளிந்திருப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும் ?

மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும்.




பெண் குயில்

சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும்.

சூதறியாத காகம் குயிலின் முட்டையயும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.

ஓன்று கவனித்திருக்கிறீர்களா? குயில் சாதாரணமாக அதிகாலையிலும் மாலையிலும் கூவும். அப்போது முதலில் ஒரு குயில் கூவும். அதைக் கேட்டு மற்றொரு குயில் சற்று தூரத்தில் இருந்து தன் குரல் எழுப்பும். இதைக் கேட்ட மூன்றாவது குயில் இன்னும் கொஞ்ச தூரத்திலிருந்து பாட ஆரம்பிக்கும். பின் முதல் குயில் மீண்டும் தன் குரலை எழுப்பும். இப்படியே பந்தயங்களில் - ரிலே ரேஸ் என்பார்களே - அதுபோல பல குயில்கள் சேர்ந்து தங்களது இசைக் கச்சேரியை நடத்தும்.

செவிலித் தாய் தந்தை காகமல்லாது வேறு ஏதாவது சிறு பறவையாக இருந்தால் குயில் குஞ்சு வளர வளர செவிலிகளின் உண்மைக் குழந்தைகள் நசுங்கியே இறந்துவிடும். சிலசமயம் உணவளிக்கும் சிறு பறவை குயில் குஞ்சின் மீதே வந்திறங்கி உணவளிக்கும்.



தாய் சிறிது சேய் பெரிது


குயில்களில் பல வகை உண்டு. குரல் கேட்டு நாம் மகிழும் குயில் ஒன்று. இது கொஞ்சும் குயில் என்றால் ற்றொரு குயிலின் பெயர் கெஞ்சும் குயில் (Plaintive cuckoo).
அக்கூ ... அக்கூ ...” என்று கூவும் இப்பறவையை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தன் அக்காவை நினைத்து அழுவதாக நம்பும் நம் மக்கள் இதனை அக்கூ பக்ஷி என்றழைப்பார்கள்.





அக்கூ பக்ஷி



கொண்டைக் குயில்


பைடு க்ரெஸ்டெட் குக்கூஎன்றொரு குயில் உண்டு. இது கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் கொண்டை போன்று சில சிறகுகள் இருக்கும் இப் பறவைக்கு.

மரங்கள் அடர்ந்த கிராமப் புறங்களில் வேறு ஒரு குயிலினைக் காணலாம். அதன் பெயர் என்ன தெரியுமா ?


(மூளைக் காய்ச்சல் பறவை )

அதன் பெயர் வேட்டையாடும் குயில் அல்லது மூளைக் காய்ச்சல் பறவை (Hawk cuckoo or the Brain fever bird). இதற்கு இப்பெயர் வரக் காரணம் இது எழுப்பும் ஒலிதான். இது கத்தும் போது, ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்.... என்பது போலக் கத்தும். அவ்வாறு கத்தும்போது இப்பறவை தன் ஒலி அளவு, ஸ்தாயி (volume and pitch) இரண்டையும் உயர்த்திக் கொண்டே போகும். பிறகு சட்டென்று நிறுத்தி விட்டு சில நிமிஷ இடைவெளிக்குப் பின் மறுபடி முதலிலிருந்து தொடங்கும்.

சாதாரணமாக ரோமம் அடர்ந்த ( Hairy caterpillars ) கம்பளிப் பூச்சியை பறவைகள் உண்ணாது. காரணம் உங்களுக்கே தெரியும். தப்பித் தவறி நம்மேல் பட்டு விட்டால் எப்படி அரிக்கும் உடல் பூராவும் ? ஆனால் இந்தப் பறவையோ கம்பளிப் பூச்சியயை சர்வ சுதந்திர மாக உண்ணும். (இதை நேரில் பார்த்து ஆச்சரியப்படும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு முறை கிட்டியது.)





குரல் இனிமை படைத்த இசை பாடும் குயில். இந்தக் குயிலில் தான் எத்தனை விந்தைகளை வைத்திருக்கிறான் இறைவன் !

நடராஜன் கல்பட்டு

(வண்ணப் படங்கள் கூகிள் மற்றும் விகிபீடியா இணய தளங்களிலிருந்து)