Monday 27 July, 2009

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (4) தூக்கணாங்குருவி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:(4) தூக்கணாங் குருவி
            
    மேலே:  தூக்கணாங் குருவி – பெண் பறவை 
கீழே: தூக்கணாங் குருவி - ஆண் பறவை
பறவைகளில் தையல்காரர் இருந்தால் அவர் தைப்பதற்குத் துணி வேண்டாமா? துணி என்றால் அதை நெய்வதற்கு நெசவாளர் ஒருவர் வேண்டுமே. அவர்தான் ஆங்கிலத்தில் Weaver Bird என்று அழைக்கப்படும் தூக்கணாங் குருவி. இந்தக் குருவி ஏன் வீவர் பேர்ட் என்று அழைக்கப் படுகிறது தெரியுமா? இது தன் கூட்டை நெற்பயிரின் இலைகளை நார் நாராகக் கீழித்து எடுத்துக் கொண்டு வந்து பின்னித் தயார் செய்யும். கிராமப் புறங்களிலும் இருப்புப் பாதை அருகிலும் உள்ள நீர் நிலைகளுக்கு மேலாக உள்ள கிளைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இக்கூடுகள்.
ஆரம்பத்தில் சுண்டு விரல் பருமனில் இருக்கும் இக்கூடுகள் நடுவில் ஒரு பந்து போன்று விரிந்து பின் அதன் ஒரு பக்கத்திலிருந்து ஒரு குழாயாக மாறும். கீழ் நோக்கி இருக்கும் இக்குழாய்தான் கூட்டிற்குள் செல்லும் வழி.
கூட்டினைப் பின்னுவது ஆண் பறவை. பின்னி முடியும் தருவாயில் ஆண் பறவை கூட்டின் மீது அமர்ந்து இறக்கைகளை வேகமாக அடித்தபடி “கிச் கிச் கிச் கிச்......சீ..........”. என தன் குரலை எழுப்பும். துணை தேடி. ஒரு பெண் பறவை கூட்டைப் பார்த்து ஒப்புதல் அளித்து, பின் கூட்டின் உட்புறத்தை பஞ்சு, மெல்லிய காய்ந்த வேர், சருகு இவற்றைக் கொண்டு, முட்டையிட்டு குஞ்சு பொரிக்க லாயக்காக இடம் தயார் செய்யும். மனைவி கிடைத்த ஆண் பறவை பக்கத்திலேயே மேலும் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ என்று கூடுகளைத் தயார் செய்து மேலும் மேலும் துணைகளைத் தேடிக்கொள்ளும்! பொல்லாத பறவை!
(பாதி கட்டப் பட்ட கூண்டினைப் பார்வையிடுகிறது பெண் பறவை. ஓலையில் உட்கார்ந்திருப்பது ஆண் பறவை.)
தூக்கணாங் குருவிகளில் திருடர்களும் உண்டு. ஒரு குருவி கஷ்டப் பட்டு நார் கிழித்துக்கொண்டு வந்து கூட்டினைப் பின்னும்போது மற்றொரு குருவி கடைசியாகப் பின்னப்பட்ட நாரினைத் திருடிச் சென்று தனது கூட்டைப் பின்னும். (இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.)
உருவத்திலும் பருமனிலும் சிட்டுக் குருவி போன்று இருக்கும் இப்பறவை உண்பதிலும் சிட்டுக் குருவி போன்றே தானியங்களைத் தின்னும். நெற் கதிர்கள் முற்றி இருக்கும் தருவாயில் கூட்டம் கூட்டமாக வந்து அவற்றைத் தின்று நஷ்டம் விளைவிக்கும்.
தூக்கணாங் குருவிக்கு முக்கிய எதிரி பாம்பு. மரத்தின் வழியே வந்து கூட்டிற்குள் சென்று குஞ்சுகளைத் தின்றுவிடும். சில சமயம் பளு தாங்க முடியாமல்கூடும் குஞ்சுகளும் பாம்புமாகத் தண்ணீரில் விழுந்து பாம்பு குஞ்சுகளைத் தின்று விழுங்கியபின் கரை ஏறிவிடும். அதனால் தானோ என்னவோ ஒரே சமயத்தில் பல குடும்பங்களைத் தயார் செய்கிறது இப்பறவை.

தூக்கணங் குருவிக்கு மற்றொரு பெயர் பாயாஎன்பது. ஒருக்கால் ஹிந்தி பெயரோ என்னவோ!
தூக்கணாங் குருவிக்கு நேர் எதிர் Sarus Crane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் நாரை இனத்தைச் சேர்ந்த கிரவுன்ச பக்ஷி. இப்பறவை பற்றிப் பின்னர்பார்ப்போம்.
இறைவன் படைத்துள்ள இயற்கையில் தான் எத்தனை எத்தனை விநோதங்கள்!
                                                                      - நடராஜன் கல்பட்டு
                    (வண்ணப் படங்கள் மட்டும் விகிபீடியா இணய தளத்திலிருந்து)

1 comment:

  1. தூக்கணாங்குருவிக் கூடு,
    தூங்கச் சொன்னா(தூங்குமூஞ்சி மரம்) மரத்துமேலே
    சும்மாப் போன மச்சானுக்கு
    என்ன நினைப்பு மனசுக்குள்ளே//

    இந்தப் பாட்டு சம்பந்தம் இல்லாமல்?? நினைவில் வந்தது. நல்ல கவனிப்பு.

    ReplyDelete