Monday, 27 July 2009

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (4) தூக்கணாங்குருவி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:(4) தூக்கணாங் குருவி
            
    மேலே:  தூக்கணாங் குருவி – பெண் பறவை 
கீழே: தூக்கணாங் குருவி - ஆண் பறவை
பறவைகளில் தையல்காரர் இருந்தால் அவர் தைப்பதற்குத் துணி வேண்டாமா? துணி என்றால் அதை நெய்வதற்கு நெசவாளர் ஒருவர் வேண்டுமே. அவர்தான் ஆங்கிலத்தில் Weaver Bird என்று அழைக்கப்படும் தூக்கணாங் குருவி. இந்தக் குருவி ஏன் வீவர் பேர்ட் என்று அழைக்கப் படுகிறது தெரியுமா? இது தன் கூட்டை நெற்பயிரின் இலைகளை நார் நாராகக் கீழித்து எடுத்துக் கொண்டு வந்து பின்னித் தயார் செய்யும். கிராமப் புறங்களிலும் இருப்புப் பாதை அருகிலும் உள்ள நீர் நிலைகளுக்கு மேலாக உள்ள கிளைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இக்கூடுகள்.
ஆரம்பத்தில் சுண்டு விரல் பருமனில் இருக்கும் இக்கூடுகள் நடுவில் ஒரு பந்து போன்று விரிந்து பின் அதன் ஒரு பக்கத்திலிருந்து ஒரு குழாயாக மாறும். கீழ் நோக்கி இருக்கும் இக்குழாய்தான் கூட்டிற்குள் செல்லும் வழி.
கூட்டினைப் பின்னுவது ஆண் பறவை. பின்னி முடியும் தருவாயில் ஆண் பறவை கூட்டின் மீது அமர்ந்து இறக்கைகளை வேகமாக அடித்தபடி “கிச் கிச் கிச் கிச்......சீ..........”. என தன் குரலை எழுப்பும். துணை தேடி. ஒரு பெண் பறவை கூட்டைப் பார்த்து ஒப்புதல் அளித்து, பின் கூட்டின் உட்புறத்தை பஞ்சு, மெல்லிய காய்ந்த வேர், சருகு இவற்றைக் கொண்டு, முட்டையிட்டு குஞ்சு பொரிக்க லாயக்காக இடம் தயார் செய்யும். மனைவி கிடைத்த ஆண் பறவை பக்கத்திலேயே மேலும் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ என்று கூடுகளைத் தயார் செய்து மேலும் மேலும் துணைகளைத் தேடிக்கொள்ளும்! பொல்லாத பறவை!
(பாதி கட்டப் பட்ட கூண்டினைப் பார்வையிடுகிறது பெண் பறவை. ஓலையில் உட்கார்ந்திருப்பது ஆண் பறவை.)
தூக்கணாங் குருவிகளில் திருடர்களும் உண்டு. ஒரு குருவி கஷ்டப் பட்டு நார் கிழித்துக்கொண்டு வந்து கூட்டினைப் பின்னும்போது மற்றொரு குருவி கடைசியாகப் பின்னப்பட்ட நாரினைத் திருடிச் சென்று தனது கூட்டைப் பின்னும். (இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.)
உருவத்திலும் பருமனிலும் சிட்டுக் குருவி போன்று இருக்கும் இப்பறவை உண்பதிலும் சிட்டுக் குருவி போன்றே தானியங்களைத் தின்னும். நெற் கதிர்கள் முற்றி இருக்கும் தருவாயில் கூட்டம் கூட்டமாக வந்து அவற்றைத் தின்று நஷ்டம் விளைவிக்கும்.
தூக்கணாங் குருவிக்கு முக்கிய எதிரி பாம்பு. மரத்தின் வழியே வந்து கூட்டிற்குள் சென்று குஞ்சுகளைத் தின்றுவிடும். சில சமயம் பளு தாங்க முடியாமல்கூடும் குஞ்சுகளும் பாம்புமாகத் தண்ணீரில் விழுந்து பாம்பு குஞ்சுகளைத் தின்று விழுங்கியபின் கரை ஏறிவிடும். அதனால் தானோ என்னவோ ஒரே சமயத்தில் பல குடும்பங்களைத் தயார் செய்கிறது இப்பறவை.

தூக்கணங் குருவிக்கு மற்றொரு பெயர் பாயாஎன்பது. ஒருக்கால் ஹிந்தி பெயரோ என்னவோ!
தூக்கணாங் குருவிக்கு நேர் எதிர் Sarus Crane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் நாரை இனத்தைச் சேர்ந்த கிரவுன்ச பக்ஷி. இப்பறவை பற்றிப் பின்னர்பார்ப்போம்.
இறைவன் படைத்துள்ள இயற்கையில் தான் எத்தனை எத்தனை விநோதங்கள்!
                                                                      - நடராஜன் கல்பட்டு
                    (வண்ணப் படங்கள் மட்டும் விகிபீடியா இணய தளத்திலிருந்து)

Wednesday, 15 July 2009

வண்ணாத்திக் குருவி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்        
  1. வண்ணாத்திக் குருவி
ஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி.  வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடையதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோஅல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ?
           

வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும்.  மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும்.  பிப்ரவரி மாதம் ப்ரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும்.  முதலில் ஸ்ருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் ஸ்வரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும்.  ஸ்ருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள்.  ராதை வேறு யாரும் இல்லை.  சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி   தான்.  இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும். 
   
                                       ( என் குரல் புடிச்சிருக்கா ? )
இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது அல்லவாஎங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும்.  இரு ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும்.  வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும்.
வில்லன் மற்றொரு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.  நீங்களாகக் கூட இருக்கலாம்.  ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள்.  அது உங்களையும் தாக்கும்

ாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்துவிட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். சொந்த அனுபவத்தில்
தான் இதைச்சொல்கிறேன்.
வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும்.  கூடு காய்ந்த வேர்கள்,புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும்.  செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும்.  குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.
வண்ணாத்திக் குருவியை 1965 ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ.
பங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினைக் கண்டு  நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க  ஆரம்பித்தோம்.  அலுவகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், "என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டனர்.  நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம்.  மூன்றாவது நாள் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க மற்றொருவர், "விடுப்பா.  அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன்.  அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க" என்றாரே பார்க்க வேண்டும்!
வண்ணாத்திக் குருவியைக் கண்டால் கவனமாகப் பாருங்கள்.  அதன் ஆடை அழகிலும், குரலிலும் நீங்களும் மயங்கிப் போய் இவற்றை அளித்த ஆண்டவனைக் கட்டாயம் காண்பீர்கள்.
                                                                                 நடராஜன் கல்பட்டு

Saturday, 4 July 2009

தையல்காரக்குருவி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:
(2)   தையல்காரக்குருவி
தையல்காரக்குருவி (Orthotomus sutorious) ஆண் பறவை (http://en.wikipedia.org/wiki/Image:Orthotomus_sutorius.jpg)
மனிதர்களில்மட்டும் தானா தையல்காரர்கள்பறவைகளில் இல்லையாஏன் இல்லை.  ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உங்கள் தோட்டத்தில் "கிவீ...கிவீ..." என்று கணீரென  ஒரு குருவியின் குரல் கேட்கிறதாசற்று கூர்ந்து கவனியுங்கள்.  பறவையின தையல்காரரை உங்களால் பார்க்க முடியும்.  அதுதான் 'Tailor bird' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் தையல்காரக்   குருவி. 
குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல்காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக.  (வண்ணப் படத்தில் உள்ள ஆண் குருவியின் வால் இறகுகளைப் பாருங்கள்)
இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா?
சற்றே அகலமான இலயினைத் தேர்ந்தெடுத்து அதனை பறந்து கொண்டிருக்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும்.  பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைக்கும்.  தனது கூறிய அலகினைக் கொண்டு இலயின் விளிபில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதை பின் தட்டையாக்கும்.  இவ்வாறு செய்வதால் 'ரிவெட்' அடித்தாற் போல கூடு தயார் ஆகிவிடும்.  ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும்காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை  தயார் செய்யும். (குருவிக்கு பஞ்சு எங்கிருந்து கிடைக்கும் என்று யோசிக்கிரீர்களாகுப்பை மேட்டிலிருந்துதான்) 
இவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடு படும்.
 
(குஞ்சுகளுக்கு ஆகாரம் இதோ அலகின் நுனியில்)
தையல்காரக் குருவிகள் பறக்கும் போது வலுவு அற்றவைகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிருந்து வருமோ, அதனைப் படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம்.
தையல்காரக் குருவிகள் தூங்கும் போது பார்பதற்கு வெகு அழகாக இருக்கும்.  இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டு உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளிக் கொண்டு (puffing up the feathers) ஒரு பூப்பந்துபோல செய்துகொண்டு தூங்கும்.  இது எதற்காக என்று தெரியுமா? குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தான்.
(எங்களுக்குத் தூக்கமா வருது)
நாம் தூங்க ஆரம்பிக்கும் போது நம் கைகளிலே ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் சற்று நேரத்திற்கெல்லாம் நமது கை தானாக விரிந்து கொண்டு கையில் உள்ள பொருள் கீழே விழுந்துவிடும்.  சிறு குழந்தைகள் தூங்கச் செல்லும் போது மிகவும் பிடித்த பொருளை கையில் வைத்துக் கொண்டிருக்கும்.  ஆனால் தூக்கம் வந்த சற்று  நேரத்திற்கெல்லாம் அப்பொருள் கையிலிருந்து விடுபட்டு படுக்கையில் விழுந்துவிடும். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறவைகள் தூங்கும் போதோ அவற்றின் விரல்கள் இறுகிக் கொண்டே போகும்.  அதனால் அவை ஒரு போதும் கீழே விழாது. 
இயற்கையில் இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை!
                                                                       நடராஜன் கல்பட்டு

Tuesday, 30 June 2009

தேன்சிட்டு

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்
இறைவனது படைப்புகள் நம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியவைஅது தாவரங்கள் ஆகட்டும்புழு பூச்சிகளாகட்டும், பறவைகளாகட்டும் அல்லது மிருகங்களாகட்டும்அவை ஒவ்வொன்றயும் கூர்ந்து நோக்கினால் பல வியக்கத்தக்க உண்மைகள் நமக்குப் புரியும்உண்மைகள் புரியும்போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நமக்குத் தெரியாமலா போவார்?
என் அனுபவத்தில் கண்டறிந்த சில விஷயங்கள் பற்றித் தொடராக எழுத  நினைக்கிறேன்அவ்வப்போது நான் எடுத்த சில புகைப் படங்களையும் இணைக்கவிருக்கிறேன்.
1.  தேன் சிட்டு  : பாகம் (1)
பறவைகளைக் கூர்ந்து நோக்குதல் (bird watching) என்பது ஒரு ஆனந்தமான பொழுது போக்கு.
காலை ஆறு மணிக்கு "கீ..வூ...கிக்வூ..கிக்வூ.." என்ற சத்தம் கேட்டு படுக்கை அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறேன்இரண்டு சிறிய குருவிகள் ஒன்றை ஒன்று துரத்தியவாறு பறந்து கொண்டிருக்கின்றன தோட்டத்தில் உள்ள ஒரு செம்பருத்திச் செடியின் கிளைகளின் ஊடே.
சற்று நேரத்துக்குப் பின் அவை தனது நீண்டு வளைந்த அலகு மற்றும் குழாய் போன்ற நாக்கைக் கொண்டும் செம்பருத்திப் பூவிலிருந்து தேனை உரிஞ்சுகின்றன.  அவை பறந்து மலரை அடையும் போது, சில சமயம் ஒரே இடத்திலும், சில சமயம் முன்னும், சில சமயம் பின்னுமாகப் பறக்கின்றன.
தேன் சிட்டு ஒரு மலரில் உட்காரும்போது கிளை வளைந்து குருவி தலைகீழாக திரும்பினாலும் அது தேன் அருந்துவதை நிறுத்தாது.
அமெரிக்காவில் உள்ள 'ஹும்மிங்க் பேர்ட்' ரகத்தைச் சேர்ந்த இப்பறவைகள், உருவத்தில் சிட்டுக்குருவியை விடச் சிறியவை.  'ஹம்மிங்க் பேர்ட்'ஐ விடப் பெரியவைபெண் குருவி பச்சை கலந்த பழுப்பு நிற இறக்கைகள் மற்றும் தலை, முதுகையும் வெளிர் நிற அடிப்பாகத்தையும் கொண்டதுஆண் குருவியின் தலை, கழுத்து இவை கரு நீலத்தில் மயில் கழுத்து போன்று மின்னும்இறக்கையும் முதுகும் கருமையாகவும் அடி முதுகுகரு நீலத்திலுமாகவும் அடிப் பாகம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்ஆங்கிலத்தில் இதன் பெயர் பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் என்பதாகும்.
நம் நாட்டில் காணப்படும் சன் பேர்ட் கள் இருவகைப் படும்ஓன்று பர்பிள் சன்பேர்ட்மற்றொன்று பர்பிள் ரம்ப்ட் சன்பேர்ட் என்பதாகும்இரண்டாவது வகையே நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும்முதல் வகையை ஸ்க்ரப் ஜங்கிள் என்று அழைக்கப் படும் சிறு காடுகளில்தான் அதிகம் பார்க்கமுடியும்.
                                                                                                                                                                             
    
பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் பெண் குருவி
பர்பிள் ரம்ப்ட் சன் பேர்ட் ஆண் குருவி
 

பர்பிள் ன் பேர்ட் வகையின் ஆண் குருவி முற்றிலும் கருநீல நிறத்தில் இருக்கும்அதன் கழுத்தும் தலையும் மயில் கழுத்துப் போல மின்னும்.
பர்பிள் சன் பேர்ட் ஆண் குருவி
தேன் சிட்டின் கூடு செடிகளின் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும். காய்ந்த சரகு, வேர்கள் இவற்றால் சிலந்தியின் வலைத் துண்டுகள் கொண்டு ஒட்டப் பட்டிருக்கும்வெளியே ஆங்காங்கே சிறிய வெள்ளைக் காகிதத் துண்டுகளோ அல்லது எட்டுக்கால் பூச்சியின் முட்டைகளைப் பாதுகாக்கும் உறையோ (வெள்ளை நிறத்தில் சுமார் ஒரு சென்டிமீடர் விட்டத்தில் வட்டமாக இருக்கும்) ஒட்டப் பட்டிருக்கும்இவ்வாறு செய்வது அழகுக்காகவா அல்லது கூட்டினை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவா என்பது இப்பறவைகளைப் படைத்த ஆண்டவனுக்கே வெளிச்சம்கூட்டிற்குள்ளே செல்ல பக்கவாடில் சுமார் மூன்று அல்லது நன்கு சென்டிமீடர் அளவிலான துவாரம் இருக்கும்அந்த துவாரத்திற்கு ஒரு 'சன் ஷேடும்' அமைக்கப் பட்டிருக்கும்கூட்டின் கீழ் பாகத்திலிருந்து சிறிய காய்ந்த இலைச் சரகுத் துண்டுகள் தொங்கிக் கொண்டு இருக்கும்கூட்டினைக் கட்டுவது பெண் குருவியேஆண் குருவியோ தானும் விழுந்து விழுந்து வேலை செய்யும் பாவனையில் கூடக் கூட பறந்து கொண்டிருக்கும்கூட்டின் உள்ளே பஞ்சு மெல்லிய வேர்த் துண்டுகள் இவற்றால் மெத்தை அமைக்கப் பட்டிருக்கும்குழந்தைகளுக்கு உறுத்தக் கூடாதல்லவா?
                                                                                 தொடரும்.....
                                                                                   
                                                                                                           
 

நல்வரவு ....

ஸ்ரீ கல்பட்டு நடராஜன், ஸ்ரீமதி சாந்தா தம்பதியருக்கு அவர்களுக்கு அவர்களுடைய
சதாபிஷேகத்தை ஒட்டி இந்த பதிவுகள் சமர்ப்பணம். முன்னேயே அவருடைய அனுமதி கேட்டு நவ்ரங் இன் படத்தை சித்திரம் பேசுதடியில் சமர்பித்த போது "ஏன் என் மற்ற படங்களையும் போடலாமே!" என்று கேட்டார். அப்போது அவருக்கு என்று தனி பதிவு ஒன்று இருக்க வேண்டும் என்றூ தோன்றியதால் செய்ய வில்லை. இப்போது பதிவு ஒன்றை நானே துவக்கி அவரை கோ ஆதராக ஆக்கிவிட்டால் அவருக்கும் தொழில் நுட்பத்தால் பிரச்சினை இருக்காது என்று எண்ணம்....