Wednesday, 26 December 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (13) இருவாட்சி
பறவைகளில் நாம் தையல்காரர், நெசவாளர், பாடகர், தச்சர்   இவர்களைப் பார்த்தோம்.  ஒரு கட்டிடத் தொழிலாளியைப் பார்க்க வேண்டாமா?

இருவாட்சி, மலை இருவாட்சி, செண்டு என்ற சொற்கள் மலர்களைப் பற்றிப் பேசும்போது  வரும் வார்த்தைகள்.  இச் சொற்களையே தன் பெயராகக் கொண்ட ஒரு வினோதப் பறவையும் உண்டு.  அதுதான் ஆங்கிலத்தில் ஹார்ன்பில் (Hornbill) என்றழைக்கப் படும் பறவை.  நம் நாட்டில், ரெட்டைச் செண்டு அல்லது சின்ன இருவாட்சி (Grey Hornbill) என்ற ஒரு பறவையும், மலை இருவாட்சி (The Great Indian or Malabar Hornbill) என்னும் பறவையயும் சுமார் ரெண்டாயிரம் அடிகளுக்கு மேல் உயர்ந்த பிரதேசங்களில் மரங்களில் வசிப்பதைக் காணலாம்.

பெயருக்கு ஏற்றாற்போல் இவற்றின் மேல் அலகு கொம்பு முளைத்தது போன்று இருக்கும்.  இந்த உருப்பின் உபயோகம் என்ன தெரியுமா ?

இருவாட்சி மரப் பொந்துகளில் தனது கூட்டினை அமைக்கும்.  முட்டைகள் இட்டபின் அவற்றினை அடை காக்கப் பெண் பறவை கூட்டினுள் உட்கார்ந்து கொண்டு, தனது எச்சத்தைக் கொண்டு பொந்தின் துவாரத்தினை தனது கொம்பு முளைத்த அலகினை கட்டிடத் தொழிலாளியின் கையில் உள்ள கொலுறு போன்று உபயோகித்து காரை பூசியதுபோல் அடைத்துவிடும்.  பின் அதில் ஒரு சிறு துவாரம் செய்து விடும்.  அடுத்த பதினைந்து இருபது நாட்களுக்கு மனைவிக்கு உணவு கொண்டு வந்து ஊட்டிவிட வேண்டியது கணவனின் பொறுப்பு.  இந்த வேலையைச் செய்ய வேண்டி இருப்பதால் ஆண் பறவை தான் உண்ண நேரமின்றி இளைத்துத் துரும்பாகிவிடும்.  பெண் பறவையோ உட்கார்ந்த இடத்திலேயே உண்டு உறங்குவதால் கொழுத்துவிடும்.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வந்தபின், தாய்ப் பறவை பூசிய காரையினை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும்  முன் போலவே பூசிவிட்டு, தாய் தந்தை இருவருமாக குஞ்சுகளுக்கு இரை கொண்டு வந்து கொடுக்கும். இப்பறவைகளின் உணவு ஆல், அரசு, அத்தி போன்ற மரங்களின் பழங்கள்.

இனி பாருங்கள் இருவாட்சியின் இரு காட்சிகளை.

இரெட்டைச்செண்டுக் குருவி அல்லது சின்ன இருவாட்சி
(Grey hornbill)
(http://en.wikipedia.org/wiki/Image:Indian_Grey_Hornbill_I_IMG_4051.jpg)
                               

மலை இருவாட்சி (The Malabar Great Indian Hornbill)
(http://en.wikipedia.org/wiki/Image:Doppelhornvogel-09.jpg)

இயற்கையின் எழிலினைக்கூட்ட எப்படியெல்லாம் படைப்புகளைத் தந்துள்ளான் இறைவன் ! நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப்  படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான் ?

                                      நடராஜன் கல்பட்டு

4 comments:

  1. ஆஹா! சேமித்து வைக்கவேண்டிய அற்புதமான கட்டுரை.

    ReplyDelete
  2. இந்த தொடர்பதிவுகள் நல்ல செய்திகளுடன் கூடிய, இனிய நடையில் எழுதப்பட்டனவாக இருக்கின்றன. பொதுவாக பறவையியல், பறவை பார்த்தல் தொடர்பான நூல்களில் அவைகளைப் பற்றிய பெயர்கள், வாழிடங்கள் பற்றிய சுருக்கமான விவரங்களே தரப்ப்டுகின்றன. அரிதாகவே வலசை போவதைப் பற்றிய குறிப்புகள் (தமிழில்) காணக்கிடைக்கின்றன. ஆனால் முந்திய தலைமுறையிடம் ஒவ்வொருபறவை பற்றிய வாழ்வியல் தகவல்கள், மனிதனுக்கும் அப்பறவைக்குமான தொடர்புகள் பற்றிய சுவையான தகவல்களும் கதைகளும் உள்ளன. அக்கதைகளில் சில அறிவியலுக்கு மாறான தகவல்களும், கற்பனைகளும் இருக்கலாம். ஆனால் அவைகள் பறவைகளைப் பற்றிய இன்னொரு விதமான மாற்று அணுகுமுறையால் வந்தவை.ஒரு பழக்குடி பார்வையில் இருந்து தோன்றியவைகள் அவைகள். அவைகள் எப்படி இருப்பினும் தற்போது இருக்கும் நுகர்வியப் பார்வையைப் போல மற்ற உயிர்கள் அலட்சியப்படுத்தவோ, அவற்றின் சூழல் சார்ந்த இருப்பை நிராகரிக்கவோ செய்யாது. அவைகளில் இருக்கும் சில பாதகமான விசயங்களைப் பற்றிய குறிப்புகளோடு (ஆந்தையை பற்றிய உங்கள் குறிப்புகள் போல) அவைகளை பதிவு செய்து வைத்தல் இப்போது காலத்தின் கட்டாயம். இல்லாவிடில் நமது பாரம்பரியப் பார்வையில் ஏற்படட்ட பேரிழப்பாகவே அது இருக்கும். உங்கள் பதிவுகளை அவ்வகையில் எழுதி தொகுக்கவும் பிரசுரிக்கவும் செய்தால் தமிழுக்கும், பறவையியலுக்கும் அது பெருஞ்செல்வமாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  3. I am getting more and more amazed by the information you provide.

    Ram

    ReplyDelete
  4. கண் கொள்ளாக் காட்சிகள். நன்றிங்க ஐயா!!

    ReplyDelete