இயற்கையின் எழலில்
இறைவனைக் காண்போம் – (10) மரங்கொத்தி
மரங்கொத்தி என்றவுடன் நம் அனைவருக்கும் மனத்திரையில்
தோன்றும் பறவை இதோ இந்தப் பறவை தான்.
கருங்கல் இடை வெளியில் ஹூபோவின் கூடு
ஆனால் இப் பறவையின்
பெயர் ஆங்கிலத்தில்
‘ஹூபோ’ என்பதாகும்.
விஞ்ஞானிகள் இதை ‘உபாபா இபாப்ஸ்’ என்பர். காரணம் என்ன தெரியுமா? இது கத்தும்போது ‘உப்பாப்பாப்...உப்பாப்பாப்..’ என்று குரல் எழுப்பும்
என்பதுதான்.
உண்மையான மரங்கொத்தி போல இது மரத்தைக் கொத்தி ஒரு
பொந்து செய்து அதன் கூட்டை அமைப்பதும் இல்லை.
மரம் கொத்தி போல மரப் பட்டைகளின் இடையே இருந்து புழு பூச்சிகளைத் தேடி
உண்பதும் இல்லை. சுவர்களில் உள்ள இடைவெளி களிலோ அல்லது மரங்களில் ஏற்கெனவே உள்ள
பொந்துகளிலோ தனது கூட்டினை அமைத்துக் கொள்ளும்.
இரை தேடுவது தரையில் கிடக்கும் இலை, சரகு, கற்கள் இவற்றைத் தள்ளி
அவற்றுக்கடியில் கிடைக்கும் புழு பூச்சிகளை.
தரையில் இரை தேடும் ஹூபோ
இதன் கூட்டருகே மனிதர்களோ, பூனை, காகம் போன்றவையோ நெருங்கினால் குச்சி
போலத் தோன்றும் கொண்டைச் சிரகினை விசிறி போல் விரித்துக் கொண்டு “சர்...சர்...சர்...” என்று கத்தியபடி மேலும் கீழுமாகப் பறக்கும்.
("யாரு என் கூட்டருகே வரது?"
உண்மையான மரங்கொத்திகள் அடிமரத்தினைத் தனது
கால் விரல்களால் இறுகப் பிடித்த படி சுற்றிச் சுற்றி மேல் ஏறும். அவ்வாறு ஏறும் போது தனது அலகினால் மரப் பட்டையினை
டொக் டொக் டொக் என்று தட்டிக் கொண்டே செல்லும்.
சில சமயம் ஏதோ மறந்து விடடாற்போல சர்ரென்று செங்குத்தாகக் கீழிறங்கி மரப்
பட்டையினைத் தட்டிப் பார்க்கும். அப்படிச்
செய்வது மரப் பட்டைகளுக்கு இடையே இருக்கும் புழு பூச்சிகள் மற்றும் வண்டுகள்
செய்துள்ள துளைகள் இவற்றைக் கண்டு பிடிக்கவே.
உணவு கிடைக்கும் என்று தெரிந்த உடன் தனது வலுவான் அலகினைக் கொண்டு
அவ்விடத்தில் ஒரு துளை செய்து தனது நீண்ட நாக்கினை உள்ளே விட்டு புழு பூச்சி வண்டு
இவற்றை ஈட்டியினால் குத்தி இழுப்பதுபோல் வெளியே இழுத்து உண்ணும்.
மரங்கொத்தியின் நாக்கு 10 முதல் 15 சென்டிமீடர் நீளத்திற்கு எலியின் வால்
போன்று இருக்கும். நுனியில் அறை சென்டிமீடர் தூரத்துக்கு ஈட்டி முனையில் இருப்பது போன்ற பல அலகுகள்
இருக்கும். இவ்வாறு அமைந்திருப்பதால்
புழு, பூச்சி, வண்டு இவற்றைக் குத்தி வெளியே கொண்டுவர முடிகிறது.
மரங்கொத்தி கூடு அமைப்பது பார்க்க வெகு வேடிக்கையாக இருக்கும். தனது கால் விரல்களினால் மரத்தினை இறுகப்
பிடித்துக் கொண்டு உளி போன்ற அலகினால் வேகமாக ‘டொக்..டொக்..டொக்..’ என்று கொத்தி சுமார் மூன்றங்குலம் விட்டம் கொண்ட ஒரு துளை செய்து பின்
அத் துளையினை கீழ் நோக்கி 6 முதல் 8 அங்குல நீளத்திற்குக் கொண்டு செல்லும். பின்
துளையின் விட்டத்தை சற்று அதிகரிக்கும்.
இவ்வாறு அதிகரிக்கப் பட்ட பாகம் 3 முதல் 4 அங்குலம் வரையிலான நீளத்திற்கு
இருக்கும். இந்த பாகம் தான் அது முட்டை
இட்டுக் குஞ்சு பொரிக்கும் அறை. மரத்
துகள்கள்தான் குஞ்சுகளுக்கு மெத்தை.
மரங்கொத்தி கூடு அமைப்பதற்காக மரத்தினைக் கொத்தும்போது மின் துளைப்பானால்
துளை போடுவது போல நாலா பக்கமும் மரத் துகள்கள் வாரித் தெரிக்கும். மரங்கொத்தியின் மற்றொரு தமிழ்ப் பெயர் தச்சன்
குருவி ! சரியான பெயர் தான்!
மரங்கொத்திகளுக்கு இறைவன் அதன் வாழும் முறைக்கேற்ப சில விசேஷ அமைப்புகளை
அளித்திருக்கிறான். அது மரத்தினைக் கொத்துவதற்கு ஏற்ற உளி போன்ற அலகு,
கொத்தும் போது ஏற்படக்கூடிய எதிர் சக்தியில் கீழே விழுந்து விடாமல் இருக்க
உடும்புப் பிடியெனப் பிடிக்கும் கால் விரல்கள், எதிர் அதிர்வுகளைத்
தாங்கும் தசைகள் அடர்ந்த கழுத்து,
அதிர்வுகள் மூளைக்குச் சென்று தாக்காமல் இருக்க மிருதுவான மண்டை ஓடு,
இரையைக் குத்தி வெளியே கொண்டு வர லாயக்கான நீண்ட நுனியில் அலகுகள் கொண்ட நாக்கு
இப்படிப் பல.
“பறவைகள் பலவிதம்
அவை ஒவ்வொன்றும் ஒரு விதம்”
என்று கண்ணதாசன் பாடியது நினைவுக்கு வருகிறதா?
நம் நாட்டில் நான்கைந்து வகையான மரங்கொத்திகள் காணப் படுகின்றன. அவற்றில் சிலவற்றினைக் கீழே பாருங்கள்.
தங்க நிற முதுகு கொண்ட மரங்கொத்தி
தங்க நிற மார்பு கொண்ட மரங்கொத்தி
(http://nationalzoo.si.edu/ConservationAndScience/MigratoryBirds/Featured_photo/Images/Bigpic/gfwo5.jpg)
இமயத்து மரங்கொத்தி
இயற்கையின்
எழிலில் தான் எத்தனை இன்பம் அளிக்கிறாய் இறைவா !
(கருப்பு வெள்ளை
படங்கள் எடுத்தது கல்பட்டு நடராஜன்)
நடராஜன் கல்பட்டு
No comments:
Post a Comment