Wednesday 20 February, 2013


இயற்கையின் எழிலில் இறைவ்னைக் காண்போம் (22) சின்ன குக்குருவன்

சின்ன குக்குருவன் என்று ஒரு குருவி.  ஆங்கிலத்தில் இதை Coppersmith or Crimson-breasted barbet என்பர்.  விஞ்ஞான ரீதியாக இதற்களிக்கப் பட்ட பெயர் Meglaima haemacephala என்பதாகும்.


சின்னக் குக்குருவன்

சிட்டுக் குருவியின் பருமன் கொண்ட இந்தக் குருவியின் பிரதான நிறம் கரும் பச்சை.  முன் தலையிலும் மேல் மார்பிலும் இரத்தச் சிவப்பான சிறகுகளும், கழுத்திலும் கண்களுக்கு மேலு கீழும் வெள்ளை சிறகுகளும் இருக்கும்.  கீழ் மார்பு, வயிறு இவற்றில் சற்றே மஞ்சள் கலந்த பச்சை நிறம் மற்றும் வெள்ளை சிறகுகளில் நடு நடுவே கருப்பு சிறகுகளுமாக இருக்கும்.


பட்ட மரக் கிளையில் துளைத்து செய்யப் பட்ட கூடு
(http://en.wikipedia.org/wiki/Image:Coppersmith_Barbet_I_IMG_1813.jpg)

சின்ன குக்குருவன் தனது அலகினால் ஒரு பட்டடுப் போன மரக்கிளையில் சுமார் ஒன்றரை அங்குல விட்டமுள்ள துளை செய்து தன்  கூட்டினைத் தயார் செய்யும்.  ஒரு தடவை தயார் செய்த கூட்டினையே மீண்டும் மீண்டும் வருடா வருடம் உபயோகிக்கும், அந்தக் கிளையை யாரும் வெட்டாதிருந்தால்.

சின்னக் குக்குருவனுக்கு ஜியாமெட்ரி பாக்சிலிருந்து காம்பெஸை எடுத்து மரத்தில் வட்டம் போட்டுத் தருவது யார்?  இவ்வளவு அழகாக வட்ட வடிவில் துளை போடுகிறதே!  நம்மால் முடியுமா காம்பஸ் துணை இன்றி மரத்தில் இவ்வளவு அழகாக வட்டம் போட?

 பார்பெட் என்று இக்குருவிக்கு பெயர் வரக் காரணம் இதன் மேல் அலகின் அடிப்புறம் காணப் படும் பூனை மீசை போன்று சில ரோமங்கள் இருப்பதால்தான் (‘பார்ப் என்றால் ஆங்கிலத்தில் முள் என்று பொருள்).

ஆல், அரசு போன்ற மரங்களில் அதிகமாக வாழ்ந்தாலும் குக்குருவனை தோட்டங்களிலும் சாலைகளிலும் உள்ள பெரிய மரங்களிலும் காணலாம். 

தப்பு தப்பு.  காணலாம் என்று சொல்வதைவிட கேட்கலாம் என்று சொல்வதே சரியாகும்.  காரணங்கள் இரண்டு.  ஒன்று, இதன் நிறம் இலை கிளைகளோடு ஒன்றி விடுவது.  இரண்டு, இதன் குரல்.  ஒரு செப்புப் பாத்திரம் செய்யும் தொழிலாளி செப்புத் தகட்டினை சுத்தியால் தட்டும்போது எற்படுத்தும் சத்தம் போல டோங்க்... டோங்க்... டோங்க்... என்ற ஒலியினை எழுப்பும் சின்ன குக்குருவன், கத்தும் போது தனது தலையை நாலா புறமும் திருப்புகிறது.  அதனால் இது எழுப்பும் குரலும் பல திசையில் இருந்து வருவது போலத் தோன்றும்.  நாமும் குரல் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் இந்தக் குருவி இருக்கும் இடம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இதைத் தேடுவோம். 

ஆங்கிலத்தில் ‘Ventriloquist’  எனறு அழைக்கப் படுகிறார்களே அவர்கள் எப்படி தனது வாயோ அல்லது  தொண்டையோ சிறிதும் அசையாமல் சத்தம் எங்கிருந்தோ வருவது போன்று குரல் எழுப்புவார்களோ அது போலத்தான்  சின்ன குக்குருவனும் கத்தும்.  இந்தக் குருவியின் சிறப்பு அம்சமே இதுதான்.

இயற்கையின் எழிலில்தான் எத்தனை திகைப்பூட்டும் ரகசியங்களை வைத்திருக்கிறாய் இறைவா!
                                                                              
                                            நடராஜன் கல்பட்டு

                                           


Tuesday 19 February, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (21) கரிச்சான் குருவி

கரிச்சான் குருவி என்று ஒரு குருவி.  இதற்கு மாட்டுக்காரன், இரெட்டைவால், வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் இதனை  Black drongo அல்லது King crow என்றழைப்பார்கள்.

விஞ்ஞான ரீதியாக இதற்களிக்கப் பட்ட பெயர் ‘Decrurus macrocercus என்பதாகும்.

http://en.wikipedia.org/wiki/Image:Dicrurus_macrocercus.jpg


கரிச்சான் குருவியின் நிறம் பளபளவென மின்னும் கருப்பு நிறம். புறாவை விட சற்று சிறிதான உடல்.  நீளமான வால் சிறகுகள்.
அலகுகள் ஆரம்பிக்கும் இடத்தில் மீசை போன்ற ரோமங்கள்.  இந்த ரோமங்கள் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கும் போதே அவற்றைப் பிடிக்க உதவுகின்றன.

கரிச்சான் குருவிகள் கிராமப் புரங்களில் இடையன் ஆடு மாடுகளை மேய ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும்.  அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் கிளப்பிவிட அவை பறக்கும்போது, கரிச்சான் குருவி இறக்கைகளை விரித்தபடி வைத்துக் கொண்டு கிளைடர் விமானம் போல பறந்து சென்று பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு அதே மூச்சில் தான் இருந்த இடத்திற்கே வந்து சேரும் பூமரேங் என்னும் ஆயுதம் போல.

கரிச்சான் குருவியை மின் கம்பிகள், விளக்குக் கம்பங்கள் இவற்றின் மீதும் பார்க்கலாம்.  அவ்வப்போது சிறிது தூரம் பறந்து சென்று இருந்த இடத்திற்கே திரும்புவதைக் காண முடியும்.  இதுவும் அவை தன் உணவை அடையும் பொருட்டே.


கிராமப் புரங்களில் ஒரு பாட்டு,

வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனால்
கால் வீழ்ந்த கிழவியும்தான் குமரியாவாளே என்று.

இவ்வாறு  வழக்கில் வரக் காரணம் ஒருக்கால் எப்போதுமே வால் நீண்ட கருங்குருவி தான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க கடிகார முள் போன்று இடமிருந்து வலமாகவே பறக்குமோ?


சில பறவைகள் தங்களது சிறகுகளில் பேன் போன்ற சிறு பூச்சிகள் சேராமல் தடுக்க ஒரு உத்தியினைக் கையாளும்.  அவை எறும்புப் புற்றின்மீது சென்றமரும்.  அப்போது அவற்றின் மீது ஏறும் எறும்புகள் வெளியிடும் ஃபார்மிக் அமிலத்தில் பேன்கள் இறந்து விடுகின்றன. 

கரிச்சான் குருவி எறும்பு வைத்தியம் செய்து கொள்கிறது

என்ன சுலபமான பேன் நிவாரணி வைத்தியம்!  நீங்கள் இந்த வைத்தியத்தை செய்து பார்த்து விடாதீர்கள்.  எறும்புக் கடியைத் தாங்க முடியாது.

கரிச்சான் குருவிகளில் மற்றொரு வகை துடுப்பு வால் கரிச்சான் குருவி.  இதன் வால் நீண்டு துடுப்பு போன்று இருக்கும்  இதை ஆங்கிலத்தில் Racket-tailed Drongo என்று சொல்வார்கள்.


துடுப்பு வால் கரிச்சான் குருவி

கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே துளியும் கிடையாது.  இது தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டும்.  அந்தப் பறவைகளும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிப் பாராமல் அதி வேகமாகப் பறந்து செல்லும்.  இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான ஒன்று.  King crow என்ற பெயர் வரக் காரணம் இதுவே.

இயற்கையின் எழில் மூலம் இறைவன் நமக்கு அளிக்கும் இக் காட்சிகளில் தான் எத்தனை பாடங்கள் ! 

உருவத்தில் சிறியவனாக இருந்தாலும் உள்ளத்தில் உரம் இருந்தால் உன்னைவிட பலசாலியான எதிரியையும் ஓட ஓட உன்னால் விரட்ட முடியும் என்பதை நமக்கு இப்பறவையின்  மூலம் ஆண்டவன் உணர்த்துகிறாரோ!

ஒரு சொந்த அனுபவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எண்ணைக் கம்பெனிகளில் இருந்து லாரிகளை நிப்பியபின் சீல் செய்து அனுப்புவார்கள்.  சில லாரி ஓட்டுனர்கள் சாலை ஒரத்தில் லாரிகளை நிறுத்தி சீலைப் பிரித்து குழாயைத் திறந்து லாரியில் இருந்து எண்ணையைத் திருடுவார்கள்.  இரு முறை அவ்வாறு திருடிக் கொண்டிருந்த ஓட்டுனர்களை சம்பவம் நடக்கும் போதே பிடித்து அறைந்திருக்கிறேன்.  ஒரு முறை அவர் திருடிய டீசல் எண்ணையினாலேயே அவருக்கு அபிஷேகமும் செய்து இருக்கிறேன்.
 
நான் பிடித்த இருவருமே என்னை விட பலசாலிகள்.  திருடனை திருடும்போது பிடித்தால் அவன் பலமெல்லம் அப்போது எங்கோ பறந்து சென்று விடும் என்பது என் கணிப்பு.

நான் செய்த காரியத்தால் என் மனைவிக்கு பல நாட்கள் தூக்கம் போயிற்று, எந்த நிமிஷம் ஓட்டுனர்கள் வந்து என்னைக் கொன்று விடுவார்களோ என்ற பயத்தினால்.


நடராஜன் கல்பட்டு
 


Monday 18 February, 2013


இயற்கயின் எழிலில் இறைவனைக் காண்போம் (20) பொன்னு தொட்டான்

பஞ்சவர்ணக் கிளி பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள், பார்த்து இருப்பீர்கள்.  ஒன்பது வர்ணக் குருவி பார்த்திருக்கிறீர்களா?

பொன்னுத் தொட்டான் என்று ஒரு குருவி.  ஆங்கிலத்தில் இதன் பெயர் Pitta (Scientific name – Pitta brachyura).  ஹிந்தியில் இதன் பெயர் நவ்ரங் அதாவது ஒன்பது வர்ணம். 

தரையில் இரை தேடும் பொன்னுத் தொட்டான்
          (http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7d/Pitta_brachyura.jpg)
எண்ணிப் பார்த்தீர்களா ஒன்பது வர்ணங்களை?  வான வில்லின் ஏழு நிறங்களுடன் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்து ஒன்பது ஆகிறது.
                                                           
பொன்னுத் தொட்டானுக்கு தமிழ் நாட்டிலே இன்னும் நான்கு பெயர்கள் உள்ளன.  அவை ஆறுமணிக் குருவி, தோட்டக் கள்ளன், காசிக் கட்டிக் குருவி, கஞ்சால் குருவி என்பவை ஆகும்.

பொன்னுத் தொட்டான் தமிழ் நாட்டில் நம் தோட்டங்களுக்கு வருடா வருடம் குளிர் நாட்களில் வரும் ஒரு குருவி.  மற்ற நாட்களில் இது வட இந்தியாவுக்கும் மத்திய பிரதேசத்திற்கும் சென்று விடுகிறது. 


 இலைகளிடையே பொன்னுத் தொட்டான்
(http://www.kolkatabirds.com/indianpitta8kol.jpg) 

இது சுலபமாக நம் கண்களில் படுவதில்லை.  காரணங்கள் இரண்டு.  ஒன்று, இந்தப் பறவை சாதாரணமாக மற்ற பறவைகளைப் போல் உயரப் பறப்பதில்லை. இலைகள் அடர்ந்த                                                                                                                                    கிளைகள் இடயே கிளைக்குக் கிளை சென்று கொண்டிருக்கும்.    இரண்டு, இது இரை தேடும்போதோ  தரையிலேயே தத்தித்        தத்திச் சென்று இலை  சரகுகளுக்கு கீழே உள்ள புழு பூச்சிகளைத்தேடி உண்ணும்.       பொன்னுத் தொட்டான் அவசியம் வரும் போது சற்றே பறந்து தாழ உள்ள மரக் கிளைகளில் உட்காரும்.  இதன் வண்ணம் கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் தரையில் கிடக்கும் இலை சரகுகளுடன் ஒன்றி விடுவதால் இது நம் கண்களுக்குப் புலப் படுவதில்லை.

இறைவன் படைப்பான இயற்கையில்தான் எத்தனை விதங்கள்! எத்தனை வண்ணங்கள்!                 
                                                                                                                                                                               
                                            நடராஜன் கல்பட்டு
                                                                                                    

(பின் குறிப்பு: எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வருடா வருடம் ஒரு பொன்னுத் தட்டான் வந்து கொண்டிருந்தது.  என்ன காரணமோ இவ்வருடம் (2010) ஏப்ரல் மாதம் வட இந்தியாவுக்குப் பயணிக்காமல் தங்கி விட்டது.  சுட்டெரிக்கும் வெய்யில் தாங்காமல் ஒரு நாள் செத்து விழுந்து விட்டது.  இனி எங்களுக்கு வீட்டில் இருந்தபடியே பொன்னுத் தொட்டானைப் பார்க்கும் இன்பம் கிட்டாது.  வீட்டுத் தோட்டத்திலே பறவைகள் குடிக்க / குளிக்க ஒரு சிறிய நீர்த் தொட்டியை முன்னரே அமைத்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ?)



Saturday 9 February, 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (19) மீன் கொத்தி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (19) மீன் கொத்தி

தேனீத் தின்னிக்கு அடுத்த படியாக உண்ணும் உணவை வைத்தே பெயர் கொண்ட ஒரு பறவை மீன் கொத்தி.  நம் நாட்டில் அதிகமாகக் காணப் படும் மீன் கொத்திகள் மூன்று வகை.  அவை சாதாரண மீன் கொத்தி, வெள்ளை மார்பு கொண்ட மீன் கொத்தி மற்றும் திட்டுத் திட்டாக வெள்ளை கருப்பு நிறம் கொண்ட மீன் கொத்தி  (Common Kingfisher, White-breasted Kingfisher and the Pied Kingfisher).

சாதாரண மீன் கொத்தி (Common Kingfisher)
(http://en.wikipedia.org/wiki/Image:Common_Kingfisher_I_Picture_115.jpg)


(வெள்ளை மார்பு அல்லது தொண்டை கொண்ட மீன் கொத்தி (White breasted or throated Kingfisher)                                   (http://en.wikipedia.org/wiki/Image:White_throated_Kingfisher_I2-Haryana_IMG_9005.jpg)





கருப்பு வெள்ளை மீன் கொத்தி ( Pied Kingfisher )
(http://en.wikipedia.org/wiki/Image:Ceryle_rudis.jpg)
மீன் கொத்திகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது நீர் நிலைகள் அருகே உள்ள சரிவான மண் திட்டுகளில்.  சுமார் மூன்று முதல் ஆறடி நீளமுள்ள மூன்று / நான்கு அங்குல விட்டம் கொண்ட வளைகளைத் தோண்டி அதனுள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும்.  கிணறுகளின் சுவர்களில் வளைகளைத் தோண்டி அவற்றுள் கூடு அமைப்பதும் உண்டு.

மீன் கொத்திகள் மீன் பிடிப்பது பார்க்க ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி.

சாதாரண மீன் கொத்தியும், வெள்ளை மார்பு கொண்ட மீன் கொத்தியும் நீர் நிலைகள் அருகே சற்று உயரமான இடத்தில் அதாவது ஒரு கல்லின் மீதோ, செடியின் மீதோ அல்லது மின் கம்பிகள் மீதோ ( சுமார்  இரண்டடி முதல் இருபது அடி வரையான உயரத்தில் ) உட்கார்ந்து  கொண்டு தண்ணீரையே பார்த்துக் கொண்டு இருக்கும்.  திடீரெனத் தண்ணீருக்குள் பாய்ந்து வெளியே அடுத்த நொடியில் வாயில் ஒரு மீனைக் குறுக்கு வாட்டில் கவ்விக்கொண்டு வரும்.  பின் நேராக முதலில் உட்கார்ந்து கொண்டு இருந்த இடத்திற்குச் சென்றமர்ந்து சிறிய மீன்களை ஆகாசத்தில் தூக்கிப் போட்டோ அல்லது வாயில் வைத்தபடியே சிறிது சிறிதாகத் திருப்பியோ மீனின் தலை பாகம் முதலில் வாய்க்குள் செல்லுமாறு விழுங்கும்.

கருப்பு வெள்ளை மீன் கொத்திக்கு இரை தேடும் இடத்தருகே உட்கார இடம் தேவை இல்லை.  இவ்வகை மீன் கொத்திகள் நீர் நிலை களுக்கு மேலாகப் பறந்து கொண்டிருக்கும். 

கூட்டமாக மீன்கள் போவதைக் கண்ட உடன் ஒரே இடத்தில் நின்றபடி பறக்கும்.


ஒரே இடத்தில் நின்று கொண்டு பறந்திடும் மீன் கொத்தி
http://en.wikipedia.org/wiki/File:Pied_kingfisher_hovering_square.jpg

மீன் கூட்டம் நீரின் மேல் பரப்புக்கு நெருங்கும் போது திடீரென                                                         செங்குத்தாக நீருக்குள்  விழுந்து மீனைக் கொத்திக் கொண்டு மேலே வரும்.  பின் பறந்த படியே வாயில் உள்ள மீனைத்தூக்கிப் போட்டு தலை முதலில் வாயுள் போகும்படி விழுங்கும்.  இந்த வகை மீன் கொத்திகள் ஆறு, ஏரி, குளம் மட்டுமின்றி கடலிலும் மீன் பிடிக்கும்.  அதனால் தான் இவை நீர் நிலை அருகே உட்கார இடம் தேடுவதில்லை.  கடலில் உட்கார இடம் எங்கு கிடைக்கும்?

மூன்று வகை மீன் கொத்திகளுமே சிறிய மீன்களை அப்படியே விழுங்கிவிடும்.  மீன் பெரிதாக இருந்தால் ஒரு மரக்கிளையின் மீதோ அல்லது கல்லின் மீதோ அடித்துக் கொன்றபின் விழுங்கும்.

மீன் கொத்தியின் கண்கள் நீருக்கு வெளியேயும் நீருக்குள்ளேயும் துல்லியமாகப் பார்க்கும் திறன் கொண்டவை.


பறவைகள் உணவு தேடும் விதத்தில் கூட எத்தனை மாறுபட்ட   காட்சிகளை நமக்குக் காட்டுகிறான் இறைவன்காட்சிகளைக் காட்டுகிறானா ? அல்லது அந்த காட்சிகளே அவன் தானா ?

                                      நடராஜன் கல்பட்டு

                                         


                                                        

Friday 8 February, 2013


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (18) பட்டாணி உள்ளான்

ஆங்கிலத்தில் ப்ளோவர் என்று அழைக்கப் படும் ஒரு இனப் பறவைகள் உள்ளன.  இந்த இனத்தில் சுமார் நாற்பது உட்பிரிவுகள் உண்டு.  அவற்றில் ஒன்றுதான் பட்டாணி உள்ளான் என்றழைக்கப் படும் Little ringed Plover.

பட்டாணி உள்ளான்
(http://en.wikipedia.org/wiki/Image:Charadrius_dubius_4_(Marek_Szczepanek).jpg)

உச்சந்தலை, முதுகு, இறக்கை இவை பழுப்பு நிறத்திலும், மேல் கழுத்து, மார்பு, வயிறு இவை வெள்ளை நிறத்திலும் உள்ள ஒரு பறவை இது.  புறாவை விட சற்று சிறியது உருவத்தில்.  ஆனால் கால்கள் புறாவின் கால்களை விட சற்றே நீளமானது.  அடிக் கழுத்து, நெற்றி, முகத்தின் இரு பக்கங்கள் இவை கருமையான சிறகுகளால் கவரப் பட்டு இருக்கும்.  கண்களைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் தோலால் ஆன வட்டம் இருக்கும்.

பட்டாணி உள்ளான்கள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தஞ்சை மாவட்டம் கோடியயக்கரையில் காணப்படும் வலசை வரும் பல வகையான ஆழமற்ற நீரில் இரை தேடும் பறவைகள் (Waders) மற்றும் கடலோரப் பறவைகள் (Shore birds) இவற்றுடன் காணப் பட்டாலும் இவை நம் நாட்டிலேயே உள்ள ஆற்றுப் படுகைகளில் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும் ஒரு பறவை.

நெல்லூர் அருகே வட பெண்ணை ஆற்றுப்படுகையில் தன் முட்டைகளை அடைகாத்துக் கொண்டு இருக்கும் ஒரு பட்டாணி உள்ளானைக் கீழே பாருங்கள்.        

(நெல்லூர் அருகே வட பெண்ணை ஆற்றுப் படுகையில் பட்டாணி உள்ளான்)


உள்ளான்களைப் பற்றி உலா வரும் செய்தி ஒன்று உண்டு.  முதலைகள் பெரிய சிறிய மிருகங்களை மட்டுமின்றி பறவைகளையும் உண்ணும்.  ஆனால் உள்ளான்களை மட்டும் உண்பதில்லையாம்.  காரணம் உள்ளான்கள் முதலையின் பல் வைத்தியராம்.

(மைசூர் அருகே ரங்கன திட்டுவில் முதலை)

ஆற்றோரம் வாயைப் பிளந்து கொண்டு அசையாமல் படுத்து இருக்கும் முதலையின் வாய்க்குள் சர்வ சுதந்திரத்துடன் செல்லும் உள்ளான்கள் அங்கு பற்களிடையே சிக்கிக் கொண்டு அழுகி வரும் மாமிசத் துண்டுகளை பிடுங்கி எடுத்து உண்ணுமாம்.  இதனால் முதலைக்கு பல் சுத்தமாகி வியாதியோ வலியோ வருவது இல்லையாம்.  வயித்தியரை உண்ணலாமா? கூடாதல்லவா?

இந்த செய்தி நான் திரிக்கும் கதை அல்ல. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹிரோடோடஸ் என்ற புகழ்பெற்ற கிரேக்க நாட்டு சரித்திர ஆசிரியர் எகிப்திய உள்ளான்களைப் பற்றி எழுதிய குறிப்பு களிலிருந்து பரவிய ஒரு செய்தி.  இச்செய்தியினை பின் நாட்களில் சில பறவை அன்பர்களும் கண்டு தங்கள் குறிப்புகளில் எழுதியுள்ளனர். 


முதலையின் பல் வைத்தியர் என்று ஹிரடோடஸால் அழைக்கப் பட்ட எகிப்து நாட்டு  உள்ளான் (http://en.wikipedia.org/wiki/Image:Egyptian_Plover.jpg)
இயற்கையின் எழிலினைக் கூட்டும் பறவைகளில் தான் எத்தனை விதங்கள், எத்தனை அழகு இறைவா!

                                                                                               நடராஜன் கல்பட்டு

                                   (கருப்பு   வெள்ளை படம் எடுத்தது நடராஜன் கல்பட்டு)