Saturday, 1 June 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (31) சில வினோதப் பறவைகள் (1) பவர் பேர்ட் (Bower bird)

பறவைகள் ஒவ்வொன்றுமே கூர்ந்து கவனித்தால் வினோதம் ஆனவைதான்.  பின் ஏன் சில வினோதப் பறவைகள் என்று எழுத வேண்டும்?  காரணம் இருக்கிறது.  அவை நமது கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு வினோதமாக நடந்து கொள்கின்றன என்பதுதான் அந்தக் காரணம்.

ஆஸ்திரேலியாவிலும் ந்யூகினியிலும் காணப்படும் ஒரு பறவை பவர் பேர்ட் என்ற பறவை.

பவர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உள்ள பல பொருள்களில் ஒன்று நந்தவனங்களில் செடிகளாலோ, கொடிகளாலோ அமைக்கப் பட்டிருக்கும் அலங்கார வளைவு என்பதாகும்.


அலங்கார வளைவு (Bower)

பவர் பேர்ட் களில் சுமார் பதினெட்டு வகைகள் உள்ளனவாம். இந்தப் பறவைகளின் விசேஷம் என்ன வென்றால் அவற்றின் ஆண் பறவைகள் தன் துணையை ஈர்க்கத் தயாரிககும் அலங்கார வளைவும் அதன் தரைக்கு அழகு சேர்க்க அது சேர்க்கும் பொருட்களும்.

வருடத்தில் பெரும் பகுதி தனித்தே வாழும் ஆண் பறவைகள் இனப் பெருக்க காலம் வந்த உடன் காட்டில் தகுந்த ஒரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு நாணல் போன்ற குச்சிகளை சேகரித்து அலங்கார வளைவினைக் கட்டுகிறது. பின் நீலம் அல்லது பச்சை நிறப் பழச் சாற்றினை தன் எச்சிலோடு கலந்து மரப் பட்டைத் துண்டு ஒன்றினால் கட்டிய வளைவிற்கு சாயம் பூசுகிறது.

காதலியின் கவனம் ஈர்க்க வளைவு கட்டி விட்டால் மட்டும் போதுமா?  அங்கு அழகிய பொருட்கள் வேண்டாம்?  வண்ண வண்ண மலர்கள், சிப்பிகள், மனிதர்கள் குப்பையில் தூக்கி எறியும் வண்ண மிகு கண்ணாடித் துண்டுகள், பிளாஸ்டிக் மூடிகள் போன்றவற்றைக் கொண்டுவந்து வளைவிற்குள்ளும் அதனைச் சுற்றிலுமும் பரப்பி வைக்கிறது.


அலங்கார வளைவின் கட்டுமானப் பொருள் சேகரம்


வளைவும் மேடையும்   
கண்கவர் குப்பையை யார் சேர்க்கிறாரோ  அவரே என் கணவர் !!!
மேடையும் அலங்கார வளைவும் தயாரானபின் ஆண்பறவை தன் குரல் எழுப்பிப் பெண் பறவையை அழைக்கிறது.  பெண் வந்து அவற்றைப் பார்க்கும் போது ஆசையும் வெட்கமும் உடலில் கூட ஆண் பறவை பலவிதமான உடல் அசைவுகளைக் காட்டி (சாஷ்டாங்க நமஸ்காரம் உட்பட) பெண்ணைக் கவர முயற்சி செய்கிறது.  மனங்கள் இசைந்தால் மணம்.  பின் பெண் பறவை கூடு கட்டி முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கிறது.

பவர் பேர்ட்களில் சேடின் பவர் பேர்ட் என்னும் பறவை நம் நாடில் உள்ள குயில் போன்ற வண்ணமும் தோற்றமும் கொண்டது. 





ஆண் பறவை மின்னும் பச்சை கலந்த கரு நீல வண்ணம் கொண்டது.  குயிலின் கண்கள் சிவப்பாக இருக்கும்.  ஆனால் பவர் பேர்டின் கரு விழியினைச் சுற்றி ஒரு நீலக் கோடு, கரு விழியிலே கரிய பாப்பாவைச் சுற்றி பச்சை கலந்த பழுப்பு நிறம் காணலாம்.  பெண் பறவை பெண் குயில போன்றே புள்ளிகள் கொண்ட பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.  பெண்ணின் விழிகள் நீல நிறத்தில் இருக்கும்.





அழகுப் பொருட்களைச் சேர்ப்பதில் ஒவ்வொரு வகை பவர் பேர்டுக்கும் வித்தியாசம் உண்டு.

சேடின் பவர் பேர்ட் நீல நிறப்பொருட்களை சேர்க்கிறது. 

ரீஜென்ட் பவர் பேர்ட் என்னும் பறவை மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பொருட்களைச் சேர்க்கிறது.

கிரேட் பவர் பேர்ட் வெள்ளை நிறப் பொருட்களைச் சேர்க்கிறது.

கோல்டன் பவர் பேர்ட் வெள்ளை அல்லது மஞ்சள் நிற மலர்களால் தனது அலங்கார வளைவினை அழகுறச் செய்கிறது.


Golden Bowerbird male (top) and female

பவர் பேர்ட் ஒரு வினோதப் பறவைதானே?

இறைவன் எப்படியெல்லாம் நமக்குக் காட்சியளிக்கிறார்!


நடராஜன் கல்பட்டு





1 comment:

  1. மிகவும் வினோதமான பறவை தான்!
    மனிதர்கள் தான் பெண்களை கவர பல செயல்களை செய்யவேண்டுமென்றால், பறவைகளுமா?

    ராம்.

    ReplyDelete