Saturday, 29 June 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் இசை பாடும் பறவைகள் (3) மாம்பழத்தான்

மாம்பழத்தான் என்று ஒரு பறவை.  மாந்தோப்புகளில் அதிகம் காணப்படுவதால் இந்தப் பெயரா அல்லது மாம்பழத்தின் நிறத்தினை இதன் நிறம் சற்று ஒத்திருப்பதால் இந்தப் பெயரா என்பது தெரியாது.  சில கிராம வாசிகள் இதனை கொய்யாப் பழத்தான் என்றும் அழைக்கின்றனர்.  ஆங்கிலத்தில் இதன் பெயர் ட்ரீ பை (Tree pie).

இப்பறவைக்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்டுள்ள பெயர் டென்றொசிட்டா வேகபண்டா (Dendrocitta vagabunda).  இதன் பொருள் மரங்கள் இடையே அலைபவன் (Wanderer amongst trees) என்பதாகும்.



சாதாரணமாக மாம்பழத்தானை வேறு பல பறவைகளைப் போல தரையில் கணமுடியாது.  இவை எப்போதுமே அடர்ந்த இலைகள் இடையே சஞ்சரிக்கும்.

மாம்பழத்தானின் உணவு பழங்கள், மரங்களில் காணப்படும் புழு பூச்சிகள்.  இவை போதாதென்று அவ்வப்போது மற்ற பல பறவைகளின் கூடுகளிலிருந்து முட்டை, குஞ்சு இவற்றையும் திருடித் தின்னும்.  காடுகளில் புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் கொன்று போட்டிருக்கும் ஆடு, மான் இவற்றின் சடலங்களை முதலில் சென்றடையும் பறவை மாம்பழத்தான் தான் என்பர் சில பறவை வல்லுனர்கள்..

குணம் எப்படியோ. மாம்பழத்தானின் குரல் மிக விசேஷமானது.  இந்தப் பறவை பல விதமான ஒலிகளை எழுப்ப வல்லது.  அவற்றில் சில காதுக்கு மிக இனிமையானதாகவும், சில சாதாரணமானதாகவும் சில நாராசமானதாகவும் இருக்கும்.

இனிமையான குரலில் எழுப்பும் ஒலி, கோகிலா... கோகிலா... என்ற தமிழ் வார்த்தையினையோ அல்லது பாப் ஓ லிங்க்... பாப் ஓ லிங்க்... என்ற ஆங்கில வார்த்தையினையோ புல்லாங்குழலில் வாசித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.  அதன் இனிமை அதைக் கேட்டு ரசித்தவர்களுக்குத்தான் தெரியும்.

நாராசமான ஒலி எழுப்பும்போதோ இரண்டு மூன்று பறவைகள் சண்டை போடுகின்றனவோ என்ற சந்தேகம் நமக்கு எழும்.

மாம்பழத்தான் பறப்பதைப் பார்க்க சற்று வினோதமாக இருக்கும்.  இது சில வினாடிகள் இறக்கையை அடித்துக் கொண்டு நேர் கோட்டிலும், பின்னர் சிறிது தூரம் இறக்கையை அடிக்காமல் விரித்து வைத்துக் கொண்டு அதே நேர் பாதையிலும் பறக்கும்.  திடீரென சற்று தூரம் கீழ் நோக்கிச் சென்று பின் இறக்கைகளை அடித்துக்க் கொண்டு பழய நேர்கோட்டுப் பாதையை அடைந்து முன் போலவே பறக்கும்.  இது ஒரு அழகிய காட்சி.

நம் நாட்டில் கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசத்திலும், தமிழ் நாட்டில் டாப் ஸ்லிப் மற்றும் சிங்கம்பட்டி என்னும் இடங்களிலும் வெள்ளை மார்பு கொண்ட ஒரு மாம்பழத்தான் உண்டு.  இப்பறவையின் பெயர் தெற்கத்திய ட்ரீ பை (Southern Tree pie.  விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர் Dendrocitta leukogastra).  இதன் மார்பு மற்றும் தலையும் கழுத்தின் பின்புறமும் வெள்ளையாக இருக்கும் கீழே உள்ள படத்தில் உள்ளபடி.  

தமிழ் நாட்டில் இதன் பெயர் நீளவால் குருவி. 




மாம்பழத்தான் உருவத்தில் குயில் போன்று இருந்தாலும் இது குயில் போல் அல்லாமல் தானே கூடு கட்டி, முட்டை இட்டு, அடை காத்து, குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்க்கும்.

இயற்கையின் எழில் மூலம் நமக்கு இறைவன் தரும் இன்பங்கள்   அவனைக் கட்டாயம் நம் முன் நிறுத்தும்.


                                            நடராஜன் கல்பட்டு 

1 comment:

  1. Vagabond என்று செரியாக தான் பெயர் வைத்திருக்கிறார்கள்..

    ராம்

    ReplyDelete