Thursday, 16 May 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (30) இசை பாடும் பறவைகள் (1) புல்புல்


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (30) இசை பாடும் பறவைகள்  (1) புல்புல்

பாடும் பறவைகள் என்றவுடன் நம் அனைவரது மனக் கண்களிலும் தோன்றுவது குயில்தான்.  ஆனால் குயிலைத் தவிற தன் குரல் இனிமையால் நம்மை மயக்க வல்ல பறவைகள் பல உள்ளன.  அவற்றில் நம் நாட்டில் காணப்படும் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாமா?

ஆங்கிலத்திலே அழகான குரல் படைத்த குருவி ஒன்றினை நைடிங்கேல் (Nightingale) என்பார்கள்.  நைடிங்கேல் என்றே பொருள் படும் ஒரு ஹிந்தி வார்த்தை புல்புல் (Bulbul) என்பதாகும்.
புல்புல் என்ற பெயர் கொண்ட பறவைகளில் ஏழெட்டு விதப் பறவைகள் நம் நாட்டில் உள்ளன.  இவை எல்லாமே நல்ல குரல் வளம் படைத்தவை.  தன் எழிலாலும் குரலாலும் நம்மை மயக்க வல்லவை.  அவைகளில் சில இதோ.

சாதாரண புல்புல் (Common of Red vented bulbul) :



கிராமப் புறங்களில் இந்தக் குருவியை கொண்டைக் குருவி என்றழைப்பார்கள்.  சாதாரண புல்புலின் இசையில் பாட்டு என ஒன்று இல்லா விட்டாலும் அதன் இன்பம் பொங்கும் குரல் நம்மைக் கவரும்.

புல்புலின் உணவு பழங்கள், தேன் மற்றும் சிறு புழு பூச்சிகள் ஆகும்.

புல்புலின் கூடு சிறிய கிண்ண வடிவில் மெல்லிய குச்சிகள், காய்ந்த வேர்கள், புல் இவற்றைக் கொண்டு அதிக உயரமற்ற கிளைகளில் கட்டப் பட்டிருக்கும்.  புல்புல் இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்.  ஆறு ஏழு நாட்கள் ஆன குஞ்சுகளை எடுத்து நாம் வளர்க்க முடியும்.  அவ்வாறு வளர்க்கப் பட்ட குஞ்சுகளை நாம் சுதந்திரமாகப் பறக்க விட்டு விட்டாலும் நாம் கூப்பிடும்போது அவை நம்மிடம் வந்து நம் மீது அமர்ந்து கொண்டு நாம் கொடுக்கும் பழங்களை உண்ணும்.

சிவப்பு மீசை கொண்டைக் குருவி (Red whiskered bulbul).
உருவத்திலும் அளவிலும் சாதாரண புல்புல் போன்றே இருக்கும்.

 இப்பறவையின் கண்களின் பின் புறம் சிவப்பு நிறத்தில் மீசை போன்று  மெல்லிய சிறகுகள் இருக்கும்.



தலையில் கொண்டை போன்ற சிறகுகளும் உண்டு.
சாதாரண புல்புலைப் போன்றே சிவப்பு மீசைக் கொண்டைக் குருவியின் குஞ்சுகளையும் நாம் செல்லக் குட்டிகளாக வளர்க்க முடியும்.  இதன் இசை நம் காதுகளுக்கு மிக மிக ரம்யமாக இருக்கும்.




பச்சை புல்புல் (Green bulbul or Chloropsis):



அடர்ந்த இலைகள் கொண்ட மரங்களில் வாழும் பச்சை புல்புலைப் பார்பது கடினம்.  கேட்பது சுலபம். காரணங்கள் இரண்டு.  முதலாவது இலைகளோடு ஒன்றிப் போகும் இதன் நிறம். மற்றொன்று இந்தப்பறவை சுமார் எட்டு  வெவ்வேறு விதமான பறவைகளைப் போன்று குரல் எழுப்ப வல்லது.

இமயத்து புல்புல் அல்லது வெள்ளைக் கன்ன புல்புல் (White cheeked bulbul) :

சாதாரண புல்புலைப் போன்ற இதன் கன்னங்களில் வெள்ளை நிறத் திட்டு காணப்படும்.  இது சமவெளிகளில் காணப் படுவதில்லை.  சுமார் 3000 அடிகள் முதல் 9000 அடிகள் வரையிலான பிரதேசங்களான ஊட்டி, குளு மணாலி, காஷ்மீர் போன்ற இடங்களில் இவை வாழ்கின்றன.

(http://en.wikipedia.org/wiki/Image:Himalayan_Bulbul_I2_IMG_3990.jpg)

தனது இனிய குரலினாலும், பயமின்றி மக்களிடையே உலவும் பழக்கத்தினாலும் இப் பறவைகள் கஷ்மீர மக்கள் மனதைக் கவர்ந்து அவர்களது கவிதைகளிலும் பாடல்களிலும் இடம் பிடித்துள்ளனவாம்.

இயற்கையின் எழிலில் இசையினால் நம் மனதைக் குளிர  வைக்கும் இப் பறவைகள் நம்மிடையே இருந்து மறையாமல் இருக்க நம்மாலானவற்றைச் செய்வோமாகில் இவற்றைப் படைத்த இறைவனை நாம் நிச்சயம் காண்போம்.

                                            நடராஜன் கல்பட்டு
                                   

2 comments:

  1. வழக்கம் போல சுவையான தகவல்கள் அடங்கிய பதிவு. கொண்டைக்குருவி என்ற பெயர் சரியானதுதானா என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழில் சின்னான் என்று ரத்தினம் அவர்களின் புத்தகம் குறிப்பிட்டிருந்தது. இனி கொண்டைக்குருவி என்றும் குறிப்பிடுவேன்.

    என்னுடைய வீட்டில் இந்தக்கோடையில் தண்ணீர் பாத்திரங்களை வைத்துள்ளோம். அதில் வழக்கமாக குளிக்க/குடிக்க வரும் பறவைகளில் இந்தக் கொண்டைக்குருவி இணையும் உண்டு. அதனால் பல அழகான படங்கள் எனக்கு கிடைக்கின்றன.
    உங்கள் பார்வைக்கு சில.

    அடுத்தமுறை கொண்டைக்குருவி பற்றிய என் பதிவில் இந்தப் பக்கத்துக்கான சுட்டியையும் கொடுப்பேன். நன்றி.
    http://lensingwild.blogspot.in/2013/05/turn-deaf-ear.html

    http://lensingnature.blogspot.in/2013/04/blog-post_28.html


    ReplyDelete
  2. அழகான பறவைகள். இதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பச்சை புல்புல் Leaf Bird என்று நினைத்தேன்.. இரண்டும் ஒன்று தானா?

    Ram

    ReplyDelete