Saturday, 9 February 2013

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (19) மீன் கொத்தி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (19) மீன் கொத்தி

தேனீத் தின்னிக்கு அடுத்த படியாக உண்ணும் உணவை வைத்தே பெயர் கொண்ட ஒரு பறவை மீன் கொத்தி.  நம் நாட்டில் அதிகமாகக் காணப் படும் மீன் கொத்திகள் மூன்று வகை.  அவை சாதாரண மீன் கொத்தி, வெள்ளை மார்பு கொண்ட மீன் கொத்தி மற்றும் திட்டுத் திட்டாக வெள்ளை கருப்பு நிறம் கொண்ட மீன் கொத்தி  (Common Kingfisher, White-breasted Kingfisher and the Pied Kingfisher).

சாதாரண மீன் கொத்தி (Common Kingfisher)
(http://en.wikipedia.org/wiki/Image:Common_Kingfisher_I_Picture_115.jpg)


(வெள்ளை மார்பு அல்லது தொண்டை கொண்ட மீன் கொத்தி (White breasted or throated Kingfisher)                                   (http://en.wikipedia.org/wiki/Image:White_throated_Kingfisher_I2-Haryana_IMG_9005.jpg)





கருப்பு வெள்ளை மீன் கொத்தி ( Pied Kingfisher )
(http://en.wikipedia.org/wiki/Image:Ceryle_rudis.jpg)
மீன் கொத்திகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது நீர் நிலைகள் அருகே உள்ள சரிவான மண் திட்டுகளில்.  சுமார் மூன்று முதல் ஆறடி நீளமுள்ள மூன்று / நான்கு அங்குல விட்டம் கொண்ட வளைகளைத் தோண்டி அதனுள் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும்.  கிணறுகளின் சுவர்களில் வளைகளைத் தோண்டி அவற்றுள் கூடு அமைப்பதும் உண்டு.

மீன் கொத்திகள் மீன் பிடிப்பது பார்க்க ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி.

சாதாரண மீன் கொத்தியும், வெள்ளை மார்பு கொண்ட மீன் கொத்தியும் நீர் நிலைகள் அருகே சற்று உயரமான இடத்தில் அதாவது ஒரு கல்லின் மீதோ, செடியின் மீதோ அல்லது மின் கம்பிகள் மீதோ ( சுமார்  இரண்டடி முதல் இருபது அடி வரையான உயரத்தில் ) உட்கார்ந்து  கொண்டு தண்ணீரையே பார்த்துக் கொண்டு இருக்கும்.  திடீரெனத் தண்ணீருக்குள் பாய்ந்து வெளியே அடுத்த நொடியில் வாயில் ஒரு மீனைக் குறுக்கு வாட்டில் கவ்விக்கொண்டு வரும்.  பின் நேராக முதலில் உட்கார்ந்து கொண்டு இருந்த இடத்திற்குச் சென்றமர்ந்து சிறிய மீன்களை ஆகாசத்தில் தூக்கிப் போட்டோ அல்லது வாயில் வைத்தபடியே சிறிது சிறிதாகத் திருப்பியோ மீனின் தலை பாகம் முதலில் வாய்க்குள் செல்லுமாறு விழுங்கும்.

கருப்பு வெள்ளை மீன் கொத்திக்கு இரை தேடும் இடத்தருகே உட்கார இடம் தேவை இல்லை.  இவ்வகை மீன் கொத்திகள் நீர் நிலை களுக்கு மேலாகப் பறந்து கொண்டிருக்கும். 

கூட்டமாக மீன்கள் போவதைக் கண்ட உடன் ஒரே இடத்தில் நின்றபடி பறக்கும்.


ஒரே இடத்தில் நின்று கொண்டு பறந்திடும் மீன் கொத்தி
http://en.wikipedia.org/wiki/File:Pied_kingfisher_hovering_square.jpg

மீன் கூட்டம் நீரின் மேல் பரப்புக்கு நெருங்கும் போது திடீரென                                                         செங்குத்தாக நீருக்குள்  விழுந்து மீனைக் கொத்திக் கொண்டு மேலே வரும்.  பின் பறந்த படியே வாயில் உள்ள மீனைத்தூக்கிப் போட்டு தலை முதலில் வாயுள் போகும்படி விழுங்கும்.  இந்த வகை மீன் கொத்திகள் ஆறு, ஏரி, குளம் மட்டுமின்றி கடலிலும் மீன் பிடிக்கும்.  அதனால் தான் இவை நீர் நிலை அருகே உட்கார இடம் தேடுவதில்லை.  கடலில் உட்கார இடம் எங்கு கிடைக்கும்?

மூன்று வகை மீன் கொத்திகளுமே சிறிய மீன்களை அப்படியே விழுங்கிவிடும்.  மீன் பெரிதாக இருந்தால் ஒரு மரக்கிளையின் மீதோ அல்லது கல்லின் மீதோ அடித்துக் கொன்றபின் விழுங்கும்.

மீன் கொத்தியின் கண்கள் நீருக்கு வெளியேயும் நீருக்குள்ளேயும் துல்லியமாகப் பார்க்கும் திறன் கொண்டவை.


பறவைகள் உணவு தேடும் விதத்தில் கூட எத்தனை மாறுபட்ட   காட்சிகளை நமக்குக் காட்டுகிறான் இறைவன்காட்சிகளைக் காட்டுகிறானா ? அல்லது அந்த காட்சிகளே அவன் தானா ?

                                      நடராஜன் கல்பட்டு

                                         


                                                        

1 comment:

  1. வழக்கம்போல அருமையான புகைப்படங்கள்!

    கருப்பு வெள்ளை மீன்கொத்தியின் வேட்டையை நானும் பார்த்து வியந்ததுண்டு.


    ராம்

    ReplyDelete